Mangayarkkarasi
மன்னன் வாழ்த்திய வள்ளல்
கொடை பற்றிய செய்திகளை சங்க இலக்கியத்தில் அதிகம் காணலாம். மன்னர்களை, அவர்தம் கொடைத்திறத்தைப் பாராட்டிப் புலவர்கள் பாடியுள்ளனர்.
மன்னன் ஒரு வள்ளலை வாழ்த்திப்பாடிய பாடல் நம்மை வியப்படையச் செய்கிறது. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், சிறுகுடிகிழான் பண்ணன் என்ற வள்ளலைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்.என்னுடைய வாழ்நாளையும் பண்ணன் பெற்று வாழ்வானாக என்ற வாழ்த்துடன் பாடல் தொடங்குகிறது. பரிசில் வேண்டிச் செல்லும் பாணன் பரிசில் பெற்று வரும் பாணனிடம் வினவுவதாகப் பாடல் அமைந்துள்ளது.
பழமரத்தை நாடி வந்து உண்ணும் பறவைகளின் இனிய ஒலிபோல உண்போரின் ஓசை கேட்கிறது. கையில் சோற்று உருண்டையுடன் சிறுவர்களின் வரிசையையும் காண்கிறோம். கண்டாலும் மீண்டும் மீண்டும் வினவுகிறோம். பசிப்பிணி மருத்துவன் பண்ணன் இல்லம் அண்மையில் உள்ளதா சேய்மையில் உள்ளதா? சொல்லுங்கள்.
”யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்கிவன் கடும்பினது இடும்பை
-----------------------------------------------------
மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே”
------புறநானூறு-173
என்று பண்ணனைப் பசிப்பிணி மருத்துவனாகப் புகழ்ந்து கூறியிருக்கிறான் கிள்ளிவளவன்.
கிள்ளிவளவன் சிறப்பை இடைக்காடனார் என்னும் சங்கப்புலவரின் பாடலில் இருந்து நாம் அறியலாம். அளவில்லாத கொடைச்சிறப்பை உடையவன். அவன் படையில் உள்ள யானைகள் மலையைப் போன்றிருக்கும். வீரர்கள் எழுப்பும் ஒலி கடலின் பேரோசையைப் போன்றிருக்கும். வீரர்களின் கையில் இருக்கும் வேல் மின்னலைப்போன்று ஒளி வீசும், அத்தகைய சிறந்த படைகளை உடையவன் கிள்ளிவளவன். வேந்தர்கள் தலைநடுங்கும் வலிமை உடையவன். வீரத்தில் மட்டுமல்ல கொடைப்பண்பிலும் சிறந்தவன். “மலையில் பிறந்த ஆறுகள் எல்லாம் கடலை நோக்கிப் பாய்வது போல புலவர்கள் அனைவரும் உன்னையே நாடி வருகின்றனர், உன் புகழ் பாடி உன்னிடம் பரிசுகள் பெறுவதற்கு” என்று இடைக்காடனார் பாடியிருக்கிறார்.
“ஆனா ஈகை அடுபோர் அண்ணல் நின்
யானையும் மலையின் தோன்றும் ; பெருமநின்
தானையும் கடலென முழங்கும் ; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து
அரசுதலை பனிக்கும் ஆற்றலை
----------------------------
மலையின் இழிந்து மாக்கடல்நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவர் எல்லாம் நின்நோக்கினரே; “ (புறம்—42)
இத்தகைய சிறப்பை உடைய மன்னன் கிள்ளிவளவன், தான் வாழும் நாட்களையும் பண்ணன் பெற்று வாழ்வானாக என்று வாழ்த்திப் பாடியிருப்பது கிள்ளிவளவனின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
சிறுகுடிகிழான் பண்ணனை புலவர் கோவூர் கிழாரும் பாடியிருக்கிறார். பரிசு பெற்ற பாணன் பரிசில் வேண்டி வரும் பாணனுக்குச் சொல்வதாகப் பாடல் உள்ளது.
“கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி ஒண் நுதல்
இன்நகை விறலியொடு மென்மெல இயலிச்
செல்வை ஆயிற் செல்வை ஆகுவை” (புறம்—70)
பாதிரி மணம் கமழும் கூந்தலும், ஒளிபொருந்திய நெற்றியும் , இனிய புன்முறுவலும் கொண்ட விறலியொடு மெல்ல மெல்ல நடந்து பண்ணன் இருப்பிடம் சென்றால் பெரிய செல்வந்தன் ஆவாய்.
மேலும் பாடுகிறார், விறகு வெட்டச்சென்றவன், புதையல் பெற்றது போன்றதல்ல பண்ணன் கொடைத்திறம், அதைப்பற்றி நீ கருதுதல் வேண்டாம்; பெரும் பரிசிலைத் தருவான்.
இவ்வாறு கோவூர்கிழார் பண்ணனின் கொடைச் சிறப்பைப் பாடியிருக்கிறார்.
சோழமன்னன் மட்டுமல்ல பாண்டிய நாட்டுப்புலவரும் சிறுகுடி கிழான் பண்ணனைப் பாடியிருக்கிறார். மதுரை அளக்கல் ஞாழலார் மகனார் மள்ளனார் என்ற புலவர் பண்ணனின் கொடைத்திறத்தைப்பாடிய பாடல் புறநானூறில் உள்ளது.
மழை வளம் குன்றி விளைநிலம் வறண்ட காலத்தில் பெரிய தடாரியை இசைக்கும் பொருநன் பண்ணனை நாடி தன் வறுமையைக் கூறினான்.அவனுக்கு நெல்விளையும் வயல்களையும்,உழவுத்
தொழிலுக்குரிய எருதுகளையும் ஏற்றத்தையும் வழங்கி, அவர்கள் வறுமையைப் போக்கினான்.
“இரும்பறைக் கிணைமகன் சென்றவன்
பெரும்பெயர் சிறுகுடி கிழாஅன் பண்ணற்
தன்நிலை அறியுநன் ஆக அந்நிலை
இடுக்கன் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடைமேந்தோன்றல்”............
(புறம்—388)
மாமன்னன் மட்டுமன்றி. வேற்று நாட்டுப் புலவரும் வள்ளலைப் போற்றிப் பாடும் பண்பினை அறியலாம்.