சமயவேல்
கவிஞர் சமயவேல்

கவிஞர் சமயவேல்


சமயவேல் (பிறப்பு பிப்ருவரி 04, 1957) சமகாலத் தமிழ்க் கவிதையின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். எண்பதுகளில் இறுதிப்பகுதியில் ஒரு முக்கியமான கவிஞராக உருவாகிய இவர் தமிழில், அலங்காரமற்ற இயல்பு மொழிக் கவிதையை (Plain Poetry) முதலில் அறிமுகப்படுத்தியவர். 1980களில் கரிசல் வெட்டவெளியில் இருந்து தோன்றிய கவியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். நிலம் ஒரு கிராமமாகவும் அதன் மனிதர்களாகவும் மரங்களாகவும் பறவைகளாகவும் காற்றாகவும் கண்மாயாகவும் இவரது ஆழ்மனதைத் தகவமைத்திருப்பதை இவரது கவிதைகளில் காணலாம். பின்காலனிய இந்தியாவில் தவிர்க்கவே முடியாத கிராமங்களின் சிதைவுகளை, தினசரி வாழ்வின் நெருக்கடிகளை தமிழ் அழகியலோடு கவிதைகளாக ஆக்கியவர் சமயவேல். துயரத்தின் மீதும் நம்பிக்கையின் மீதும் அடுத்தடுத்து கால்களை ஊன்றி நகரும் கவிதைகள் இவருடையவை.

  1. வாழ்க்கைக் குறிப்புகள்

கவிஞர் சமயவேல் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகில் நால்வழிச் சாலையில் அமைந்துள்ள வெம்பூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது அம்மா திருமதி க.முனியம்மாள், விளாத்திகுளம் அருகில் உள்ள வேலிடுபட்டி கிராமத்தில் உமையன் என்னும் புகழ் பெற்ற சேவற்கட்டு வீரரின் மகளாவார். அப்பா திரு ச.கருப்பசாமி. அந்தப் பகுதியின் மிக நுட்பமான மரச் செதுக்கோவியக் கலைஞராக இருந்திருக்கிறார்.

04.02.1957ல் பிறந்த இவர் வெம்பூரில் உள்ள பஞ்சாயத்து உயர்தொடக்கப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பிறகு வெம்பூருக்கு அருகில் உள்ள புதூரில், உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பத்தாம் வகுப்பில் இருக்கும் போது "ஆலமரம் தன்வரலாறு கூறுதல்" என்னும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை தமிழாசிரியர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதால் இலக்கியம் பால் இவரது கவனம் திரும்பியது. புதூரில் உள்ள நூலகத்திலும் பந்தல்குடி நூலகத்திலும் உள்ள நூல்களை வாசிக்க ஆரம்பித்தார். ஆரம்பப் பள்ளி தையலாசிரியர் திரு தேவசகாயம் சாரின் வழி காட்டுதலின்படி ஆன்மீகம், தத்துவம், அரசியல் துறைகளின் ஆரம்பநிலை நூல்களைப் பயின்றார். 1972ல் S.S.L.C. தேர்வில் புதூர் பள்ளியின் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

தனது கல்லூரிப் படிப்பை மதுரை நாகமலை ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தொடர்ந்தார். இளங்கலை கணிதம் பயின்றபோது அங்கு தமிழ் பேராசிரியராக இருந்த திரு இ.சு.பாலசுந்தரம் அவர்கள் மூலம் நவீனத் தமிழ் இலக்கியம் பரிச்சயமானது. ஜெயகாந்தனிடம் தொடங்கி மௌனி வரையிலான வாசிப்பு, பெருந்தாக்கத்தை உருவாக்கியது. "இளமதி" என்னும் கையெழுத்து இதழை நடத்தினார். சிற்றிதழ்களை வாசித்துவிட்டு இவரும் இவரது நண்பர் மற்றும் கல்லூரித் தோழர் ந.முருகேசபாண்டியுடன் சேர்ந்து கவிஞர் கலாப்ரியா, கி.ராஜநாராயணன், வண்ணதாசன் போன்ற படைப்பாளிகளை நேரில் சந்தித்து உரையாடி நவீனத் தமிழ் இலக்கிய நுட்பங்களைப் பயின்றார்.

பட்டப் படிப்பை முடித்த பிறகு சென்னைக்கு சென்ற இவர் சுதந்திர இதழாளராக பல இதழ்களுக்குப் பணியாற்றினார். பிறகு மத்திய அரசின் தபால் தந்தித் துறையில் தந்தி எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். துறைத் தேர்வுகள் மூலம் தொலை தொடர்புத்துறை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். உப கோட்டப் பொறியாளராக ஒய்வு பெற்று தற்சமயம் தனது துணைவியார் திருமதி பேச்சியம்மாளுடன் மதுரையில் வசிக்கிறார். ஒரு மகள்; இரண்டு மகன்கள்.

2021 ஜனவரியில் இருந்து சிற்றிதழ் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக 'தமிழ்வெளி' காலாண்டு இதழ் ஆசிரியராக இருந்து வருகிறார்.

2. கவிதைத் தொகுப்புகள்


  1. காற்றின் பாடல் (1987)
  2. அகாலம் (1994)
  3. தெற்கிலிருந்து சில கவிதைகள் (தொகை நூல்)
  4. அரைக்கணத்தின் புத்தகம் (2007)
  5. மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் (2010)
  6. பறவைகள் நிரம்பிய முன்னிரவு (2014)
  7. இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? (2019)
  8. சமகாலம் என்னும் நஞ்சு (2021)

3. சிறுகதைத் தொகுப்புகள்


  1. இனி நான் டைகர் இல்லை (2011)

4. கட்டுரைத் தொகுப்புகள்


  1. ஆண்பிரதியும் பெண்பிரதியும் (2017)
  2. புனைவும் நினைவும்: வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம் (2018)

5. மொழிபெயர்ப்பு நூல்கள்


  1. அன்னா ஸ்விர் கவிதைகள் (2018)
  2. குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள் (2019)
  3. மரக்கறி (The Vegetarian), கொரிய நாவல்
  4. இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை (நவசீனக் கவிதைகள்) 2021

6. விருதுகள்


  1. அமெரிக்கா தமிழர்களின் கலாச்சார அமைப்பான, விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) 2016ம் ஆண்டிற்கான புதுமைப்பித்தன் நினைவு விருதை வழங்கியது.
  2. திருச்சி, சமயபுரம், எஸ்.ஆர்.வி.பள்ளியின் 'அறிஞர் போற்றுதும்' நிகழ்வில் 2018ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விருது வழங்கப்பட்டது.
  3. 2018ம் ஆண்டுக்கான ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகளில், சிறந்த கவிதைத் தொகுப்பு மொழிபெயர்ப்புப் பிரிவில் கவிஞர் சமயவேலின் 'அன்னா ஸ்விர் கவிதைகள்' தொகுப்பு விகடன் நம்பிக்கை விருதைப் பெற்றது.

6. வெளி இணைப்புகள்


1) http://samayavel.blogspot.com/?m=1




"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SAMAYAVEL&oldid=3426274" இலிருந்து மீள்விக்கப்பட்டது