தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்

மேட்டுப்பாளையம் புத்தகத் திருவிழா 2015 2015 ஆகஸ்ட் 1-10


தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மேட்டுப்பாளையம் கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு மேட்டுப்பாளையம் புத்தகத் திருவிழா கடந்த ஆகஸ்ட் 1 முதல் 10 வரை மேட்டுப்பாளையம் ஐஸ்வர்யா மகாலில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் புத்தகத் திருவிழாவிற்கான பணிகள் துவங்கியது. மே மாதம் 26ஆம் தேதி வரவேற்புக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தின் முக்கிய பிரமுகர்களைக் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. புத்தகத்திருவிழாவையொட்டி பல்வேறு சிறப்பு செயல்பாடுகள் நடைபெற்றது. 1. மேட்டுப்பாளையம் தாலுகாவிலுள்ள 12,000 பள்ளி மாணவர்களுக்கு புத்தக சேமிப்பு உண்டியல்கள் வழங்கப்பட்டது. மாணவர்கள் இந்த உண்டியல்கள் மூலம் ரு 6 லட்சம் தொகை சேர்த்து அதற்கு புத்தகங்கள் வாங்கினர். மெட்ரிக் மற்றும் அரசுப்பள்ளிகள் என 35 பள்ளிகள் இந்நிகழ்வில் பங்கேற்றன. 35 பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உண்டியல்கள் வழங்கும் நிகழ்வுகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன. வரவேற்புக்குழுவின் முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர். உண்டியல்கள் வழங்கும் நிகழ்வுகளின் மூலம் சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுமார் 12000 வீடுகளுக்கு புத்தக திருவிழா செய்திகள் சென்று சேர்ந்தது. அனைத்துப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வுகளில் நமது தலைவர்கள் புத்தகத் திருவிழா உரை நிகழ்த்தினர், சில பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் சிறப்பு கூட்டங்கள் நடத்தி உண்டியல்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

2. மேட்டுப்பாளையம் தாலுகாவிலுள்ள 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்கும் வகையில் ”கலை இலக்கிய திருவிழா” நடைபெற்றது. ”கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், பாட்டு, வினாடி வினா, குறும்படம்” என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் சுமார் 2000 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். ஆசிரியர்களும் போட்டிகளில் பங்கேற்று சிறப்பித்தனர். போட்டிகள் ஜீலை மாத சனிக்கிழமைகளில் வாரம் ஒரு போட்டி என மேட்டுப்பாளையத்தின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நடைபெற்றது.

3. புத்தகத் திருவிழா செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாக “ மேட்டுப்பாளையமே வாசிப்போம்” என “மினி மாரத்தான்” போட்டி நடத்தப்பட்டது. மேட்டுப்பாளையமே திரண்டு வந்து ஓடியது போல் சுமார் 3000 பேர் பங்கேற்றனர்.

4. புத்தகத் திருவிழாவின் 10 நாட்களும் ”கலை கலாச்சாரத் திருவிழா” நிகழ்வு நடைபெற்றது. பதிவு செய்த பள்ளிகளுக்கு புத்தகத் திருவிழா மேடையில் மாலை இலக்கிய உரைக்கு முன்னதாக 30நிமிடங்கள் வழங்கப்பட்டது. தினசரி ஒரு பள்ளி என்ற வகையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ”உரை, கலாச்சார நடனம், நாட்டுப்புறக் கலைகள், நாடகம், பலகுரல் உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் மாணவர்கள் நிகழ்வு நடைபெற்றது. தனி நபர் நிகழ்வுகள் தவிர்த்து கூட்டு நிகழ்வுகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 25 மாணவர்கள் கலந்து கொள்ள விதிமுறை வகுக்கப்பட்டது. ஒரு நிகழ்விற்கு குறைந்தபட்சம் 34 மாணவர்களும் அதிகபட்சமாக 64 மாணவர்களும் பங்கேற்றனர். பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்வாக இது அமைந்தது. பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான பரிசுகள் வழங்கப்பட்டது,

5. பகல் பொழுதுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்தனர். நிர்வாகத்தினரிடம் பேசி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

6. ஆகஸ்ட் 2 மற்றும் 9 இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை நிகழ்வுகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 2 அன்று நடைபெற்ற நிகழ்வில் விஞ்ஞானி ராமானுஜம் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடினார்கள். ஆகஸ்ட் 9 அன்று காலை நிகழ்வில் எழுத்தாளர் ஆயிசா நடராஜன் மற்றும் பேராசிரியர் வெங்கடேச ஆத்ரேயா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடினார்கள்.

7. ஆகஸ்ட் 9 அன்று நண்பகல் நிகழ்வில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் வெங்கடேச ஆத்ரேயா நடப்பு பொருளாதார நிகழ்வுகள் குறித்து உரையாடினார்கள்

மாலை நிகழ்வுகள் தினசரி மாலை நிகழ்வுகள் மிகச்சிறப்பாக நடந்தது. மேட்டுப்பாளையத்தின் உற்சாக நாட்களாய் இந்த நாட்கள் அமைந்தது. மேட்டுப்பாளையமே திரண்டு வந்து நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர்.

ஆகஸ்ட் 1 முதல் நாள் நிகழ்வாக பேரா. சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்ற நிகழ்வு நடைபெற்றது. பட்டிமன்றத்திற்கு முன்னதாக முற்போக்கு பாடகர் துரையரசன் அவர்களின் பாடலிசை நிகழ்ச்சியும், ஷாநவாஸ் அவர்களின் பலகுரல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பட்டிமன்ற நிகழ்வுக்கு முன்னதாக மேட்டுப்பாளையத்தின் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மேடையில் தோன்றி துவக்க விழாவைச் சிறப்பித்தார்கள். பின்னர் அவர்களுக்கும் நிகழ்ச்சியின் நன்கொடையாளர்களுக்கும் பேரா. சாலமன் பாப்பையா புத்தகத் திருவிழா ஷீல்டுகளை வழங்கினார்கள். தொடர்ந்து உண்டியல் சேமிப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் அவர்களது குடும்பத்தினர், சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள், அனைத்துப்பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஷீல்டுகள் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தின் மிகப்பெரும் நிகழ்வாக மட்டுமல்லாது மேட்டுப்பாளையத்தின் வரலாற்றில் மிகப்பெருமளவில் மக்கள் திரண்டு வந்த நிகழ்வாகவும் அமைந்தது. தமிழகத்தின் புத்தகத் திருவிழாக்களில் எங்கும் கூடாத மிகப்பெரும் மக்கள் கூட்டம் கூடிய சிறப்பு மிகுந்த நிகழ்வு அது. 50ஆயிரம் மக்கள் தொகை கொண்ட மேட்டுப்பாளையத்தில் சுமார் 12000 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 10ஆயிரம் இருக்கைகள் மக்கள் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 2 இரண்டாம் நாள் நிகழ்வில் காலை விஞ்ஞானி முனைவர் இராமானுஜம் அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினார்கள். மாலை நிகழ்வில் நக்கீரன் கோபால் அவர்கள் கலந்து கொண்டார்கள். பின்னர் நந்தலாலா அவர்களின் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 3 மூன்றாம் நாள் மாலை நிகழ்வில் நடிகர், எழுத்தாளர் ராஜேஷ், கவிஞர் உமா மகேஷ்வரி, நுகர்வோர் கூட்டமைப்புகளின் தேசிய தலைவர் பேரா துரைசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். முன்னதாக கவிஞர் முகில் அவர்களின் பாடல்கள் மற்றும் உரைவீச்சும் நடைபெற்றது.

ஆகஸ்ட் 4 நான்காம் நாள் மாலை நிகழ்வில் எழுத்தாளர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களும் தன்னம்பிக்கை எழுத்தாளர் முனைவர் கவிதாசன் அவர்களும் உரையாற்றினார்கள். ஆகஸ்ட் 5 ஐந்தாம் நாள் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் அவர்கள் துவக்க உரையாற்றினார்கள். “எங்கே போகிறோம்..” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஞாநி அவர்களும், “சரித்திரம் தேர்ச்சி கொள்” என்ற தலைப்பில் பேரா.அருணன் அவர்களும் கருத்துரை வழங்கினார்கள்.

ஆகஸ்ட் 6 ஆறாம் நாள் நிகழ்வில் “தீதும் நன்றும் புத்தகங்கள் தரும்” என்ற தலைப்பில் தமிழருவிமணியன் அவர்களும், “நூல் ஏணி” என்ற தலைப்பில் கவிஞர் அப்துல் காதர் அவர்களும் கருத்துரை வழங்கினார்கள்.

ஆகஸ்ட் 7 ஏழாம் நாள் நிகழ்வில் ”இலக்கியங்களால் மக்களுக்கு கிடைப்பது மனமகிழ்ச்சியா? மன எழுச்சியா? என்ற தலைப்பில் பேரா ஞானசம்பந்தம் அவர்களின் குழுவினரின் பட்டிமன்றம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 8 எட்டாம்நாள் மாலை நிகழ்வாக “பாட்டாளி படைப்பாளியான வரலாறு” என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் ஆவணப் படம் திரையிடப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்வில் “வரலாறுகளே வழிகாட்டும்” என்ற தலைப்பில் ஆவணப்பட இயக்குநர் முனைவர் சரோன் அவர்களும், “வைரமணிகள் அல்ல விதைமணிகள்” என்ற தலைப்பில் பேரா பர்வீன் சுல்தானா அவர்களும் உரையாற்றினார்கள்.

ஆகஸ்ட் 9 ஒன்பதாம் நாள் காலை நிகழ்வில் எழுத்தாளர் ஆயிசா நடராஜன் அவர்கள் மாணவர்கள், ஆசிரியர்களுடன் உரையாடினார்கள் பொருளதார நிபுணர் வெங்கடேச ஆத்ரேயா அவர்கள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் உரையாடினார்கள். பாரதி புத்தகாலயத்தால் ஆயிசா நடராஜன் அவர்களின் 15 புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

மாலை நிகழ்வில் ”ஆகஸ்ட் 9” என்ற தலைப்பில் ஆயிசா நடராஜன் அவர்கள் உரையாற்றினார்கள். பின்னர் “பாரதி இன்று வந்தால்..” எனும் புதுமை வேடமிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பாரதியாக கவிஞர் இளசை சுந்தரம் அவர்களும், புதுமைப் பெண்ணாக முனைவர் ரேவதி சுப்புலட்சுமி அவர்களும் நிகழ்வினை நடத்தினார்கள்.

ஆகஸ்ட் 10 பத்தாம் நாள் மற்றும் இறுதி நாள் நிகழ்வாக சாகித்யா அகாடமி விருதாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ”பாடப்புத்தகங்களுக்கு வெளியே” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். முன்னதாக கவிஞர் திருமூர்த்தி அவர்கள் “வாசிப்பை நேசிப்போம்” என்ற தலைப்பில் நகைச்சுவையுரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக.. புத்தகத் திருவிழாவின் பத்து நாட்களும் மேட்டுப்பாளைய நகரமே மகிழ்ந்து ரசித்தது. இறுதி 5 நாட்களும் மேட்டுப்பாளையமே திரண்டு வந்து புத்தகக் கண்காட்சியை சிறப்பித்தனர். பொதுவாக புத்தகக் கண்காட்சிகளில் ஆண்கள் கூட்டம் நிறைந்திருக்கும். ஆனால் மாறாக மேட்டுப்பாளையம் புத்தகத் திருவிழாவில் குடும்பம் குடும்பமாக நிறைந்து வழிந்தனர். பெண்களும், குழந்தைகளும், மாணவர்களும் நிறைந்த புத்தகத் திருவிழாவாக மேட்டுப்பாளையம் புத்தகத் திருவிழா ஜொலித்தது. மேட்டுப்பாளையம் போன்ற சிறிய ஊரில் புத்தகக் கண்காட்சி என்பது பெரும் முயற்சியே. ஆனாலும் 55 அரங்குகளில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. சுமார் 30லட்சம் ருபாய்க்கு குறையாமல் புத்தக விற்பனை நடைபெற்றுள்ளது. சுமார் 40ஆயிரம் பேர் நிகழ்வுக்கு வந்து சிறப்பித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mettupalayam_book_fair&oldid=2075260" இலிருந்து மீள்விக்கப்பட்டது