பயனர்:TNSE CHANDRAMARY VNR/மணல்தொட்டி

பழமொழிகளின் இனிமை

தொகு

மக்களின் உரையாடலில் எப்போது மகிழ்ச்சி கிடைக்கும் என்று கணிக்க இயலாத தன்மையுடன் விளங்குபவை பழமொழிகள் ஆகும். மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்கவியலாத தன்மைகளைக் கொண்ட உயிர்ப்பான பழமொழிகள் தமிழில் உண்டு.

மூலிகை சம்பந்தமான பழமொழிகள்

தொகு

மூலிகைகள் குறித்து எண்ணற்ற பழமொழிகள் தமிழ்ப்பழமொழிகள் புழக்கத்தில் உள்ளன. மூலிகையின் தேவையைச் சொல்ல நினைப்போர், `மூலிகெய மறந்து மொடமாகி விடாதே` என்பார்கள். இந்தப் பழமொழியை எனக்குக் கூறியவர் மருத்துவர் காசி பிச்சை. கீரை உணவைப் போற்றியவர்கள் தமிழர்கள். கீரையின் அருமையைப் `பொன்னெ எறிஞ்சாலும் பொடி கீரையெ எரியாதே` என்பார்கள். தமிழரின் உணவிலும், மருந்திலும் தனக்கான இடத்தைப் பிடித்த மூலிகைகளில் இஞ்சி, சுக்கு, கடுக்காய் போன்றவை ஆகும். ‘கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம், கொண்டிடில் கோலை ஊன்றிக் குறுகி நடப்பவனும் கோலை வீசிக் குலாவி நடப்பானே’ என்ற சித்தர் பாடலில் மேற்கண்ட மூலிகைகளின் தேவையை நமக்கு உணர்த்துகிறது.

இஞ்சி, சுக்கு, கடுக்காய்

தொகு

ஆகிய மூன்றும் நம் உடலில் உள்ள வாதப், பித்தக், கபத்தைச் சமன் செய்யும் திறன் கொண்டவை. பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டை கம்மல் ஆகிய சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் கொண்டவையாக இஞ்சி உள்ளது. இஞ்சி நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. தமிழரின் உணவில் இஞ்சி, சுக்கின் பங்கு முதன்மையான இடத்தைப்பெற்றுள்ளது. காலையில் இஞ்சி சாறுடன் தேன் கலந்தும், மதிய உணவுக்குப் பின் சுக்கு, கருப்பட்டி கலந்த சுக்கு கசாயமும், மாலையில் (இரவு உணவுக்குப் பின்) கடுக்காய் சூரணமும் என 48 நாட்கள் (ஒரு மண்டிலம்) உண்டால் உடல் சோர்வின்றிச் சுறுசுறுப்பாக இருக்கும் வாய்ப்புகள் மிகுதியாக உள்ளது. தமிழகத்தில் இஞ்சியைச் சமையலில் சேர்த்து உணவு சமைப்பது மிக இயல்பான ஒன்று. இஞ்சி உணவானது, பித்தம், பித்த வாய்வு, பித்த நாளம் தொடர்புடைய நோய்களை வராமல் தடுப்பதுடன் உணவை எளிதில் செரிக்கச் செய்வதில் பெரும்பங்கு ஆற்றுகிறது. உணவில் இஞ்சியின் பயன்பாடு, இதயநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கின்றது. இது நமது இதயத்தை வலுப்படுத்திப் பக்கவாதம், மாரடைப்பு ஏற்படக் காரணமான ரத்தக் கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கும் தன்மையுடையது. குருதிக் குழாய்களில் சேரும் கொழுப்பினைக் கரைக்கும் சிறப்பு இஞ்சிக்கு உண்டு. ‘இஞ்சி சரசம் சளி போக்கும்’ என்று ஒரு பழமொழி சொல்கின்றது.

இஞ்சி துவையல், இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி சாறு, இஞ்சி பச்சடி, இஞ்சி முரப்பா எனத் தமிழகம் சார்ந்த இஞ்சி உணவுகளின் பட்டியல் நீளமான ஒன்றாகும். இஞ்சியைச் சாற்றினைப் பிழிந்து வடிகட்டி அதனுடன், எலுமிச்சை, நெல்லிக்காய் சாற்றுடன், தேன் சேர்த்தால் இஞ்சி சாறு கிடைக்கும். இதைக் காலை நேரத்தில் அருந்தலாம். இஞ்சியைப் பயன்படுத்தும் போது அதன் வெளிப்புறத் தோலை முற்றிலும் நீக்கியே பயன்படுத்த வேண்டும்.

சுக்கு
தொகு

உலர்ந்த இஞ்சியே `சுக்கு` எனப்படும். சுக்கு இலங்கையின் சில பகுதிகளில் வேர்க் கொம்பு என்ற வேறு பெயருடன் விளங்குகிறது. சுக்குக் கசாயம் வலி நீக்கும் நல்ல மருந்தாகும். சுக்கின் மருத்துவக் குணத்தை உணர்த்த விரும்புவோர் ‘சுக்குக்கு மிஞ்சின மருந்துமில்லெ, சுப்ரமணியெனுக்கு மிஞ்சின கடவுளுமில்லை’ எனக்கூறக் கேட்கலாம். சுக்கில் சுண்ணாம்பு சத்து மிகுதியாக உள்ளது. இதயத்திற்கும், இரத்தக்குழாய்களுக்கும் வலுவளிக்க வல்லது. இது, வயிற்றுப்புண்களைத் தடுக்கும், ஏற்கனவே இருந்தாலும் குணமாக்கிவிடும் திறன் பெற்றது. வயிற்றில் எஞ்சி இருக்கும் பித்த நீரைச் சமன் செய்யும் ஆற்றல் சுக்கிற்கு உண்டு. இதை நண்பகல் சுடுநீருடன் அருந்தலாம்.

கடுக்காய்
தொகு

தமிழர்களின் அடிப்படையான மூலிகைகளில் கடுக்காயும் ஒன்றாகும். கடுக்காய் குறித்துக், ‘கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்’, என்னும் பழமொழி தமிழில் புழக்கத்தில் உள்ளது. கடுக்காயின் மருத்துவக் குணங்கள் பற்றி எழுதினால் பக்கங்கள் போதாது. கடுக்காய் குருதியைத் தூய்மை ஆக்கும், கழிவுகளை நீக்கும், நமது உடற் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கும், நினைவாற்றலை மேம்படுத்தும். கடுக்காய் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கைகண்ட மருந்தாகும். கண் நோய்களைத் தீர்க்கும், மலச்சிக்கலைச் சரிசெய்யும். கடுக்காயைத் தொடர்ந்து பயன்படுத்தினால் முதுமையிலும் இளமையான தோற்றத்தைப் பெறுவார்கள். உடலை வலுவாக்கும் தன்மை கொண்டதாகக் கடுக்காய் உள்ளது. தமிழர்கள் தங்களின் கட்டுமானப் பணிகளுக்கு ஆதி காலத்தில் கடுக்காய் நீரைப் பயன்படுத்தியுள்ளனர் எனவே தான் தமிழ் மரபு கடுக்காயை ‘ஒரு கடுக்காய் பத்துத் தாய்க்குச் சமம்’ என்கிறது. கடுக்காயிலிருந்து, கடுக்காய்ச் சத்து, கடுக்காய் நெய், கடுக்காய் லேகியம், கடுக்காய் வடகம், கடுக்காய் கற்பம் , கடுக்காய் கசாயம், கடுக்காய் துவையல், கடுக்காய் பொடி, குடிநீர் எனப் பல முறைகளில் மருந்துகளாகச் செய்யப்படுகின்றன.

‘இஞ்சிக்குப் புறணி நஞ்சு, கடுக்காய்க்கு அகணி நஞ்சு’ என்னும் பழமொழி இஞ்சி, கடுக்காய் சார்ந்த மருத்துவத்தை நமக்கு அளிக்கிறது. முற்றிலும் தோல் நீக்கிய இஞ்சியும், கொட்டை நீக்கிய கடுக்காயையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மூலிகைகளின் பயனை மட்டும் கூறாமல் அவற்றின் மருந்து செய் முறைகளையும், நச்சு நீக்கம் குறித்தும் பேசும் தமிழ்ப்பழமொழிகள் ஒரு தொன்மையான இனத்தின் தொழில்நுட்பத்தை எளிய சொற்களால் தலைமுறை கடந்து வாழும் தன்மை கொண்டதாக உள்ளது.

மருத்துவரைக் கடந்த மூலிகை
தொகு

வேண்டாத வேலைகளைச் செய்து மருந்துண்டால் பலிக்குமா என்னும் நோக்கில், ‘இரும்புச் சலாகையை விழுங்கிப்போட்டு இஞ்சிச்சாறு குடித்தால் தீருமா?’ என்று கேள்வி எழுப்புகின்றார் தமிழின் பழமொழித் தொகுப்பாளர் ஜான் லாசரஸ் (1894:105). எதற்கெடுத்தாலும் மருத்துவரிடம் செல்லும் பழக்கம் உள்ளவரை, ‘வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம்’ என்கின்றார் தமிழின் முதல் பழமொழி தொகுப்பார் பீட்டர் பெர்சிவல் (1874:568). மருந்து, மருத்துவர் என்பதை எல்லாம் கடந்து, நம்மை வழிநடத்தும் உணவின், மூலிகையின் பயன், விளைவு, அளவு அறிந்து நலம் பெறுவோம், வளம் பெறுவோம்.

- மா. தமிழ்ப்பரிதி.