உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான்.

வீட்டு விலங்குகளினதும் தாவரங்களினதும் (பயிர்கள்) உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழி வகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலான நீர்ப்பாசனங்கள் மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு வேளாண் தொழில் தொடர்பு கொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களைச் சாகுபடி செய்தல், கால்நடைகளை வளர்த்தல், மேய்ச்சல் நிலத்திலோ தரிசு நிலத்திலோ கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை வேளாண்மையின் அடித்தளமாக விளங்குகின்றன.

மனித சமூகங்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வேளாண்மை செய்து வந்துள்ளன. வரலாற்றில், வேளாண்மையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் வெவ்வேறு தட்பவெப்ப நிலைகள், பண்பாடுகள், தொழில் நுட்பங்கள் போன்றவற்றைச் சார்ந்து மாறுபட்டும் இருந்துள்ளது. எனினும், விலங்குகளையும் தாவரங்களையும் பழக்கப்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டுவர நிலத்தைப் பண்படுத்துவதற்காக, பல நிலையிலான தொழில் நுட்பங்களையே வேளாண்மை நம்பி இருந்துள்ளது. தாவரங்களைப் பயிர் செய்ய நீர்ப்பாசனம் தேவை. தரிசுப் பயிர்முறையும் உள்ளது. விலங்குகளை வளர்க்க புல்வெளிகள் தேவை. வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழில் நுட்ப வேளாண்மை முறை மேலோங்கியதால் "ஓரினச் சாகுபடி" (monoculture) பரவலாகியுள்ளது.

எனினும், வேளாண்மைத் தொழிலை இயற்கையோடு இசைய நிகழ்த்தும் முறைகளாக "நிலைகொள் வேளாண்மை" (permaculture) மற்றும் "உயிரி வேளாண்மை" (organic agriculture) என்பவை இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. வேளாண்மையைப் பற்றிய ஆய்வை வேளாண் அறிவியல் என்கிறோம். வேளாண் அறிவியல் சார்ந்த தாவர வளர்ப்பு தோட்டக்கலை எனப்படுகிறது. விவசாய வரலாறு மனித வரலாற்றில், உலகளாவிய சமூக-பொருளாதார மாற்றத்திற்கு ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. விவசாய முன்னேற்றம் மனித நாகரிகத்தில் ஒரு பெரும் பங்காற்றியுள்ளது எனலாம். வேளாண்மையே மற்ற எல்லா கலைகளுக்கும், முறைப்படுத்தப்பட்ட சட்ட அமைப்புகளுக்கும் காரணமாக அமைந்தது. விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ளும்போது, அந்த சமூகத்திலுள்ள மற்றவர்கள் உணவு உற்பத்தி தவிர்த்த மற்ற பணிகளில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள முடிந்தது. வரலாற்றாசிரியர்களும் மானுடவியலாளர்களும் விவசாயத்தின் வளர்ச்சியே மனித நாகரீகத்தை சாத்தியமாக்கியுள்ளது என்று நீண்ட காலமாக விவாதித்து வந்துள்ளனர்.

வேளாண் தொழில் சுமார் 10,000 ஆண்டுகள் பழைமையானது. இது பல்வேறு காலகட்டங்களில் நிலப்பரப்பிலும் மகசூலிலும் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தினூடாக, புதிய தொழில்நுட்பங்களும் புதிய பயிர்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனம், பயிர் சுழற்சி, உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற முறைகள் நீண்டகாலத்திற்கு முன்பே உருவாகிவிட்டன, ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெரும் மாறுதலை நிகழ்த்தின. வெப்பநிலையும் மழையளவு ஆகியவை வேளாண்தொழிலைப் பாதிக்கும் காரணிகளாகும். காலநிலை மாற்றம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத பிரதேசங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி வேளாண்மையை பாதிக்கும் திறனுள்ளது.[13] விவசாயம் புவி வெப்பமடைவதை தணிக்கவோ அல்லது மோசமாக்கவோ செய்யலாம்.

கரியமில வாயு பூமியின் வளிமண்டலத்தில் அதிகரிப்பது மண்ணில் உள்ள உயிர்மப் பொருளின் சிதைவடைவதால் வருகிறது. காற்று மண்டலத்திற்குள் உமிழப்படும் பெரும்பாலான மீத்தேன் நெற்பயிர் நிலங்கள் போன்ற ஈரமான நிலங்களில் உயிர்மப் பொருள் சிதைவடைவதால் உருவாகிறது.[14] மேலும், ஈரமான நிலங்களும் நைட்ரஜன் குறைவு மூலமாக நைதரசனை இழந்து பசுமையில்ல வாயுவான நைட்ரிக் ஆக்சைடை வெளியிடுகின்றன.[15] மேலாண்மையில் ஏற்படும் மாற்றங்கள் பசுமையில்ல வாயு வெளியீட்டைக் குறைக்கலாம்.

வெப்பநிலை தொகு 6° சென்டிகிரேடுக்கும் குறைவாக நிலவும் வெப்பநிலையில் மண் குளிர்ந்து உறைந்து போவதால் பெரும்பான்மையான செடிகள் அவ்வெப்ப நிலையில் வளர இயலாது. வெவ்வேறு கால நிலை வட்டாரங்களில் வெவ்வேறு வகையான பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. சான்றாக, நெல் அயன மண்டலத்தில் விளைவிக்கப்படும் முதன்மைப் பயிராகும். ஏனெனில் அதிக வெப்பமும், அதிகளவு நீரும் நெற்பயிர் வளரத் தேவைப்படுகிறது. கோதுமை ஒரு மித வெப்பமண்டலப் பயிராகும். கோதுமை வளரக் குளிர்ந்த காலநிலைத் தேவைப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sanjaykrishna2210284&oldid=3694261" இலிருந்து மீள்விக்கப்பட்டது