வரலாற்றைத் திருத்தி எழுதும் குண்டாறு பழைய கற்கால நாகரிகம்:

     இராமநாதபுரம் மாவட்டம்  கமுதியை ஒட்டிய நாராயணபுரம் கல்லுப்பட்டி அருகிலுள்ள பாறைகள் நிறைந்த கீழைக்குண்டாறு பகுதியில் எனது கள ஆய்வில் கிடைத்த பழைய கற்கால கருவிகள் மற்றும் நுண்கற்கால கருவிகள் இவை ஆகும். இங்கு கிடைக்கும் பழைய கற்கால கருவிகள் ஒரு லட்சம் ஆண்டு முதல்  இரண்டு லட்சம் ஆண்டுகள் வரை பழைமையானவையாக இருக்கலாம்.

இங்கு கிடைக்கும் நுண்கற்கால கருவிகள் பத்தாயிரம் ஆண்டுகள் பழைமையானவையாக இருக்கலாம். இக்கருவிகள் அனைத்தும் இங்கு இயற்கையாகவே கிடைக்கும் பளபளப்பான பிளின்ட் (Flint) வகை பாறைகளால் செய்யப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு. இப்பகுதியில் அதிகமான பிளின்ட் பாறைகளும், மூலக்கூறு கற்களும் காணப்படுகின்றன. இங்குள்ள இயற்கையான குகைகளும், பரந்த குண்டாறும் ஆதிமனிதன் வாழ்வதற்கு சிறந்த வாழ்விடத்தை அமைத்துக்கொடுத்துள்ளது.

    தென்தமிழ்நாட்டில் இதுவரை பழைய கற்காலகருவிகள் ஒருசில இடங்களில் மட்டுமே அரிதாக  கிடைத்துள்ளன.இப்பகுதியில் அதிகளவு பழைய கற்கால கருவிகள் கிடைப்பது ஆச்சரியமளிக்கிறது.  

இதுவரை சென்னையைச் சுற்றியுள்ள கொற்றலை ஆறு மற்றும் அத்திரம்பாக்கம் பகுதிகளிலேதான் அதிகமான கற்கால கருவிகள் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் குவார்ட்சைட் பாறைகளால் ஆன கற்கருவிகள் ஆகும். இப்பகுதிக்கு சென்னை கைக்கோடாரி தொழிற்சாலை எனப்பெயரிட்டுள்ளனர். கற்கால கருவிகள் எப்பகுதியில் கிடைக்கிறதோ அப்பகுதியின் பெயரிடுவது வழக்கம் ஆகும். அதுபோலவே கமுதி குண்டாறு பகுதியில் கிடைக்கும் கற்கால கருவிகளுக்கு கமுதி கற்கருவிகள் தொழிற்சாலை எனப்பெயரிடலாம்.

  இங்கு கிடைக்கும் சில பழைய கற்கால கருவிகள் இருமுகமும் செதுக்கப்பட்டு கைக்கோடாரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அளவில் பெரியவை. மிகப் பழமையானவை. இரண்டு லட்சம் ஆண்டுகள் கூட பழமையானவையாக இருக்கலாம். இவை பெரும்பாலும் விலங்குககளை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் சிலவற்றை மாமிசங்களை கிழிக்கும் கத்திகளாகவும், கைக்கோடாரிகளாகவும், குறுமரங்களை அறுக்கவும்  பயன்படுத்தி இருக்கலாம். சிலவற்றை கொட்டைகளை உடைக்கவும், காய்களை அறுக்கவும், எலும்புகளை உடைக்கவும் பயன்படுத்தி இருக்கலாம். சில சுரண்டிகளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். சில கற்கருவிகள் கம்புகளில் கட்டப்பட்டு வேட்டைக்குப்பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். இவையனைத்தும் பல்வேறு வடிவங்களில் நேர்த்தியாக உள்ளது. 
  இங்கு கிடைக்கும் நுண்கற்கால கருவிகள் அளவில் சிறியவை. இவை மாமிசங்களை கிழிக்கவும், கிழங்குகளை அறுக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.இவை பழைய கற்கால கருவிகள் செய்யும் போது சிதறும் சில்லுகளைக்கொண்டு செய்வதாகும். 
    இக்கருவிகள் அனைத்தும் மனித இனம் முதன்முதலில் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரவினான் என்ற கருத்தை உடைப்பதாக உள்ளது. தமிழகத்திலே 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் தோன்றியதற்கு அத்திரம்பாக்கம் கற்கருவிகளே சாட்சி ஆகும். இக்கருவிகள்  நமது மாவட்டத்திலும் கிடைத்திருப்பது சிறப்பானதாகும். தமிழக வரலாற்றில் இக்கற்கால கருவிகள் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்பது உறுதி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Muniasamy_K&oldid=3624835" இலிருந்து மீள்விக்கப்பட்டது