Nasir baqavi
சா. அப்துந் நாசிர் ஃபாஸில் பாகவி நபிமொழி தமிழாக்க மேலாய்வாளர்
சென்னை மைலாப்பூரில் இயங்கிவரும் பிரபல இஸ்லாமிய பதிப்பகமான ரஹ்மத் பப்ளிகேஷனில் 15 ஆண்டு காலமாக (1997 - 2013) பணியாற்றிவருகிறார்.அரபி மொழியிலுள்ள நபிமொழி நூல்களை தமிழாக்கும் குழுவில் ஒருவராக 11 ஆண்டுகள் ஈடுபட்டார். 2009முதல் நபிமொழி தமிழாக்கத்தை சீர்செய்யும் மேலாய்வாளராகப் பணியாற்றிவருகிறார். நபிகளாரின் பொன்மொழிகள் ஸஹீஹுல் புகாரீ (7 பாகங்கள்), ஸஹீஹ் முஸ்லிம் (4 பாகங்கள்), ஜாமிஉத் திர்மிதீ (3 பாகங்கள்), குர்ஆன் விரிவுரை தஃப்சீர் இப்னுகஸீர் (3 பாகங்கள்) ஆகியவற்றின் மொழிபெயர்ப்பில் இவரது பங்கு சிறப்பானது. இவரை மேலாய்வாளராகக் கொண்டு நபிகளாரின் பொன்மொழிகள் சுனனுந் நஸாயீ, முஸ்னது அஹ்மத் ஆகிய நூல்களை ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல மார்க்க அறிஞரானஅ.முஹம்மது கான் அவர்களின் மாணவர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.இஸ்லாமியரிடையே இஸ்லாத்தின் பெயரால் அமலாக்கப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், ஏக இறைநம்பிக்கைக்கு எதிரான இணைவைப்புச் செயல்கள் ஆகியவற்றைக் களைய முயலும் இஸ்லாமிய சமுக சீர்திருத்த அமைப்பிலும் இணைந்து சேவையாற்றிவருகிறார். மரியாதைக்குரிய மார்க்க அறிஞர் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கூறும் மார்க்க வழிகாட்டலில் ஈடுபாடு கொண்டவர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 1970 ஆம் ஆண்டு பிறந்தார். 7ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊரில் உள்ள ஃபைஜுல் பரகாத் அரபிக்கல்லூரியில் 3 ஆண்டுகள் பயின்றார். பிறகு வேலூரில் அமைந்துள்ள தென்னகத்தின் தாய்க் கல்லூரியான ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மவ்லவீ பாகவி பட்டமும் முதுநிலைப் பட்டமான ஃபாஸில் பட்டமும் பெற்றார். பின்னர் தூத்துக்குடியிலுள்ள மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியில் 5 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் அஃப்ஸலுல் உலமா (அரபிக் பி.ஏ.) பட்டயப் படிப்பும் படித்துள்ளார்.
தந்தையார் பெயர் சாலிஹ், தாயார் பெயர் ஆயிஷா. சகோதரர் ஒருவர் (ஷவ்கத் அலீ) சகோதரிகள் இருவர் மனைவிபெயர் சகீனா. இவருக்கு 2 பெண்குழந்தைகளும் 1 ஆண் மகனும் உள்ளனர்