மணல்வீடுகளின் கிளி வாசல்கள்.
                                  மலையாளத்தில்:   பாபு குழிமற்றம்
                                    தமிழில்:   குளச்சல் மு. யூசுப்


கடல்புறத்தில் ஜோ எனும் இளைஞனும் அவனது மனைவியும் மட்டும். இவர்களைத் தவிர ஒரு முக்குவக் குழந்தையைக்கூட கடல்புறத்தில் காண முடியவில்லை. இந்த மத்தியான நேரத்தில், எரித்து விடுவதுபோன்ற வெயிலேற்று உருகித் திளைக்கும் மணலில் வேறு யார் வரப்போகிறார்கள்.

ஆனால், ஒரு கற்குடைபோல் உறுதியான காலில் நின்றிருக்கும் பாறை முகட்டின் கீழ் அவர்களிருவருக்கும் தேவையான நிழலிருந்தது. அந்த நிழலிலிருந்து அவர்களொரு மண்வீடு கட்டியெழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

சீறியபடியே வந்த அலையைப் பார்த்ததும் அவள் கோபத்துடன் சொன்னாள்:”

“எங்க மாளிகையைத் தொட்டுரக் கூடாது.

அவளைப் பார்த்து பயந்துதானோ என்னமோ, அந்த பெரிய அலை வந்ததுபோலவே திரும்பி கடலுக்குள் சென்று விட்டது.

அவள் கடலைப் பார்த்து அலைகளிடம் உரக்கச் சொன்னாள்:

“நல்ல பிள்ளை; கடலம்மாவோட செல்லப் பிள்ளை...

ஜோ எனும் அந்த இளைஞன் தங்களுடைய வீட்டின் மினுக்குப் பணிகளில் ஈடுபட்டிருந்தான். எவ்வளவுதான் முயற்சி செய்த பிறகும் கார் போர்ச் சரியாக அமையவில்லை. மண்ணில் பசைத் தன்மைக் குறைவாக இருந்தது. கொஞ்சம் சகதியும் கிடைத்திருக்குமென்றால் மேலே இன்னொரு மாடிகூட எடுத்திருக்க முடியும்...

எதிர்காலத்தைப் பற்றி அவளுக்குத் தெளிவான ஒரு பார்வையிருந்தது. சில கணக்குகளுமிருந்தன. ஆகவேதான் உறுதியுடன் கூடிய சில அபிப்பிராயங்களை அவளால் முன்வைக்க முடிகிறது.

ஒரு இடதுசாரி மாணவர் அமைப்பில் முன்னணியில் நின்று பணியாற்றியவர்கள்தான் ஜோவும் அவளும். அதெல்லாம் கடந்த கால கதைகளாக மண்ணுக்குள் போய் விட்டது. ஆனாலும் இந்த அளவிலான மாற்றங்களொன்றும் மனிதனுக்குத் தேவையில்லாதது.

அணில் குஞ்சு ஆனையைப்போல் வாய் பிளக்க நினைக்கக் கூடாது. ஜோ தேவைக்கதிகம் கனவு காண்கிற சுபாவமுள்ளவன். அவள் அடிக்கடி குறை பட்டுக்கொள்ளுவாள். ஒரு கனவுலக சஞ்சாரியால் நடைமுறை வாழ்க்கையில் விஷேசமான நேட்டங்கள் எதையும் அடைந்து விட முடியாதென்பது அவளுடைய நம்பிக்கை.

அவள் இப்படியான நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் போதெல்லாம் அவனுக்குக் கோபம் வரும். தன்னை இவள் நக்கல் செய்கிறாளோ என்று தோன்றும். அவன் அவளை ‘குடுக்கா பாரு' என்று கேலி செய்வான்.

கேலி செய்யும்போது மட்டுமல்ல, பிரியம் அதிகமாகும்போதும் அவன் அவளை அன்பாக ‘என் குட்டிக் குடுக்காவே...' என்றுதான் அழைப்பான்.

அவளது கொங்கைகளின் அபூர்வ ஆகிருதியும் வடிவழகும்தான் அவன் இப்படிக் கூப்பிடுவதற்குக் காரணமாக இருக்க வேண்டும். ஆனால், காரணம் இதுவாக மட்டுமே இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. “வையேன், குடுக்கா சோற்றையும் கறியையும் என்கிற பழங்கதையும் ஒருவேளை காரணமாக இருக்கக் கூடும்.

பழைய அந்த மந்திரக் குடுக்கையின் அபூர்வ சித்து வேலைகளெல்லாம் தனது மனைவியிடமுமிருப்பதாக அவன் நம்பியிருந்தான். முடியவே முடியாது என்று நிச்சயமாகத் தெரிந்த ஒரு விஷயத்தைக்கூட அவள் மனது வைத்தால் சாதித்து விட முடியுமென்பது அவனது அனுபவ சாட்சியங்கள்.

இருந்தாலும், சிறிதளவுகூட நடைமுறையறிவில்லாத நபரென்பதாக அவள் குற்றப்படுத்துவதை அவனால் ஏற்கவே முடியவில்லை. சில தனி மனிதர்களுக்கு கூடுதலான நடைமுறை அறிவுகளிருப்பதற்கான காரணமும், வேறு சிலர் கூடுதலாகக் கனவுகளைக் காண்பதுதான் என்று அவனும் அவ்வப்போது திருப்பியடிப்பதுண்டு. “அழகானதும் சமத்துவமானதுமான ஒரு உலகம் மார்க்சின் ஏங்கெல்சின் கனவுகளாக இருந்தன. ராம ராஜ்யத்தைக் கனவு கண்டுகொண்டிருந்த காந்திஜிக்குக் கிடைத்தது இரண்டு வெடிகுண்டுகள்தான். அதனால்தானே நேருஜி முதல் கருணாகரன்ஜி வரையிலான ஆட்கள் அதிகமாக நடைமுறையறிவுடன் நடந்துகொண்டார்கள்...

ஜோவின் இந்த அபிப்பிராயங்களுடன் மீண்டும் முரண்பட வேண்டுமென்று அவனது சர்க்கரைக் குடுக்காவுக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், அவன் சொல்வதிலும் ஓரளவுவரை உண்மையிருப்பதாகவே அவள் கருதினாள். மேலும் மேலும் இருட்டிலாழ்ந்த வின்னியின் இரவுகள் உதிர்த்த யௌவனத்தின் பெருமூச்சுகளையும் அவஸ்தைகளையும் குரூரத்துடன் புறக்கணித்து கனவுலக சஞ்சாரியாக வாழ்ந்தவர் மண்டேலா. கறுத்தவன் சிம்மாசனத்தில் ஆரோகணிப்பது மட்டுமே அவரது கனவாக இருந்தது. கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகாவது சாத்தியமான ஒரு கனவு...

இருந்தாலும், இரண்டு மாடிகளும் வாகனம் நிறுத்துவதற்கான இடமுமுள்ள ஒரு வீடென்பதை ஜோவின் அளவு கடந்த கற்பனையாகவே அவள் கருதினாள். இரண்டு குழந்தைகளுக்கு ஓடி விளையாடி வளருவதற்கேற்ற வகையிலான சுத்தமும் விசாலமுமான ஒரு சிறு வீடு. இதைத் தாண்டிய மனக்கோட்டைகள் தேவையற்றவை.

இரண்டே இரண்டு குழந்தைகள்தான் தங்களுடைய தாம்பத்திய கொடியில் பூக்கவேண்டுமென்பதை அவர்களிருவரும் முன்கூட்டியே நிச்சயித்து முடிவு செய்திருந்தார்கள். எந்தவித அல்லல்களுமில்லாமல் செல்லக் குழந்தைகள் வளர வேண்டும்.

பிறக்கப்போகிற அந்தக் குழந்தைகளின் விஷயத்தில் அவர்கள் ஒத்தக் கருத்துடையவர்களாக இருந்தாலும் ஒரு விஷயத்தில் மட்டும் சிறு முரண்பாடுமிருந்தது. முதலில் பிறக்கும் கண்மணி, ஆணாக இருக்க வேண்டுமா பெண்ணாக இருக்க வேண்டுமா என்கிற விஷயம்தான் அது. பெண்குழந்தைதான் என்று அவனும் ஆண்குழந்தைதான் என்று அவளும் தர்க்கம் செய்வதுண்டு.

அவளது வாதத்தின் பின்னால் எப்போதுமே சில நியாயங்களிருக்கும். பெண்கள் பொதுவாகவே பலவீனமானவர்கள் அல்லவா? முதலில் பிறப்பது ஆணாக இருந்தால் அப்பாவோ அம்மாவோ இல்லாமலாகி விட்டால்கூட தங்கைக்கு அண்ணன் துணையாக இருப்பான். இதுவே வேறு மாதிரி நிகழ்ந்தால் மூத்த சகோதரிக்கு தம்பி பாரமாக இருப்பான். வரதட்சணை முறை இன்றும் வித்தியாசமான கோணங்களில் அமுலில் இருந்து வருவதால் மூத்த ஆணுக்குக் கிடைக்கும் வரதட்சணைப் பணத்தை வைத்து இரண்டாவது மகளின் திருமணத்தை முடித்து விடவும் செய்யலாமெனும் ஒரு வாய்ப்பும் இதிலிருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

ஜோ மெல்ல எழுந்து பாறையடுக்குகளின் பின்புறமாக நடந்தான். அந்தப் பகுதியில் எந்த இடத்தில் சகதி கிடைக்கும் என்று பார்ப்பதற்காக. பின்னால் அவளும் நடந்தாள். மேல்பரப்பிலிருந்து மணலை விலக்கி விட்டு இரண்டுபேரும் ஆளுக்கொரு சேற்றுருண்டைகளை அள்ளியெடுத்துக்கொண்டார்கள். பாய்ந்து வந்த பெரிய அலையொன்று அவர்கள்மீது நீரை வாரியிறைத்து விட்டுத் திரும்பியது. அவள் திரும்பி நின்று,

“சீ... போடீ, எரப்பாளி நாயே... என்று பெருங்குரலில் திட்டினாள்.

சரி விடு, பரவாயில்லை... அவளை அமைதிப்படுத்தி விட்டுச் சொன்னான். வெறும் மணலாக மட்டுமே இருந்தால் வீட்டு வேலை பூர்த்தியாகாது. உடம்பில் சேறு படிந்தால் பிறகு கழுவிக் கொள்ளலாம்.

        அவள் பெருமிதத்துடன் அவனைப் பாராட்டுவதுபோல் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் அதிகமான இயல்புடனிருந்தான். 
         ஆனால், படுக்கையறைச் சுவரில் சிறு கிளி வாசல் அமைக்க அவன் முயற்சி செய்தபோது அவள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தாள். 
         “தேவையில்லை, ஜோ. நம்முடைய படுக்கையறையில் அப்படியான ஒரு ஜன்னல் வேண்டாம்...
         “பெரிய மனிதர்களின் வீடுகளிலெல்லாம் இப்படி ஒரு ஜன்னல் இருக்கும்தானே? நமக்கும் முதுமை வரும்போது ஜன்னலுக்கான தேவை ஏற்படுமல்லவா? அவன் நியாயங்கள் பல பேசினாலும் அவள் சிறிதுகூட விட்டுக்கொடுப்பதாக இல்லை. மட்டுமல்ல, அவனுடைய எதிர்ப்புகளைக் கணக்கிலேயே எடுக்காமல் அந்த ஜன்னலை களிமண்ணும் மணலும் கலந்து அடைத்து மூடினாள்.  
        அந்த மணல் வீட்டின் வேலை பூர்த்தியானபோது அவனுக்கு மிகுந்த சோர்வு தட்டியது. ஒரு கொட்டாவி உதிர்த்தபடி அவளது மடியில் தலை சாய்த்தான். 
        முழுமையடைந்த அந்த வீட்டை அவள் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். அது  மணல் வீடுதான். இன்று வெறுமொரு கனவாக இருக்கலாம்.  இன்றில்லையென்றால் நாளை ஒருநாள் நிச்சயமாக இந்தக் கனவு நிறைவேறும். அவளுக்குத் தெரியாமலேயே அவனது விரல்கள் ஜாக்கெட்டினுள் நுழைந்து குறும்பு காட்டியபோது அவள் திடுக்கிட்டுத் திரும்பி அவனுடைய காதில் கிள்ளி விட்டு முடியிழைகளினூடே விரல் கடத்தி பரிவுடன் வருடிக் கொடுத்தாள். 
       அவள் நல்ல மூடிலிருப்பதைக் கண்டதும் அவன் சொன்னான்: அந்த ஏஜெண்டு வருகிற நேரமாகி விட்டது. புதிதாக ஒரு கிழவனை ஏற்பாடு செய்வதாக சொல்லியிருந்தான் அல்லவா? இன்று அந்த கிழவனுக்காகவும் வேலை செய்ய வேண்டுமென்றால் எனக்கு ஒரு பீர் குடித்தேயாக வேண்டும்... 
          
        கேட்கக் கூடாத எதுவோ காதில் விழுந்ததுபோல் அவள் திடுக்கிட்டாள். ஜோ, நீ இப்படியே இருந்தால் நம்முடைய விஷயங்களெல்லாம் எப்படி நடக்கும்? இன்றைய லஞ்சே நம் பட்ஜெட்டைக் கடந்துபோய் விட்டதல்லவா? எனக்கு அந்த ஏஜெண்டை அவ்வளவாக நம்பிக்கையில்லை. புதிய ஒரு வேலை தருவதாக அவன் சொன்னது பொய்யாகவுமிருக்கலாம். 


       அவன் அவளது மடியிலிருந்து விலகியெழுந்து கோபத்துடன் சொன்னான்: 

“ஏஜெண்ட் பொய் சொல்லட்டும் சொல்லாமலிருக்கட்டும். எனக்கு உன் பீரும் வேண்டாம், விஸ்கியும் வேண்டாம். ஆனா, லஞ்சுக்குப் பணம் அதிகம் செலவானதுக்கு என்னைக் குத்தம் சொல்லாதே. அந்த ஓட்டல்லே ஏற வேண்டாம்னு நான் உங்கிட்டே சொன்னனா இல்லியா? சாப்பிடப் போறவனுங்கள கழுத்தறுப்பு நடத்தித்தான் அவனுங்க அந்தக் காலத்துலே இருந்து சம்பாதிக்கிறானுங்க.

        அவளுக்கும்  உடனே கோபம் வந்தது: 
“என்னைக் குறை சொல்றதுலேயே நீ கவனமா இருக்கே. நீ ஃபிஷ் ஃபிரையும் மட்டன் கறியுமெல்லாம் ஆர்டர் பண்ணுனியே, இதுக்கு ஓட்டல்காரனா பொறுப்பாக முடியும்?
       அவனுக்குள் சிறு குற்றவுணர்வு ஏற்பட்டது. பரிவுடன் பற்றிக்கொண்ட அவளது இரு கைகளிலும் முத்தமிட்டு விட்டு சொன்னான்: ‘'என் தங்கக் கட்டியே, காலையிலெ அந்தக் கிழவன்  நம்மை எவ்வளவுக் கஷ்டப்படுத்தினான் பார்த்ததானே? எனக்கு ரொம்பக் களைப்பா இருக்குடா.
        அவனுடைய தந்திரத்திற்கு வளைந்து கொடுக்க அவள் தயாராக இல்லை.  
        “வேலை செய்ற எல்லாருக்குமே களைப்பு இருக்கத்தான் இருக்கும். இதொண்ணும் புதிய விஷயமில்லை. நீ மட்டுமில்லியே ஜோ, நானும் சேர்ந்துதானே வேலை செய்றேன். எனக்கு மட்டும் சோர்விருக்காதா? நான் பொறுத்துக்கலியா?
        அவள் பேசுவதைக் கேட்டபோது அவனுக்கு அவள்மீது அனுதாபமும் வருத்தமும் தோன்றியது. ஒரு நீண்ட பெருமூச்சையுதிர்த்தபடியே அக்கரையின் கண்காணா தொலைவில் பார்வையை ஊன்றினான். 'என்னென்ன வகையான கனவுகளெல்லாம் நாம் கண்டிருந்தோம்.'
        அவன் ஆதரவுடன் அவளை இழுத்து தனது மடியில் படுக்க வைத்தான். அவனது கண்களில் நீர் ததும்பியிருப்பதை அவள் கவனித்தாள். அவனுக்கு சோகம் ஏற்படுவது அவளை எப்போதுமே தளர்த்தி விடும். ஒரு நிமிடம்கூட அவனது முகம் வாடியிருப்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடியாது. 
‘'எதுக்காக ஜோ நீ இப்படி செண்டிமெண்டாகிறே? எந்த சவாலையும் ஏற்கிற தன்னம்பிக்கையோடுதானே நாம வெளியே வந்தோம்? இப்போ நாம பாக்குற வேலை... வேறு காரணங்கள் இல்லைன்னு வெச்சுக்கிட்டாலும்கூட நாம நமக்காகவும்தானே  செய்யுறோம்...? அவள் அவனது உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டாள். 
        அந்த முத்தம் நீண்ட நேரம் தொடர்ந்தது. அவன் மெல்ல அவளிடமிருந்து தனது உதடுகளை விடுவித்து அவளை இழுத்து தனது நெஞ்சில் கிடத்தி விட்டு சொன்னான்: ‘'இப்போது  நாம் நமக்காக மட்டுமே..
        அவனது கை விரல்கள் அவளது ஜீன்ஸின் பட்டன்களைத் திருகத் துவங்கியதுமே அவள் துள்ளியெழுந்தாள்: 
‘'வேண்டாம் ஜோ, இப்போது வேண்டாம். மத்தியானத்திற்குப் பெறகு திரும்பவும்... நீ ரொம்பவும் சோர்ந்துபோயிருவே. புதிய கஸ்டமர் முன்னாலெ முதன் முதலாக வேலை பார்க்கும்போது சோர்வு தெரியக் கூடாதல்லவா..?

        அந்தக் காற்று திடீரென்று வீசியது. காற்றில் பறந்த மண்துகள்கள் அவர்கள் இருவரின் கண்களிலும் படிந்தன. கொஞ்ச நேர சிரமத்திற்குப் பிறகுதான் கண்களைத் திறக்கவே முடிந்தது. பரஸ்பரம் கண்ணிமைகளை விரித்து மண்ணை ஊதி அகற்றினார்கள். 
        கண் திறந்து பார்த்தபோது தெரிந்த காட்சி அவர்களை கலங்க வைத்து விட்டது. தரையில் விரித்திருந்த அவளது ஸ்கார்ஃப் காற்றில் பறந்து தூரத்தில் கடலில் போய் விழுகிறது. சித்திரத் தையலிடப்பட்ட அந்த ஸ்கார்ஃப் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவன் அவளுக்கு முதன் முதலாக வாங்கித் தந்த திருமணப் பரிசு அது. அவள் காற்றைப் பார்த்து கோபத்துடன் சொன்னாள்: 
‘'தேவிடியாப் பய காத்தே.  நீ நாசமா போயிடுவே... 
       அவள் காற்றைத் திட்டுவதைப் பார்த்து அவன் சத்தமாகச் சிரித்து விட்டான். அவளுக்குக் கோபம் அதிகமானது:
‘'சிரிக்கிறியா ஜோ? நல்லா சிரி. நஷ்டம் யாருக்கு? உன் முகத்தைப் பாத்த பிறகு ஒரு பாட்டில் பீர் வாங்கித் தரலாம்னு நினைச்சேன். இனி அது நடக்காது. ஸ்கார்ஃபும் வாங்கி பீரும் வாங்கணும்னா கட்டுப்படியாகாது.. 

இதைக் கேட்டதும் அவனது சிரிப்பு திடீரென்று நின்று விட்டது:

“எது எப்படியோ, எனக்கு நீ ஒரு பீர் வாங்கித் தரணும்னு நினைச்சிருந்தா, அதை வாங்கித் தந்துடத்தான் வேணும். இல்லைன்னா அந்த தெய்வம்கூட உன்னை மன்னிக்காது... புதிய ஒரு கஸ்டமரை ஏற்பாடு செய்யிறதா ஏஜெண்ட் சொல்லியிருக்கிறான்தானே? கவலைப்படாதே, நமக்கு நஷ்டத்தை ஈடுகட்டிடலாம்.

        அவள் அவனைப் பார்த்து எரிச்சலுடன் சொன்னாள்: “அந்த ஏஜெண்ட் ஒரு டைப்பான ஆளு. அவன் சொல்றதுலெ பாதியளவுகூட உண்மையிருக்காதுனு   நான்தான் சொல்லியிருக்கிறேனே. மட்டுமல்ல, புதிய கஸ்டமர் எப்படிப்பட்டவனு யாருக்குத் தெரியும்? கலிகாலக் கோளாறு பிடிச்ச இந்தக் கிழவன்களோட தாளத்துக்கு ஒத்து நம்மாலெ துள்ள முடியுமா?
        அவனுக்கு அவள்மீது மிகுந்த கோபம் வந்தது:”	
‘'நீ எதுக்கு அந்த எஜெண்டையும் அவனோட கிழவன்களையும் திட்டுறே? திங்கிற சோத்துக்கு நன்றி காட்டணும். இந்தக் கிழவன்களெல்லாம் கோடிக்கணக்கிலெ பணம் சம்பாதிச்சு சேத்து வெச்சிருக்குறது அவனுங்களோட விருப்பம்போலெ வாழ்றதுக்குத்தான்.  நமக்குப் பணம் தர்றதே அவனுங்க விருப்பப்படி நாம துள்றதுக்குத்தான். இவனுங்களோட கொட்டங்களை அடக்கணும்னு நமக்கு ஆசை வார்த்தைகளையெல்லாம் பேசினவனுங்க கடைசியிலே நம்மை எங்கே கொண்டுபோய் விட்டானுங்க...?
        பதில் சொல்வதற்கு அவள் முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் ஜோ சொல்கிற எல்லாமே உண்மை என்பது அவளுக்கும் தெரியும். ஆனால், அந்த ஏஜெண்டின்மீதான அவளது வெறுப்பு மனதிலிருந்து விலகவே இல்லை. அவனை அவள் வெறுப்பதற்குப் போதுமான காரணங்களொன்றுமில்லை. ஆனால், அவன் கணக்கு பேசி வாங்குகிற கமிஷன் ரொம்பவும் அதிகம் என்று அவளுக்குத் தோன்றியது. மட்டுமல்ல, அவனது உறுத்தலான அந்த  நோட்டமும் இளித்த சிரிப்பும் அவளுக்கு அருவருப்பை உருவாக்கும். 
        இரைந்து வரும் அலைகள் நக்கித் துடைப்பதற்காக அவர்களிருவரும்  கால்களை  நீட்டி வைத்தபடியே பாறை மடிப்பின்மீது சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். ஜோ பெருங்குரலில் ஒரு கொட்டாவி விட்டபோது அவள் அவனது காதைப் பிடித்து சரியாகத்  திருகி வைத்தாள். மேனேர்ஸ் விஷயத்தில் அவனுக்கு கொஞ்சமும்கூட அக்கரை கிடையாதென்று அவள் அடிக்கடிக் குறைபட்டுக்கொள்வாள். நன்றாக வலித்ததுபோன்ற பாவனையுடன் அவன் திருப்பியடிக்கப் போகும்போது வெற்றிலைப் போட்டு உமிழ் நீர் வடியும் வாயுடன் அந்த மனிதன் அங்கே வந்து சேர்ந்தான். எதிர்பார்த்திருந்த அவர்களுடைய ஏஜெண்ட்.   
        அவனது முகத்திலிருந்த உற்சாகத்தைக் கண்டதுமே நல்ல ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறதென்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். 
               
        நல்ல வாய்ப்புதான். கோடீஸ்வரனான ஒரு புதிய கிழவன். வயது, கிட்டத்தட்ட தொண்ணூறு இருக்கலாம். ஆனாலும், பார்வைக்கு எழுபதுதான் மதிக்க முடியும். சிங்கப்பூர் ரிட்டர்ன். மிகப் பெரிய  பங்களாவில் ஏகாந்த வாழ்க்கை. மனைவி இறந்து பல வருடங்களாகியிருந்தது. மனைவியை அவர் மிதித்துக் கொன்றதாக ஒரு வதந்தியுமிருந்தது. பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் அமெரிக்காவில். வீட்டிற்குள் பூரண சுதந்திரம். ஆர்வமேலிட்டால் ஒருவேளை ஏஜெண்ட் பேசி வைத்திருக்கும் தொகையை விட அதிகம் கிடைப்பதற்கான வாய்ப்புமிருக்கிறது. ஃபர்ஸ்ட் கிளாஸ் விஸ்கியும் நல்ல ஆகாரமும் பங்களாவிலேயே கிடைக்கும். அதற்கு பணமோ கூலியில் பிடித்தமோ இருக்காது. மட்டுமல்ல, வேலை நேரத்தில் மற்ற கிழவன்களைப்போல்  அவர் ஒருபோதும் ஜன்னலை விட்டு வெளியில் வரவோ, பக்கத்தில் வந்திருந்து தொந்தரவு செய்யவோ மாட்டார். வீட்டு வேலைக்காக சமையலறையிலும் வெளியிலும் நிறைய வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லா வகையிலுமே பரம சுகம். அவருக்குப் பிடித்துப்போய் விட்டதென்றால் பல காரியங்களையும் சாதித்துக்கொள்ளலாம். அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் பிரபலமான ஒரு நபர். அரசாங்கத் தரப்பில் மிகுந்த செல்வாக்கும் மரியாதைக்கும் உரியவர். 
        விவரங்களையெல்லாம் கேட்டறிந்தபோது அந்த ஏஜெண்டின் எதிரிலேயே அவர்கள் சுயம் மறந்து உற்சாகத்துடன் கட்டிப் புணர்ந்து முத்தமிட்டு விட்டார்கள். அவள் பர்சைத் திறந்து முழு மனதுடன் முதன் முதலாக அந்த ஏஜெண்டுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தாள். இது கமிஷனில் கழியாது என்றும் அவள் உத்தரவாதமாகச் சொன்னாள். 
        புதியதொரு தரமான வாடிக்கையாளர் மேலும் கிடைத்திருக்கிறாரே, வருமானம் இன்று இரு மடங்கு அதிகமாகி இருக்கிறது. கொண்டாட அவள் அனுமதித்து விட்டாள். பீர் மட்டுமல்ல, பொரித்த கோழியும் சப்பாத்தியும். 
        பீர் பாரை நோக்கி அவர்கள் உற்சாகத்துடன் நடைபோட்டார்கள். இடையே அவனைப் பிடித்து நிறுத்தி அவனது பான்டின் பின் பகுதியில் ஒட்டியிருந்த மணலைத் துடைத்து சுத்தம் செய்தாள். அவளுடைய விருப்பம்போல் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்பதுபோல் அவன் கால்களை அகற்றியபடி நின்று கொடுத்தான்.  
        சாலையைக் கடந்து மறு பக்கமிருந்த பீர் கடைக்கு நடந்துபோக முடியாதபடி அவர்களின் எதிரிலொரு இளைஞர் அமைப்பின் பிரமாண்டமான பேரணி போய்க்கொண்டிருந்தது. 
        ஆர்ப்பாட்டக்காரர்கள் உரத்தக் குரலில் முழங்கிக்கொண்டிருந்த கோஷங்களெல்லாமே வேலையின்மையின் கொடுமைகளுக்கெதிரானவைதான். “இன்றைய இளைஞர்கள் அனைவருமே ஒயிட் காலர் வேலையின் கனவில் நடக்கிறார்கள். என்னென்ன சுய தொழில்களுக்கான திட்டங்களை நம்முடைய அரசாங்கம் தீட்டி வருகிறது.. நுரைத்து வழியும் பீர் கோப்பையை உயர்த்தி அவன் சியேர்ஸ் சொல்லும்போது அவள் மெதுவான குரலில் இதைச் சொன்னாள்: ‘'வேலை கிடைக்காத அந்தத் தோழர்களின் ஆரோக்கியத்திற்காக...
                                            - --- -- --- -- -- --- ---- -- -- ---
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mohamedyoosuf&oldid=946509" இலிருந்து மீள்விக்கப்பட்டது