பயனர்:Smuralee/மணல்தொட்டி

போத்துக்கேயர் 1624 ஆம் ஆண்டில் இத்திருக்கோயிலை பாழ்செய்துள்ளனர். அன்று அருணகிரிநாதர் மனமுருகிக்கண்ட தலத்தாறு கோபுரத்தழகைப் பறங்கியர்களின் தளபதியும் பார்த்துருகியுள்ளான். அவன் தன் படையில் ஓவியம் வல்லானைக் கொண்டு அவற்றின் அழகை ஓரளவு வரைந்து எடுத்துக்கொண்ட பின்பே கோயிலைத் தரைமட்டமாக்க உத்தரவு பிறப்பித்தான்.

அந்தக் கோபுரத்தழகைக் காட்டும் சித்திரம் இன்றும் விஸ்பன் நகரில் உள்ளது என்பர். சுதந்திரம் பெற்றபின் 1950ஆம் ஆண்டில், கோயில் இருந்த நிலத்தில் ஆலயம் அமைக்க முற்பட்டுக் காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தருளச் செய்தார்கள். அக்காலத்தில் நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி தோண்டிய வேளையில் சிவனருளோ என்று கண்டவர்கள் அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமானோடு, சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், அஸ்திரதேவர் முதலாய தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்டன. அவையாவும் அண்மைக் காலத்திலமைக்கப் பெற்ற திருக்கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன. முன்னொரு காலத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்தன என்பர். கோயிலை பறங்கியர் பாழ்படுத்திய வேளையில் பக்தர்களாகிய பாசுபதவிரதிகளும் பணியாளரும் பதைத்துருகித் திருக்கோயிலிலிருந்த திருவுருவங்களை எடுத்துச் சென்று அயலிலுள்ள கிணறுகளிலும் குளங்களிலும் பாதுகாப்புக்காக இட்டார்கள். அவர்கள் ஒரு திருவுருவத்தை அயலூரான தம்பலகாமம் என்னும் மருதவளம் நிறைந்த ஊரில் மறைத்து வைத்து மிகவும் இரகசியமாக வழிபாடு செய்து வந்தவர்கள்; அந்த இடத்தை ஆதிகோணநாயகர் கோயில் என வழங்கி வணங்கினார்கள். அது ஆதி கோணநாயகர் ஆலயமாகவே பழைய கோணேசுவரர் ஆலயத்துக்குச் சொந்தமான மானியங்களிற் பெரும்பகுதி தம்பலகாமத்திற்கு சேர்ந்தன. முதற்பராந்தக சோழனுக்கு அஞ்சிய பாண்டியன் இலங்கையில் பாதுகாப்புக்காக புகுந்திருந்த காலத்தில் தம்பலகாமத்தில் திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது. --Smuralee (பேச்சு) 07:35, 17 மே 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Smuralee/மணல்தொட்டி&oldid=1856883" இலிருந்து மீள்விக்கப்பட்டது