P. A. Jayakaran
பா. அ. ஜயகரன்
தொகு1964 யூன் மாதம் கொழும்பு, இலங்கையில் பிறந்தார். ஆரம்பக்கல்வியை கொம்பனித்தெரு றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, பரமேஸ்வராக் கல்லூரி, திருநெல்வேலி சைவப் பிரகாச வித்தியாலம் ஆகியவற்றிலும் உயர்கல்வியை யாழ் இந்துக் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார். 1986ல் கனடாவுக்கு அகதியாகப் புலம்பெயர்ந்து தற்பொழுது ரொரன்டோவில் வசித்து வருகிறார். மொன்றியாலில் வசித்தபோது (1986-1989) கியூபெக் ஈழத்தமிழர் ஒன்றியத்தின் செயலாளராக பணிபுரிந்ததுடன் ஒன்றியத்தின் வெளியீடான தமிழ் எழில் சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராயும் செயலாற்றினார். அத்தருணம் சில கவிதைகளையும் 'தமிழ் எழில்' சஞ்சிகையில் எழுதியும் உள்ளார். 1989ல் நண்பர்கள் பலருடன் இணைந்து மாற்றுக் கருத்துக்கான சமூக அரசியல், கலை, இலக்கியத்திற்கான களமாக தமிழர் வகைதுறைவள நிலையத்தை (தேடகம்) ஆரம்பிப்பதில் பங்காற்றி தொடர்ந்தும் அதன் அங்கத்தினராக செயலாற்றி வருகிறார். நிலையத்தின் சஞ்சிகையான 'தேடல்' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலிருந்து செயலாற்றியதோடு அதன் பல இதழ்களில் கவிதைகளையும் எழுதியுள்ளார். நிலையத்தின் கலை நிகழ்வுகளில் பங்கெடுத்தபோது புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு அனுபவங்களை வெளிப்படுத்தும் நாடகப் பிரதிகள் இன்மையை உணர்ந்து நாடகப் பிரதிகளை எழுதத் தொடங்கினார்.இதுவரை 20வதற்கும் மேற்பட்ட நாடகப் பிரதிகளை எழுதியிருக்கிறார். 'என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள்', 'எல்லாப்பக்கமும் வாசல்' ஆகிய நாடக நூல்கள் வெளியாகியுள்ளன. கனடா, பிரான்ஸ், ஆஸ்த்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இவரது நாடகங்கள் அளிக்கை செய்யப்பட்டுள்ளன. 2001ல் "நாளை நாடக அரங்கப் பட்டறை" எனும் நாடக அமைப்பை ஆரம்பித்து அதன் இயக்குனராக செயலாற்றி வருவதுடன் பல நாடகங்களை தயாரித்து அளித்து வருகிறார். பல சிறு சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகளும் வெளியாகியுள்ளன. ஈழத்து கலைஞர்களின் தயாரிப்பில் வெளியான இசைத் தட்டுக்கள் சிலவற்றில் இவரது கவிதையில் எழுந்த பாடல்களும் வெளியாகியுள்ளன.
ஜயகரனின் பேட்டி
தொகுஎனது நாடகங்களை ஒவ்வொரு கவிதையாகவே எழுதுகிறேன்!"
நாடகாசிரியரும், கவிஞருமான பா.அ.ஜயகரனுடன் ஒரு நேர்காணல்!
(கனடாவில் நாடகமென்றால் பா.அ.ஜயகரனின் நினைவு வராமல் போகாது. அந்த அளவுக்குக் கனடாத் தமிழ் நாடக உலகில் காத்திரமான பங்களிப்பினைச் செய்தவர் , செய்து கொண்டிருப்பவர் ஜயகரன். கவிஞராகத் தன்னை ஆரம்பத்தில் வெளிக்காட்டிய ஜயகரன் தற்போது தன்னை நாடக உலகிற்கே அதிகமாக அர்ப்பணித்துள்ளதை அடிக்கடி இங்கு மேடையேற்றப்படும் நாடகங்கள் புலப்படுத்துகின்றன. 'எல்லாப் பக்கமும் வாசல்', 'இன்னொன்று வெளி', 'சப்பாத்து', 'பொடிச்சி' உட்படப் பல நாடகங்களை எழுதி மேடையேற்றியவர் ஜயகரன். தமிழில் காத்திரமான நாடகப் பிரதிகளில் இல்லாத குறையினை நீக்கும் முகமாக அவற்றினைத் தானே எழுதித் தயாரித்து மேடையேற்றும் ஜயகரன் பாராட்டிற்குரியவர். அவரை இம்முறை பதிவுகளிற்காகப் பேட்டி கண்டோம்.)
- ஆரம்பத்தில் மனவெளிக் கூடாக தங்களது நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. ஆனால் தற்போது நாடக அரங்கப் பட்டறை வாயிலாக அரங்கேற்றுகிறீர்கள். இது ஏதாவது பிளவுகளின் அறிகுறியா? அல்லது.....?
கனடாவில் தமிழ் நவீன நாடகத்துறைக்கு ஊற்றுகோலாய் இருந்தது தேடகம் அமைப்புத்தான். (தமிழர் வகைதுறைவள நிலையம் - தவநி). தவநி தான் எனது முதலாவது நாடகமான பொடிச்சியையும் இரண்டு புள்ளிகள் நாடகத்தையும் தயாரித்து அளித்தது. கனேடிய தமிழ் நாடக சூழலின் முனைப்புக்கு தவநிதான் முதற் காரணம். மனவெளி, நாளை நாடக அரங்கப் பட்டறை போன்றவற்றின் தோற்றத்திற்கும் தவநியே காரணம். நாம் எல்லோருமே தவநியின் அளிக்கைகளாலும், பட்டறைகளாலும் வளக்கப்பட்டவர்களே. எல்லாப்பக்கமும் வாசல் நாடகப் பிரதியை நு¡லாக தவநியே வெளியிட்டது. பிளவுகள், உடைவுகள் இவை அதீத நம்ப§க்கைளின் பின்னாலான அவலங்கள். நான் மனவெளி மீது அதீத நம்பிக்கைகளை வைத்து செயற்பட்டன் அல்ல. நான் அவர்களின் அங்கத்துவனும் அல்லன். ஆனால் நாடகங்கள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவன். அதனால் மனவெளி மீதும் அக்கறை கொண்டவன். மனவெளி நாடக விழா அமைப்பு. அது நாடக கர்த்தாக்களை அழைத்து நாடகங்களை அளிக்கிறது. எனது எல்லாப்பக்கமும் வாசல், இன்னொன்று வெளி நாடகங்களை மனவெளி தனது அரங்காடலில் அளித்தது. எனக்கும் மனவெளிக்குமான உறவு என்பது அது மட்டுமே. நாடகம் என்பது பற்றிய எனது ஈடுபாடும், ஆற்றுகைத் தளத்திற்கான சுதந்திரம் பற்றிய எனது கோட்பாடுகளும் வித்தியாசமானது. படைப்பிலக்கியவாதி, நாடக கர்த்தா என்ற வகையில் எனக்கான ஆற்றுகைத் தளம், ஆற்றுகைக்கான சுதந்திரம் முக்கியமானது. அதனால்தான் நாடக அரங்கப் பட்டறையை உருவாக்கினேன்.நல்ல நாடகர்களின் பக்க பலத்துடன் அது அளிக்கைகளை வழங்கி வருகிறது. கருத்து ரீதியான முரண்கள் எப்போதும் எல்லோருக்கும் உள்ள விடயங்கள்தானே. அதையும் மீறி சுயமான ஆற்றுகையின் வெளிப்பாடே நாளை நாடக அரங்கப் பட்டறை. அதன் முதல் அளிக்கைகள் கடந்த யூன் 9,10 திகதிகளில் இடம் பெற்றன. எல்லாப் பக்கமும் வாசல், எதிர்க் காற்றினிலே, சொல்லின் ஆழத்துள், மீறல்- முதல்வர் வீட்டு நாய், மீறல் - இரசிகன் ஆகிய நாடகங்களை அளித்தோம். மிகுந்த வரவேற்பைப்பெற்ற நிகழ்வாயும், மாற்றீடான அரங்க அளிக்கைத் தரத்தையும் அது கொண்டிருந்தது. அளிக்கைக்கு புத்துயிப்பாய் இருந்தவர்களான டிலீப்குமார், பாபு பரதராஐ¡, ரெஜி மனுவல்பிள்ளை, பாலன் திருநாவுக்கரசு, சுமதி ரூபன், சத்தியா தில்லைநாதன், தான்யா தில்லைநாதன், சிவம் சிவலோகநாதன், கா¢காலன் போன்றோரை இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் மேலும் பல நாடக இயக்கங்கள் தோன்ற வேண்டும் நாடகத்திற்கான முன்னெடுப்புகள் இடம்பெறவேண்டும். அப்போதுதான் தமிழில் காத்திரமான நாடகத் துறையை வளர்த்தெடுக்க முடியுமென்று கருதுகிறேன். நாளை நாடக அரங்கப் பட்டறை தமிழ் நாடகத் தேடலின் இன்னுமொரு தடம்.
கவிஞரான தாங்கள் அண்மைக் காலமாக நாடகத் துறைப் பக்கம் கவனம் செழுத்தியிருக்கிறீர்கள். அத்துறையில் பெயர் சொல்லுமளவுக்கு காத்திரமாக கால் பதித்தும் உள்ளீர்கள். நாடகத் துறை உங்களை ஈர்த்ததன் காரணம் என்ன?கவிதைகளை எழுதுபவர்கள் எல்லோரும் கவிஞர்களா? நான் கவிதைகள் சில எழுதியுள்ளேன்.ஆனால் கவிஞன் அல்லன். கவிதைகளை எழுத முன்பே நாடகத்திற்கான ஈடுபாடு இருந்தது. திருநெல்வேலியில் வாழ்ந்த காரணத்தினால் பல நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. யாழ் வளாகத்துள் நடந்த பல நாடக முயற்சிகளை சிறு வயதிலிருந்து பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. நாடக அரங்கக் கல்லு¡ரியின் அளிக்கைகளையும் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அத்துடன் நண்பர்களுடன் சேர்ந்து நாடகங்களை ஆக்கவும், நடிக்கவும் முடிந்தது. பின்னர் 1980 களில் நிலவிய போருக்குள் வாழ்வும் அதன் கலை வெளிப்பாடுகளும் என்னை ஈர்த்தன. புலம்பெயர்வ§ன் பின்னாலான தேடகத்தின் பணிகளும் என்னை நாடகத்தின் ஈடுபாட்டை செழுத்தத் து¡ண்டியது. தேடகத்தின் நாடகப் பட்டறைகளையும், கல்வி வட்டங்களையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அத்துடன் 1990ம் ஆண்டு தேடகத்தின் கலை நிகழ்வுக்காக நாடகமொன்றை எழுதினேன். அதுதான் எனது முதலாவது நாடகம். அது அரங்கேறவில்லை. பின்னர் அப்பிரதியை காத்திருப்பு எனும் நாடகமாக சுருக்கினேன். போர்க்காலத்தில் போருக்குப் போன மகனுக்காய் காத்திருக்கும் தாய் பற்றிய நாடகம் அது. 1980 களை எமக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
தமிழ் நாடகங்கள் பெருமளவில் பழகிப்போன பாணியிலே மைந்திருக்கும். ஆனால் மனவெளி, நாடக அரங்கப் பட்டறை நாடகங்கள் கனடாத் தமிழ் நாடகத் துறையை நவீனமயப்படுத்தி வருகின்றன .தங்களது நாடகங்கள் இப்படித்தானிருக்கவேண்டும் வரையறைக்குள் தயாரிக்கிறீர்களா? நாடகத்திற்கு கூறும் பொருள் முக்கியமா? வடிவம் முக்கியமா?
நான் முதலே குறிப்பிட்டது போல தவநிக்கு முதன்மைப் பங்குண்டு. நவீனத்தின் மீது ஈடுபாடு கொண்ட கலைஞர்களின் நாடகங்களுக்கு மனவெளியும் அரங்கமைத்துக் கொடுத்தது. அதன் ஆரம்பகர்த்தாக்களின் பங்கும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக பாபு, டிலிப்குமார், சபேசன், சிவம், பாலன், புராந்தகன், செல்வன் ஆகியோரின் உழைப்பு முக்கியமானது. இவர்களில் பலரும் தவநிக்கூடாக வெளிவந்தவர்கள்தான். மனவெளிக்கு என்று ஒரேயொரு பாணி உண்டு... அது நவீன நாடகங்களை மட்டும்தான் அளிக்கிறது என்று கூற முடியாது. மனவெளியை அரங்காடலில் போடும் நாடகங்கள்தான் தீர்மானிக்கிறது. குறிப்பாக ஞானம் லம்பேர்ட் மேற்கத்திய நாடக மேதைகளின் பல நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்து அரங்காடலில் வழங்கியிருந்தார். இவரின் பங்களிப்பு மனவெளிக்கு சீரிய நாடகத்திற்கான இயக்கம் என்ற அங்கீகரிப்பைக் கொடுத்தது. அதன் பின்பு எனது அரங்க முயற்சிகள் மற்றும் விக்னேஸ்வரன், புராந்தகன், சாந்திநாதன், நவம், செழியன், சேரன் போன்றவர்களின் அரங்க முயற்சிகளையும் குறிப்பிட முடியும். அந்த அங்கீகரிப்பு மனவெளிக்கு ஆபத்தையும் கொடுத்தது. அதை அவர்களால் தக்க வைக்க முடியவில்லை. ஏனெனில் நாடகங்களுக்காக அரங்காடல் என்று இல்லாமல் அரங்காடல் நடைபெறவேண்டும் என்பதற்காக நாடகங்களை நிறைக்க முற்பட்டது. சீரிய நாடகங்கள் குறித்தான குழப்பங்கள் மனவெளி குழுவுக்கு ஏற்பட்டது. எனவே போடும் நாடகங்களைப் பொறுத்து மனவெளியும் அங்கும் இங்கும் என்று ஊசல் ஆடிக் கொண்டிருக்கும்.மனவெளி என்பது தீவிர நாடகத்திற்கான இயக்கம் என்பதை விட, மனவெளி நாடக விழா அமைப்பு அது தீவிர நாடகங்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்கிறது என்பதே சாலப் பொறுத்தமாய் இருக்கும். இச் சந்தர்ப்பத்தில் நாடக அரங்கப் பட்டறையை வேறுபடுத்திப் பார்க்க விரும்புகிறேன். எமது பட்டறையின் செயற்பாட்டு வடிவம் வித்தியாசமானது. பட்டறையின் நெறியாளராகவும் நாடக எழுத்தாளராகவும் நான் தொழிற்படுகிறேன். இப் பட்டறைக்காக நாடகத்தின் பல்வேறு பரிமாணங்களை உள்ளடங்கியதான கலைஞர்களை பட்டறை மூலம் வளர்த்து ஒரு கூட்டமைப்பின் ஊடாக அள§க்கைகளை வழங்குவது என்பதே பட்டறையின் நோக்கு. இதற்காக நாடகப் பட்டறைகளை அளிப்பது என்பது எமது முதன்மையான பணியாய் உள்ளது. எமது பட்டறையால் போடப்படும் நாடகங்கள் பட்டறைக்குறியது என்ற தற்பெருமையைக் கொண்டிருக்கும். இனி நவீனம் என்பது இடக்கான சொல். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரையறையை நவீனத்துக்கு கொடுக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் ஒரு நவீன படைப்புக்கும் வாசகர்கள் அல்லது பார்வையாளருக்கிடையே ஒரு சிந்தனை வெளியொன்று உண்டு. அந்த சிந்தனை வெளியை நிரப்பவேண்டிய கடப்பாடும், ஆர்வமும் பார்வையாளருக்கும், வாசகருக்கும் இருக்கவேண்டும். வெளி சுருங்கச் சுருங்க நவீனத்துடனான ஈடுபாடும் அதிகரிக்கிறது. நவீனம் குறித்தான ஈடுபாடும் வலுவுறுகிறது. எனது நாடகங்களில் அவ்வகையான சிந்தனை இடைவெளி நிறையவே உண்டு. நாடகங்கள் பார்வையாருக்கான பார்வைச் சுவையை வழங்கும் அத்துடன் சிந்திப்பதற்கு நிறையவே உண்டு. கூறுபொருள், வடிவம் இரண்டுமே நாடகத்திற்கு முக்கியமானது. எனது நாடகங்களில் கூறுபொருளுக்கு ஏற்ப வடிவமும் உள்வாங்கப்படுகிறது. நாடகம் என்பது பார்வைக் கலையென்பதால் வடிவம் நாடகத்தின் பொருளை பார்வையளரிடம் கொண்டு செல்வதற்கு பயன்படுகிறது. நாடகம் என்பது உணர்வுகள் உள்ள மனிதர்களின் வெளிப்பாடு. எனவே வார்த்தைகளாயும், கவிதைகளாயும், பாவங்களாயும், மெளனங்களாயும், ஆடல்களாயும், பாடல்களாயும் நாடகவெளி நிறைகிறது.
நாடகமொன்றின் வளர்ச்சியென்பது பாத்திரங்கள், உரையாடல்களுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அரங்க அமைப்பு, ஒளி, ஒலி யென்று பல்வேறு விடயங்கள் அதன் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. கனடாத் தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் பாத்திரங்கள், உரையாடல்கள் வளர்ச்சியடைந்த அளவிற்கு ஏனையவை வளர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை. பொருளாதாரம்தான் அடிப்படைக் காரணமா?
எமது நாடகங்களைப் பொறுத்தவரையில் போதிய மேடை அமைப்பு, ஒலி, ஒளி, ஒப்பனை என்பன போன்ற நாடக அளிக்கைக்கான ஏனைய கூறுகளையும் உள்வாங்கியே நிகழ்த்தப்படுகிறது. அரங்காடலிலும் போதியளவு கவனம் செழுத்தப்படுகிறது. நாம் எல்லோருமே முழு நேர நாடகர்களோ, நாடக இயக்கங்களோ அல்ல. அதாவது எமது நாளாந்த வாழ்வுக்கு இன்னும் நாடகம் தீனி போடவ§ல்லை. அதனால் நாடகத்தின் பல்வேறு பரிமாணங்களை வளர்ப்பதும் கலைஞர்களை வளர்ப்பதிலும் பல சிக்கல்கள் உள்ளன. இவ் வகையான குறையை நிவர்த்தி செய்யும் போக்குடனே பட்டறையை ஆரம்பித்தோம். நம்பிக்கையும் உண்டு. என்னைப் பொறுத்த மட்டில் போதியளவு அரங்கப் பயன்படுத்துகிறேன். பொருளாதார சிக்கல் எப்போதும் உள்ள பிரச்சினைதான். கலையார்வம் கொண்ட வியாபார பிரமுகர்களின் உதவி எமக்கு தொடர்ந்தும் கிடைப்பதால் வருடத்தில் ஒரு நிகழ்ச்சியையாவது ஒழுங்கு செய்யக் கூடியதாய் உள்ளது. நாடக அரங்குகளை விடுத்து கல்லு¡ரி அரங்குகளில் நாடகங்களை நிகழ்த்தும் போது பல்வேறு சிக்கல்களை நாம் எதிர் நோக்குகிறோம். அதனால் நாம் நினைக்கும் அளிக்கைத் தரம் அங்கு அமைவதில்லை. அங்கு நாடகம் பார்க்கும் தீவிர நாடக ஆர்வலர்களுக்கு நாடகத்தின் அளிக்கைத் தரம் சிக்கலாய் இருக்கும். எனவே ஒரு சின்னச் சேதி நாம் நாடக அரங்குகளில் அளிக்கைகளை செய்யும்போது வந்து பார்த்து விடுங்கள்.
மேடையேற்றவிருக்கும் தங்களது நாடகங்களைப்பற்றி சிறிது கூறுங்களேன். நான் இதுவரையில் 20 ற்கும் மேற்பட்ட நாடக பிரதிகளை உருவாக்கியுள்ளேன். இவற்றில் சில குறு நாடகங்கள். இது வரையில் பொடிச்சி, எல்லாப்பக்கமும் வாசல், இன்னொன்று வெளி, இரண்டு புள்ளிகள், சொல்லின் ஆழத்துள், காலம் ஓடுது, எதிர்க் காற்றினிலே, முதல்வர் வீட்டு நாய், இரசிகன், சப்பாத்து போன்ற நாடகங்களை அளித்துள்ளேன். எனது அடுத்த வருடத்துக்கான நாடகம் 'குளிக்குளிருந்து மீள்வதாய்'. ஒரு மாபெரும் அவலத்துக்குள்ளால் தப்பிய ஜவர் ஒரு நிலவறைக்குள் தஞ்சமடைகின்றார்கள். அவலம் வெளியில் தொடர்கிறது. இந்த ஜவரின் இருப்புக்கான போராட்டம் நாடகமாகிறது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேர வாழ்வின் மீதான விவாதம்தான் இந் நாடகம். உலகளாவிய விவாதத்தை தன்னுள் உள்வாங்கியிருக்கிறது இந் நாடகம். இந்த நாடகத்தை 1999 ல் எழுதி முடித்தேன். இன்றைய அரசியல் நிலவரங்களைப் பார்க்கும் போது இன்னும் நாடகத்துடன் ஐக்கியமாகக் கூடியதாயிருக்கும். அவலத்தில் இருந்து மீண்டு இன்னொரு அவலத்துள் வீழ்ந்து விட்டோமா?
வழக்கமான கேள்வியொன்று... இத்துறையில் ஈடுபட விரும்புவர்களுக்குத் தங்களது அறிவுரையென்ன? இதுவரை காலக் கனடாத் தமிழ்நாடக வளர்ச்சிபற்றிய தங்களது மதிப்பீடு என்ன?
நான் அறிவுரைகளை போதிக்கும் சாமியார் அல்ல. எனது சுயம்பற்றிய தேடலும், எனது வாழ்வு பற்றிய கேள்விகளும் என்னையொரு நாடக கர்த்தா ஆக்கியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடகங்கள் பார்ப்பேன். வாசிப்பேன். என்னைச் சூழ்ந்த மனிதர்களை உன்னிப்பாய் நோக்குவேன். இவைகள் பிற்காலம் நாடகத்தின் பாத்திரங்களாக உருவாக்கம் கொள்கின்றன.கனடா நாடகங்கள் பற்றிய எனது மதிப்பீடு: புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடு என்பதால் பல்வேறு முயற்சிகளுக்கு முனைப்பாய் கனடா இருக்கிறது. இதில் காத்திரமான நாடங்களின் வருகையும், சீரிய நாடகங்கள் மீதான ஆர்வலர்களும் இங்கு குறிப்பிடும்படியாக உள்ளது.பொதுவாக ஈழத்து நாடகங்கள் எனும் போது சீரிய நாடகங்களே அதன் பிரதான போக்காயும் உள்ளது. மேற்கத்திய பாணி நவீன நாடகங்கள் என்ற வகையில் கனடாவில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் இடம் பெறுகின்றன. தரமான நாடகங்கள் வெளி வந்துள்ளன. நல்ல நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தோன்றியுள்ளார்கள். நல்ல நெறியாளர்கள், நாடக எழுத்தாளர்கள் வந்துள்ளார்கள். இவ்வகையான முனைப்பின் பயனாய் தமிழ் நாடகத் துறைக்கு பயனுள்ள விடயங்கள் கிடைத்துள்ளன. இவைகள் ஏனையோருக்கும் பரவும்வகை செய்ய வேண்டும். கனடாவில் தமிழ் மரபு நாடகங்கள் குறித்தான செயற்பாடுகளும், அது குறித்தான பிரக்ஞையும் அற்றே காணப்படுகிறது. இது தமிழ் சமூகத்துக்கு உள்ள ஒட்டுமொத்தமான குறை. எமது பாரம்பரிய நாடக மரபு என்பது மிகவும் ஆழமானதும், பல்வேறு உயரிய நாடக பண்புகளால் வளர்க்கப்பட்டு வந்ததும் ஆகும். அதை தமிழர்களிடம் ஊன்றவிடாமல் இருந்த காரணிகளை அகற்றி மீண்டும் எமது கூத்துக் கலைகளுக்கு புத்துயிர் வழங்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் எமது இன்றைய நடப்புகளை, எமது நாளாந்த சிக்கல்களை இவ் கூத்துக் கலைகளுக் கூடாக மிகவும் உன்னதமாக வெளிப்படுத்த முடியும். கூத்துகள் குறித்த ஆழமான அறிவின்மையால் பிரதிகள் ஆக்க முடியாத வேதனை என் ஆழ் மனதில் உண்டு. தமிழர்களின் பிரதான வெளிப்பாட்டுக் கலையை அழியவிட்டுவிட்டு நாம் நவீனம் படைக்கிறோம் என்று பீற்றுவதில் எந்தப் பயனும் இல்லை. பாரம்பரியம் என்பது மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது என்ற மனப்பாங்கு எம்மத்தியில் மாறவேண்டும். புதிய அகராதிகள் கலைகளுக்குள் உள்வாங்கப்பட வேண்டும். தமிழ் சமூகமும், தமிழர் சார்ந்த அரசுகளும், நிறுவனங்களும் இது குறித்து செயலாற்ற வேண்டும். கூத்து குறித்தான பட்டறையை நடாத்துவதிற்கு நாமும் முயன்று வருகின்றோம்.
தொடர்ந்தும் நாடகத்துறையில்தான் அதிகமான கவனத்தை வைத்திருப்பீர்களா? அல்லது கவிதைப் பக்கமும் பார்வையைத் திருப்புவீர்களா?
எனது நாடகங்களை ஒவ்வொரு கவிதையாகவே கருதுகிறேன். கவிதைக்குறிய கனகச்சிதம் நாடகத்திற்கும் இருக்கவேண்டும் என்பதே எனது நிலை. கவிதையை எழுதுவதற்கான காலத்தில் ஒரு நாடகத்தைப் படைத்துவிடலாம் என்பதே எனக்கு இயல்பாய் இருக்கிறது. நான் கவிஞர்களை குறிப்பிடவில்லை. ஒவ்வொரு நாளும் பல கவிதைகளை எழுதிக்குவிக்கும் கவிஞர்கள் இருக்கிறார்கள் தானே. அவர்களைப் போல் நாடகங்களை எழுதிக் குவிக்க முடியாது. நாடகமே எனது துறையாக உணர்கிறேன். அதில்தான் கூடிய கவனத்தைச் செழுத்த முயற்சிக்கின்றேன்.
கவிஞர், நாடகாசிரியர், நல்தொரு மேடைப் பேச்சாளர் என பல்பரிமாணங்களில் அறியப்பட்ட தங்களது எதிர்காலத்திட்டங்கள் என்ன?பட்டறையின் நோக்கங்களை செயல்படுத்த முயற்சிக்கின்றேன். பரந்துபட்ட தமிழர் பரம்பலில் நாடக கலைஞர்களுக்கான ஒர் அமைப்பும் அதற்கூடாக பரஸ்பர பரிமாற்றங்களையும் செய்யவேண்டுமென்பது எனது அவா. பலவற்றை அறியவும், கற்கவும் வழி பிறக்கவேண்டும். இயலுமானவரை நாடகங்களை எழுதுவது அவற்றை அளிக்கை செய்வது. நாம் மிகவும் நெருக்கடியான வாழ்க்கையோட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். குறிப்பாக முதலாளித்துவத்தின் வயிற்றுக்குள் சீவிப்பவர்கள். முதலாளித்துவத்திற்கு சக்தி தேவைப்படும் போதெல்லாம் நாம் சமிக்க வேண்டியுள்ளது. அந்த நெருக்கடிக்குள்ளிருந்து இவ் வகையான நாடக அளிக்கைகளை தருவதென்பது மானிட ஓர்மம்தான். கலைகள் மானிடத்தை நிமிர்த்தும், மானுடத்தை மீட்கும் என்ற நம்பிக்கையும் என்னைப் பின் தொடர்கிறது. அது ஒரளவேணும் என்னை சோர்வடையாமல் வைத்திருக்கிறது.
சந்திப்பு: ஊர்க்குருவி- பதிவுகள் டிசம்பர் 2001 இதழ் 24.
நாடக விமர்சனம்
தொகு'உங்கள் வரவு நல்வரவாகட்டும்'
செப்படம்பர் 24-25, 2016, பாரிஸ் நாடக ஆர்வலர்களுக்கு குறிப்பிடத்கக்க நாட்களாக அமைந்தன. உலகத் தமிழ் நாடக விழா முதன் முறையாக கருக்கொண்டிருந்தது. தமிழ்சார் உலகின் பலபாகங்களிலுமிருந்தும் வருகை தந்திருந்த நாடக ஆளுமைகளின் ஒன்றுகூடலாகவும், அவர்களின் கலைப் வெளிப்பாடுகளுக்கான களமாகவும் இவ்விரு நாட்களும் அமைந்தன. இவ் விழாவை ஒருங்கமைத்த அமைப்பாளர்களுக்கு முதற்கண் எனது வாழ்த்துக்கள்.
இவ் விழாவில் என்னை மிகவும் கவர்ந்த நாடகமாக பா. அ. ஜயகரனின் 'உங்கள் வரவு நல்வரவாகட்டும்' அமைந்தது. பா. அ. ஜயகரன் தமிழில் குறிப்பிடத்தக்க நாடகாசிரியராகவும், நெறியாளராகவும் அறியப்பட்டவர். கனடாவில் இதுவரை 15 நாடகங்களை எழுதி மேடையேற்றியுமுள்ளார். அவரின் 'எல்லாப் பக்கமும் வாசல் (1998)' என்ற புத்தக வடிவில் வந்த நாடகத்தை மட்டுமே நான் வாசித்திருந்தேன். இது புலம்பெயர் சூழலில் உருவான மிக முக்கிய படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவரின் 'என்னை விசாரணைக்குட்படுத்துங்கள்' என்ற நான்கு நாடகப் பிரதிகளடங்கிய நூலும் வெளியாகியிருக்கிறது. 'உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்ற நாடகமே நான் பார்த்த அவரின் முதல் நாடகம். அவரைப்பற்றி அறிந்திருந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புடனேயே இவ் நாடகத்திற்கு சென்றிருந்தேன். அந்த எதிர்பார்ப்பில் எவ்வித பங்கமும் நிகழவில்லை என்பதில் மகிழ்ச்சி. பல்வேறு இரசனைப் பின்னணி கொண்ட பார்வையாளர்கள் அடங்கிய மண்டபத்தில், இவ் நாடகம் அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்திருந்தது என்பதை நாடகத்தின் அளிக்கையின்போதும், அதன் பின்னரான பார்வையார்களின் கருத்துகளின் போதும் அறியக்கூடியதாகவிருந்தது.
அரங்கம் நவீன நாடகத்திற்கான அரங்கமாக அமையவில்லை என்ற குறைபாடு இருப்பினும் மேலதிக ஒலி, ஒளி அமைப்புகள் பிரெஞ்ச் தொழில்நுட்பவியலாளர்களைக் கொண்டு செய்யப்பட்டிருந்தது. நாடக முடிவில் ஜயகரனுடன் உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது. தனது நாடகங்கள் மேற்கத்தைய நவீன நாடகங்களுக்கான அரங்குகளிலேயே முதலில் மேடையேறுவதாகவும், பின்னர் சிலரது அழைப்புகளையேற்று கல்லூரி அரங்குகளிலும் சில நாடகங்களை மேடையேற்றியிருப்பதாகவும் தெரிவித்தார். பயிற்றப்பட்ட நடிகர்கள் பங்களிப்பதால் மேடை மாற்றங்களை கவனத்தில் எடுத்து நாடகத்தை அளிக்கக்கூடியதாய் இருந்ததாக கூறினார். பாத்திர இயங்கு தளம் தெரிவு செய்யப்பட்டு ஒளியமைப்பினால் மேடையை சுருக்கியதாகவும் குறிப்பிட்டார்.
'உங்கள் வரவு நல்வரவாகட்டும்' நாடகம் 2003ல் எழுதப்பட்ட பிரதி. கனடாவிலிருந்து வெளிவரும் 'ழகரம்' இதழில் குறு நாடகமாக சுருக்கி 2016ல் வெளியிடப்பட்டிருந்தது. நான்கு பாத்திரங்களைக்கொண்ட பிரதி மூன்று பாத்திரமாக மாற்றப்பட்டு மேடையேற்றியதாய் ஜயகரன் தெரிவித்தார். மூன்று பாத்திரங்களுடன் சமகால அகதிகள் குறித்த பிரச்சினைகளையும் அதன் பின்னால் இயங்கும் அரசியல் குறித்தும் மிகவும் ஆழமாகவும், அங்கதத்துடனும் நெய்யப்பட்ட பிரதி. அகதிகளாக புலம்பெயர்ந்த மக்களாகிய தமிழர்களது மனதில் இவ் நாடகம் மிகவும் நெருக்கமாய் இருந்தமைக்கு கருவே காரணம். குறிப்பாக அமெரிக்கா, கனடா, அவுஸ்த்திரேலியா போன்ற நாடுகளில் பூர்வீக குடிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், மேற்கத்தைய அரசியல், பொருளாதார நலங்களுடன் உள்நாட்டுப் போர்கள் எவ்வாறு நகர்த்தப்படுகின்றன, பொருளாதாரச் சுரண்டல்களுக்காக அகதிகள் எவ்வாறு பாவிக்கப்படுகிறார்கள், மேற்குலக மனிதாபிமானத்திற்கு பின்னால் உள்ள குரூரம் என பல ஆழமான விடயங்களை சொற்ப நேரத்தில் பார்வையாளர்களிடம் சென்றடையச் செய்தமை அளிக்கையின் வெற்றி. நாடகம் முடிந்த பின்னரும் பாத்திரங்கள் மனதில் அலைந்து திரிந்தன. இப் பிரதி உள்ளார்ந்தமாகவும், வெளிப்படையாகவும் கனதியான அரசியலைப் பேசியது. கனதியான விடயங்களை இலகுவாக பார்வையாளருக்கு சென்றடையக்கூடியதாய் நாடக அளிக்கையை தர முடியுமென இவ் நாடகம் வெளிக்காட்டியிருந்தது. வெறுமனவே திரும்பக் கூறலும், நவீன நாடகத்தின் தன்மைகளை உள்வாங்காது திடீர் அளிக்கைகளை நாடகம் என்று கொலை செய்யும் புலம்பெயர் நாடகர்களுக்கு இவ் நாடகம் ஒரு பாடமாக அமைந்தது.
இருள்-சென்னிற ஒளி மேடையில் கவிகிறது. மேடையில் நிறைந்திருந்த பொதிகள் வந்திறங்கும் அகதிகள் காவப்போகும் சுமைகளை சுட்டி நின்றன. அவுஸ்த்திரேலிய பூர்வீக குடிகளின் இசை ஒலிக்கிறது. முதியவர் ஆடியபடி பொதிகளைப் பார்த்தும், கடந்தும் காட்சிக்கு வருகிறார். பின்னர் யாரையோ எதிர்பார்த்து இருப்பதுபோல் ஒரு பாறையில் அமர்கிறார். 'வடக்கு தெற்காய் கிழக்கு மேற்காய் விரியும் இந்தத் தேசம் உங்களை வரவேற்கிறது... சட்டத்திற்கு முன் அனைவரும் சமானம்.. மனிதவுரிமை சாசனம் உங்கள் உரிமைகளை காக்கும்.. வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்' எனும் வரவேற்பின் பின்னர் ஒரு வயோதிபரும், இளம் பெண் ஒருவரும் முதுகில் சுமையுடன் அதிகளாய் வந்திறங்கி புதிய நிலத்தை பார்க்கிறார்கள். இதிலிருந்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பார்வையாளரை கட்டுக்குள் வைத்திருந்தது இவ் நாடகம். இறுதியில், பொதிகளை சுமந்து வீழ்ந்து கிடக்கும் அகதிகள்... மீளவும் எழும் அகதிகளுக்கான 'உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்ற வரவேற்பு ஒலி.. சினத்துடன் வரும் பூர்வீகர், வயோதிபர் மீது கிடக்கும் பொதிகளை தூக்கி வீசி அவரைத் தூக்குகிறார். பின்னர் இருவரும் சேர்ந்து பெண்ணின் மீதிருக்கும் சுமைகளை அகற்றுகிறார்கள். அவரை தூக்குகிறார்கள். பின்னர் மூவரும் இணைகிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் இணைவை, இணைந்த போராட்டத்தின் தேவையை முன்னிறுத்தி நாடகம் முடிகிறது.
நாடகர்களின் உடல் மொழி சிறப்பாகவிருந்தது. பார்வையாளர்களை கட்டுக்குள் வைத்திருப்பதென்பது இலகுலானதில்லை. அது மிகச் சிறந்த நடிகர்களால் கடும் பயிற்சியினாலேயே சாத்தியமாகும். அங்கிருந்து ஒலி வசதியை தவிர்த்து தங்கள் குரல்களின் நம்பிக்கையோடு அரங்கேறியிருந்தார்கள். அரங்கில் பின்னால் அமர்ந்திருந்த எனக்கு மிகவும் தெளிவாக வசனங்களை கேட்கக்கூடியதாயிருந்தது. நாடகத்தோடு தகுந்த இடங்களில் ஆரவாரங்காளாலும், கரகோசங்களாலும் பார்வையாளர்கள் ஒன்றிப்போயிருந்தார்கள். முகநூலில் வெளி வந்திருந்த பல கருத்தூட்டங்களில் நாடக வசனத்தை பலரும் எழுதியிருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
வயோதிபராக நடித்திருந்த திரு. களப்பூரான் தங்கா மிகவும் பண்பட்ட நடிகர். மண்சுமந்தமேனியர் போன்ற நாடகங்களில் செயற்பட்டவர். சிறந்த வடிமோடிக் கூத்துக் கலைஞன். பல முன்னணி ஈழத்து நெறியாளர்களால் அடையாளம் காணப்பட்டவர். வசீகரிக்கும் குரல் கொண்டவர். அவரின் முகபாவமும் குரலின் தொனி ஏற்ற இறங்கங்களும் ஒரு சிறந்த கலைஞனை எம் முன்னே நிறுத்தியது. பெண் நடிகர் சத்யா தில்லைநாதன். இவர் கனேடிய தமிழ் நாடகச்சூழலில் நன்கு அறியப்பட்டவர். பண்பட்ட நடிகை. குறும் படங்களிலும் நடித்தும் இருக்கிறார். போரில் குண்டடிபட்டு தன் குழந்தைத் தங்கை இறந்ததை சொல்லும் காட்சி சிறந்த நடிகைக்கான சாட்சி. 'உங்கள் ஊரில் குழந்தைப் போராளிகள் உள்ளார்களே என்று அவள் (அதிகாரி) கேட்டாள்.. குழந்தைகள் ஆயுதங்களை செய்வதில்லையே என்றேன்' போன்ற வசனம் வரும் தருணங்களில் பார்வையாளர்கள் தங்கள் கரகோசத்தால் பாராட்டைத் தந்தார்கள். ஏனைய இரு பண்பட்ட ஆண் நடிகர்களுக்கு ஈடாக சத்யா நடித்திருந்தார். பூர்வீகராக நடித்திருந்தவர் நெறியாளர் ஜயகரன். அவரின் பன்முகப்பட்ட திறமை வெளிப்பட்டது. 'ஆயுதங்களைச் செய்.. குண்டுகளைப் பொழி.. நிலத்திலிருந்து சிதறியடி. ஓடு..ஓடு ஓடுபவர்கள் எல்லைகள் அறியார். யாருடையது நிலம்..? யார் வரவேற்பாளர்கள்..?' என்றபடி அவர் மேடைக்குள் நுழைந்ததும் அரங்கம் அமைதி கொண்டது. பிரதி, நடிப்பு, நெறியாள்கை உன்னதமே 'உங்கள் வரவு நல்வரவாகட்டும்' எனும் நாடகம். உலகத் தமிழ் நாடக விழாவில் இவ் நாடகமே முத்தாப்பாய் இருந்தது என்பதே அனைவரதும் கருத்தும்.
'போர், புலம்பெயர்வு, மேற்குலக வாழ்க்கை போன்ற சமகால நிகழ்வுகளின் தாக்கத்தினால் பாரிய அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார மாற்றங்களுட்பட்டிருக்கும் எமது சமூகத்தில் புதிய நாடகப் பிரதிகளுக்கான தேவை அழுத்தம் பெறுகிறது. இப்புதிய வாழ்வனுபவத்தை வசப்படுத்தவும், தமிழ் அரங்கை வளர்த்துச் செல்லவும் புதிய மூலப் பிரதிகள் அவசியம் என்பதை அதிகம் வலியுறுத்தத் தேவையில்லை.' என்று 'எல்லாப்பக்கமும் வாசல்' புத்தக முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போன்று அவரது பிரதிகள் எம் வாழ்வு அனுபவங்களை வசப்படுத்தி புதிய பிரதிகளாய் அளிக்கைகளாய் வெளிவந்திருக்கின்றன. எனது கனேடிய நண்பர்களின் கருத்துகளின்படி அவரின் படைப்புகளில் தனித்துவமும், கலைத்துவமான வெளிப்பாடும் எப்போதும் இருக்குமென குறிப்பிட்டிருந்தார்கள். நாடகத்தை தயாரித்து வழங்கிய கனேடிய 'நாளை நாடக அரங்கப் பட்டறை' யினருக்கும், நாடகர் பா. அ. ஜயகரனுக்கும், இவர்களை விழாவுக்கு அழைத்து எமக்கு நல்ல நாடக அளிக்கையைத் தந்த விழா அமைப்பாளர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்தும். தொடரட்டும் உங்கள் பணி. மேலும் ஜயகரனிடமிருந்து படைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.- ' உடல்' நாடக சஞ்சிகை June 2017
ஜயகரனின் நாடகங்கள்
தொகு- பொடிச்சி (1997)
- இன்னொன்று- வெளி (1999) நாடகம் 99ல் அரங்காடலில் முதலில் மேடையேறியது. மீள் மேடையேற்றம் 2003. Each has his or her own space, a secluded one, of course. If one disappears, another one takes its place. This play questions our socio-political structure and analyses the slow death of aristocracy and its attendant feudal mentality that still tries to cling on to the dying values of the old structure even in adopted country. Enclosure - A Play (1999) July 19, 20 -2003 ஈழத்தின் பிரபல கலைஞர்களில் ஒருவரான கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களுடன் ' இன்னொன்று-வெளி' நாடகத்தில் பணியாற்றிய தருணங்கள் நல்லவொரு அனுபவம். அவருக்கேயுரிய பாணியில் தனது நாடக அனுபவங்களைச் சொல்லுவார். அது ஒரு இனிமை. அனுபவமிக்க நடிகர்களுடன் வேலை செய்யவது என்பது எங்களுக்கான கற்கையும்தான். பாத்திரத்தை உள்வாங்கும் கச்சிதம்... வெளிப்படுத்தும் தன்மை... அரங்கக் கலைஞர்கள் அவர்களிடமிருந்து கற்றக்கொள்ளவேண்டியது. அவர் தேடலும் வாசிப்பும் நிறைந்த கலைஞர். இலங்கையில் தனிநபர் நகைச்சுவை நிகழ்வின் முன்னோடி அவர். இன்றுவரை எல்லோரினாலும் இரசிக்கப்படும் 'அண்ணை ரைட்' நிகழ்வின் ஆக்ககர்த்தா. இந்தப் படைப்பு அரங்க நிகழ் கலையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 'இன்னொன்று-வெளி' நாடகத்தின் பிரதியாக்கம் முடிந்த பிற்பாடு, அதன் முக்கியபாத்திரமான செல்லையா மாஸ்டர் பாத்திரத்திற்காக திரு. கே. எஸ். பாலச்சந்திரனை அணுகுமாறு தயாரிப்பாளர்களை கேட்டிருந்தேன். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டார். அது மிக்க மகிழ்ச்சியாகவிருந்தது. நாடகத்தின் தரமான வெளிப்பாட்டுக்கு அவரின் பங்களிப்பு உன்னதமானது.
- ஒரு காலத்தின் உயிர்ப்பு (2006) ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஒவ்வொருவரும் ஏதோவொன்றிலிருந்து ஒதுங்க முயற்சிக்கின்றோம். வாழ்வில் அவநம்பிக்கை ஏற்படும்போது ஒதுங்கிற இடம் நம்பிக்கையைத் தருகிறது' இந்த மனிதர்களின் சிக்கல்களோடு ஒரு காலம் உயிர்க்கிறது. At certain times in our lives, for different reasons, we try to retreat and take refugee in a safe haven. When life becomes despondent, this retreat gives us hope and survival. As time passes, so do the complexities of these people's lives. In the thick of it, we find that we all exist. A season's revival - A Play (2006) June 3,4 - 2006
- முதல்வர் வீட்டு நாய் நாடகம் (2001) President's Dog-A Play - June 9, 10-2001 A satirical play about power and domination. How power intrudes on our day to day lives, and how ordinary people respond to such intrusion.
- கதைபடும்பாடு - மூன்று பன்றிகளும் ஓநாயும் (2005) கதை என்பது, கதை சொல்லியின் எண்ணமே. பல சந்தர்ப்பங்களில் ஒரு சம்பவத்திற்கே பல்வேறு கதைகள் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு நபரும் தமக்கூடாக சம்பவத்தை விபரிக்க முனைகையில் எமக்கும் ஒவ்வொரு கதை வந்துவிடுகிறது. சில வேளைகளில் இந்தக் கதைகளோடு சம்பவத்தில் நேரடி அனுபவம் கொண்டவரே முரண்படவேண்டியும் வந்துவிடுகிறது. கதைக்காய் பாத்திரங்கள் மாறுவதும் பாத்திரத்திற்காய் கதை மாறுவதும் நாளாந்த வாழ்வில் நாம் சந்திப்பவைதான். நாமும் ஒரு கதையை எடுத்து படுத்தாதபாடு படுத்தியிருக்கிறோம். முரண்பாடுகள்தானே நாடகமாகிறது.
- Enquire 'ME' - July 19, 20 -2003 This Critical Play deals with globalization and its corporate engagements in the third world countries.
- எல்லாப்பக்கமும் வாசல் (1998) This highly acclaimed play deals with the sense of alienation and isolation experienced by the Tamils who fled to the west with the outbreak of war in Sri Lanka. But it is more than a sociological treatment of displacement. The play also probes the universal theme of human relationships.
- P. A. Jayakaran shows how relationship are undermined in the pursuit of the "good life". Communication becomes deception. Conversation is reduced to small talk that actually serves to block communication. 1998ம் ஆண்டு அரங்காடலில் முதல் மேடையேற்றம் பெற்றது. அதன் பின்னர் நான்கு தடவைகள் மேடையேற்றம் பெற்றது. முதல் மேடையேற்றத்தின்போது சபேசன் சின்னத்தம்பி,நந்தினி சபேசன் ஆகியோர் நடித்திருந்தார்கள். மீள் மேடையேற்றம் 2001
- உங்கள் வரவு நல்வரவாகுக (2016) கனடாவுக்கு வெளியே பட்டறையின் முதலாவது அளிக்கை. உலகத்தமிழ் நாடக விழாவுக்காக தயாரிக்கப்பட்ட நாடகம் . 2003ல் எழுதிய பிரதி, வேனில் 2016ல் வெளியான ழகரம் இதழில் பிரசுரமானது. நான்கு பாத்திரங்களை உடைய நாடகம். மூன்று பாத்திரங்களாக சுருக்கப்பட்டு மேடையேற்றினோம்.
- அடேலின் கைக்குட்டை - Adele's Handkerchief (2011) October 22,23-2011 This Play depicts the atrocities against women in wars. The story takes place in Java, Indonesia in the 1940s. Japan, between the years of 1941 and 1942, brings Java under its control. Thereafter, Dutch and Javanese women sexually assaulted by the Japanese army. In the play, a Dutch descent Adele who presently lives in Canada, tells her story recalling the past. Adele along with other women was brought by force to a Japanese army as sex slaves. Eleanor, a Dutch-Javanese woman who hailed from a family of prostitutes under regime, was also brought to take care of these women. This is a story that tells the emotional, moral struggle between these women. ஒக்டோபர் 22, 23 ஆகிய இரு தினங்களும் தேடகத்தின் 'அரங்கின் குரல்' நிகழ்வில் மேடையேற்றப்பட்டது. காலங்கள் துரத்த இவ் உலகின் எல்லா மூலைகளுக்குள்ளும் ஓளித்துக்கொண்டவர் நாம். இந்தப் புலப்பெயர்வை நாம் கற்பனைக்கூட செய்து பார்க்காத நிலையில்தான் வேறொரு தேசத்தில் வந்து வீழ்ந்தோம். நினைவின் அலைச்சல் ஒரு புறமும், புறத்தின் அழுத்தம் ஒரு புறமும் என வாழ்வு. எம்மைச் சூழ பல்வேறு மனிதர்கள்... மொழிகள்.. கலாச்சாரங்கள். எல்லோருமே ஏதோவொன்றிலிருந்து ஓடி ஒளிந்து கொண்டவர்கள்தான். எம்மைப்போல் நெஞ்சக்குழிக்குள் ஆயிரமாயிம் நினைவுகளை சுமப்பவர்கள்தான் இவர்களும். எமக்குத்தேவை சிறிது நேர ஓய்வு.... சிறிய உரையாடல். நெஞ்சுக்குளிலிருந்து ஒவ்வொன்றாய் வந்து வீழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவ் உரையாடல் நீள்கிறது. இந்த மனிதர்களின் காயங்களை சுமந்து விலகும் காற்று எமது மூச்சு வழியும் சென்று மீள்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானியர்களின் கொடுமைகளை ஓர் கொரிய மூதாட்டி சொல்லுகிறாள்... ஜவனிய மூதாட்டி சொல்லுகிறாள்...ஒரு டச்சு மூதாட்டி சொல்லுகிறாள்... ஏதோவொரு மூலையிலிருந்து துரத்தப்பட்ட அகதி எனக்குள் ஏன் இந்தக் கதைகள் குடிகொள்கின்றன? அவள் ஏன் எனது பாட்டியாகவும் மாறிப் போகிறாள்? மறைந்துவிடும் அடையாளங்களை மட்டுமே வாழ்வு கொண்டிருப்பதில்லை. மனதின் ஆழத்தில் பதிந்திருக்கும் வடுக்களை, நினைவுகளை அழிக்கும் ஆற்றல் கொடுங்கோலர்களுக்கு இருந்துவிடுவதில்லை. மூதாட்டியர்களின் கதைகளை நான் சுமந்தேன். அதுபோல் எமது கதைகளை நாளை யாரோ ஒருவர் சுமக்கத்தான் போகிறார். முள்ளிவாய்க்காலோடும், புதைகுழிகளோடும் எமது கதைகள் நின்றுவிடப் போவதில்லை. இவ் உலகு எப்போதும் மனசாட்சியுள்ள படைப்பாளிகளையும் கொண்டேயிருக்கும். அவர்கள் நிட்சயம் எமது கதைகளைச் சுமப்பார்கள்.
- எதிர் காற்றினிலே - Against the wind (2003) - The struggle between a mother and daughter who have fled the war in Sri Lanka, and are now living in Canada. The mother tries to make decisions for her daughter. The daughter resents her mother's interference as encroachment on her autonomy. The mother thinks she has sacrificed everything for her daughter and therefore has the right to make choices for her. The daughter feels her mother is manipulating her by making her fell guilty.
- சப்பாத்து (1996) குமார் மூர்த்தியின் சிறுகதையை தழுவி எழுதப்பட்டது
- இரண்டு புள்ளிகள் (2002)
- காலப்பயணம் (2003)
- சொல்லின் ஆழத்துள் (2004)
ஜயகரனின் சிறுகதைகள்
தொகுலா காசா (உயிர் நிழல்)
அடேலின் கைக்குட்டை (காலம்)
செல்வி அம்றோஸ் (உயிர் நிழல்)
ஆயர்பாடி மாளிகை (தேடல்)
வந்திறங்கிய கதை (காலம்)
இருளில் மீள்பவர்கள் (காலம்)
ஆலோ ஆலோ (காலம்)
ஜெனி: போரின் சாட்சி (கூர்)