பெண்மை போற்றுதும்

"பூக்களிலே நானுமொரு பூவாகப் பிறப்பெடுத்தேன்" - மேத்தாவைத் துணைக்கழைத்து , துயில் கலைக்கிறாள் ஒருத்தி.

"ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா" - கண்ணதாசன் வரிகள் கொண்டு கவனம் ஈர்க்கிறாள் இன்னொருத்தி.

"எழுதுகிறேன் ஒரு கடிதம்" - வெண்ணிலா காந்தியின் சொற்களில் கண்ணீரால் நனைக்கிறாள் மற்றொருத்தி.

"சந்திப் பிழை போன்ற சந்ததிப் பிழை நாங்கள்" - நா காமராசரின் கவிதையில் மனம் கரைக்கிறாள் இன்னுமொருத்தி.

நாபிக் கொடி நறுக்கப்பட்டு, மார் சேர்ந்த கணமிருந்தே, மையிட்டுப் பொட்டிட்டு, வண்ணம் குலையாமல், வடிவம் தடிக்காமல் வளர்க்கப்பட்டு, " எங்கள் குலம் மங்காமல் எதிர் குலத்தார் ஏசாமல்" என்று தால் ஆட்டி, வீசி ஆட்டும் தூளிக் கயிற்றில் இறுக்கப்பட்ட கனவுகள் தளர்த்தப்படாமலே வளர்க்கப்படுகிறாள். மலரினும் மெல்லியள், குளிர் நிலவு, கோடை தென்றல் போன்ற உவமைகளாலும் உவமேயங்களாலும் கிறங்கடிக்கப்படுகிறாள். இந்த விதமான ஒப்புமைகள் வெற்றுத் தாள்களை நிரப்புவதற்காக கையாளப்பட்ட ஆயுதங்கள் என்பதை உணர அவள் முற்படவேயில்லை. எந்தவொரு ஒப்புமைகளும் கவிதாயினிகளால் கையாளப்படவில்லை என்பது வெள்ளிடை மலை ரகசியம்.

தந்தையின் தாயாகப் பார்க்கப்பட்டு, பாலும் தெளிதேனும், பாகும் பருப்புமாக ஊட்டி ஊட்டி வளர்க்க, சிறுமி செல்வியாகிறாள். பதின்மங்களின் தொடக்கத்தில், எதிர்பார்ப்பின் வாசலாகிறாள். இருபதுகளின் இறுதியில், அவளைத் தூக்கிச் செல்ல குதிரையில் வராத ராஜகுமாரனால் முதிர்ந்தவள் என்று முத்திரை குத்தப்படுகிறாள்.

கல்லின் அடியில் அகப்பட்ட புல்லாக, தொட்டாற் சுருங்கியாகவே வாழ்வைத் தொடரப் பழக்கப்படுகிறாள்.

தேங்கி நிற்கும் கனவுகளில் ஏங்கி நிற்கும் நிலையளித்த ராஜகுமாரன்களுக்கு, இரு மனம் ஒருமித்து "கலத்தலே" திருமணம் என்பதையும் மற்ற எவையாயினும் இழத்தலே என்பதையும் யார் சாற்றுவது?....

அன்னப் பட்சி, ஆவாரம்பூ, இருவாச்சி, ஈச்சம்பழம் என்று தாலாட்டி சீராட்டி வளர்க்கப்பட்டு, தகுந்ததோர் நேரம் பார்த்து, இணையின் கரங்களில் பிணைக்கப்பட்டு, துணை சேர்க்கப்படுகிறாள். "முதல்" என்பது எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரியதுதானே.... திளைத்திருந்த பொழுதுகள், அவளுள் எதையும் விதைத்திருக்கவில்லை. வெட்கச் சிரிப்பில் விரிந்திருக்கும் பூக்களை, வீசும் புயல் காற்று புரட்டிப் போட, காய்ப்பதே இல்லையே.... எங்கிருந்து கனியாக?....

மலர்கின்ற பூக்கள் அனைத்தையும் வாசனைத் திரவியத்திற்குப் பயன்படுத்த முடிவதில்லை என்பதற்காக கூந்தலில் சூடாமலா இருக்கிறோம்?

உருண்டோடும் காலங்கள் இருண்மையை வழங்கிவிட்டு வெளிச்சத்தை வேரறுக்கின்றன.

"தாலிக்குப் பொன்னெடுத்த தட்டானும் தான் குருடோ" என்று வார்த்தைகளில் விளையாடி, போர்க்கால நடவடிக்கைகளாய் பெண்ணின் அடையாளங்களை அடையாளமே இல்லாமல் அழித்துவிட்டு, "ஐம்பொறி ஆட்சி கொள்" என தனித்து விடப்படும் அவளின் 'மனம்' அத்தனைக்கும் ஆசைப்பட, நடுவில் வந்து சேர்ந்த துணைக் காலால் துவண்டு போகிறது. அங்கே வழிந்தோடும் அவளின் ரணங்கள் கதறுவதைக் கேட்பதற்கு செவிகளில்லை.

அவள் இழந்தது எதுவாக இருந்தாலும் அது அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. சுற்றும் அவளின் விழிச்சுடர்களில் திரிகள் உள் இழுக்கப்படுகின்றன. நிரம்பி வழியும் அவளின் அறிவொளிக்கு அணை கட்டப்படுகிறது.

வண்ணங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை?....

வடிவாய் உருவாகி, நிறங்களால் நெய்யப்பட்ட அவளின் எல்லாவற்றிலும் வெண்மை சாயம் விருப்பமின்றி ஏற்றப்படுகிறது.

உடல் நிறைந்த அணுக்களும் அணுக்கமாக இல்லாத அவளின் பொழுதுகள் முறுக்கியபடியே முனகிக் கிடக்கின்றன. வெப்பம் தணிக்கும் விருந்தாகப் பார்க்கப்படும் பெண்மைக்குள்ளும் 'பசி' என்ற உணர்வு விரவிக் கிடக்கும் என்பதே ஏற்றுக் கொள்ள இயலா விடயமாகிப் போகிறது.

உள் மருகும் விஷயங்களைக் கக்கி விடாதபடி அவளின் கண்டங்கள் இறுக்கப்படுகின்றன. மூச்சுத் திணறி, விழி பிதுங்கி நிற்கும் அவளின் உடல் கீறிப் பிடித்தால், கொப்பளிக்கும் குருதி, உங்களுக்கும் எனக்கும் சூடாகவும், அவளுக்கு சில்லிட்டுமா கொட்டும்?

அவளுள்ளும், " தூதூவள எலை அரைச்சு தொண்டையிலதான் நனைச்சு மாமன் கூடப் பேச வேணும் நாள் கணக்கா" என்ற நிறைவேறாத ஆசை அவன் உயிர் நழுவிப் போன கணத்திலிருந்து கனன்று கொண்டேதான்....

மலருக்கு ஒப்புமை கூறி, மனதினைப் போர்த்தி வைத்து, சொல் என்ற முள் கொண்டு கொய்யப்படுகிறது அவள் முன் நின்று நடத்தும் சுபகாரியங்களில் அவளின் சிறுநகை....

அந்த இளநகை, சிறுநகை, புன்னகை, குறுநகைகளையாவது அவளின் அணிகலன்களாய் அணியக் கொடுங்கள்.

உதிராத சிறகுகளோடு பறக்காதிருக்கப் பிரயத்தனப்படுகிறாள். நனைந்த அவளின் சிறகுகளில் கண்ணீரின் வாசம். மறையாத மணத்தோடும் காயாத ஈரத்தோடும் கனத்திருக்கும் இறகுகள் கருணையின்றிப் பிடுங்கப்பட, அரற்றாமல் நின்றிருக்கும் அவளுக்கு ஈரல்குலை சரியும் அளவு சமமான வலி சன்மானம்.

கூட்டமாகக் கொண்டாடி, களிப்பில் திளைத்திருக்கும் தன் அகவை ஒத்த கூட்டத்தில் தனித்திருக்கும் நிலைமை அவள் வேண்டிப் பெற்ற வரமல்லவே?.....

மாலை இழந்து நின்றாலும் மகாலட்சுமி மனம் மரணிக்கவில்லையே....

வயது என்பது எண் மட்டுமே. வட்டம் போட்டு வாழ வற்புறுத்த வேண்டாம்.

தோளில் சுமக்கும் குழந்தையின் முதுகு தடவியபடி அவள் நடக்க, "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" பாடல் காற்றில் தவழ்கிறது....

எல்லாம் நிறைந்த அவளை, ஏதுமற்றவளாக நிற்க வைத்து ஓட விடும் எதுவோ ஒன்று அவளைத் தோற்கடிப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கையில், அவள் ஜெயித்துக் கொண்டேதான் இருக்கிறாள்.

'நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே.....' என்ற பாடலை வாய் முணுமுணுக்க, பிறவி வேண்டாம் என்று அவள் நெஞ்சம் செய்யும் பூசனையின் ஒலி யாருக்காவது கேட்கிறதா?....

திருவாய் கருவாகி நங்கையாய் உருமாறும் திரிபு இயற்கை செய்த பிழை.

அவளா? அவனா?, மானா? யானையா?.... கடவுள் செய்த குற்றத்துக்கு அவர்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

வேயுறு தோளி பங்கனை, அர்த்த நாரி ஈஸ்வரனை போற்றும் இதழ்கள் அவர்களை எள்ளி நகையாட வேண்டாமே....

மண்ணுக்கு மரம் மட்டுமல்ல, மக்களும் என்றும் பாரமில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Maadhavan_KS&oldid=3604495" இலிருந்து மீள்விக்கப்பட்டது