Seyon yazhvaendhan
சேயோன் யாழ்வேந்தன் என்ற புனைபெயரில் எழுதி வரும் தி.கோபாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகருக்கு அருகில் உள்ள சிற்றூரில் 29.10.1971ல் பிறந்தவர். தற்போது திருச்சியில் வசித்து வருபவர். இவரது நவீனக் கவிதைகள் திண்ணை, கீற்று, வார்ப்பு, வலைத்தமிழ், நிலாச்சாரல், அம்பலம், பதிவுகள், யாழ், கவிதை, நானிலம் மற்றும் பல இணைய இதழ்களில் தொடர்ந்து வெளிவருகின்றன. இளைய வாசகர்களால் அதிகம் விரும்பி வாசிக்கபபடும் இவரது கவிதைகளுக்கு ஒரு சான்று - அவரவர் அகராதிகள் நீ குடை கொண்டுவர விரும்பாத / ஒரு நாளில் / திடீரென்று மழை வந்தது. / எனது குடையில் / இருவருக்கும் இடமிருந்தபோதும் / நாகரிகமும் கூடவர இடமில்லாததால் / குடையை உன்னிடம் தந்து / நனைந்தபடி நானும் நடந்தேன். / நான் மகிழ்ச்சித் துள்ளலுடன் நடப்பதை / நீ கடைக்கண்ணால் பார்த்தாய். / நான் மகிழ்ந்தது / உனக்கு கொடை கொடுக்க முடிந்ததற்காக அல்ல; / குடை இருந்தும் / நான் நனைய முடிந்தற்காகவே./ உன் கூந்தலிலிருந்த ரோஜா / கீழே விழுந்ததை / நான் வருத்தத்துடன் பார்த்ததை / நீ ஓரக்கண்ணால் பார்த்தாய். / நான் வருந்தியது / உன் கூந்தலிலிருந்து ரோஜா விழுந்ததற்காக அல்ல, / அது விழுந்ததற்காகவே. / என் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் / உனது அகராதியில் அர்த்தப்படுத்திக்கொண்டு, / ஓர் ஏளனப் பார்வையோடு / எனக்குக் குடையும் விடையும் தந்து / நீ நிழற்குடையில் ஒதுங்கினாய். / அப்படி ஒரு பார்வை பார்த்ததனால் / உனக்கு என்ன கிடைத்தது? / எனக்கு - / ஒரு கவிதை.