ஊரும் பேரும்

என் பெயர் தில்லை கணபதி. அப்போதைய தென்னாற்காடு (தற்போது விழுப்புரம்) மாவட்டத்தில் வானூர் வட்டத்தில் உள்ள ஆப்பெரும்பட்டு எனும் சிற்றூரில் 29.9.1959ஆம் நாள் பிறந்தேன். தாயார் மங்கவரம். தந்தையார் ஆனந்தன்.


கல்வி

திருச்சிற்றம்பலம் கூட்டுப்பாதை காந்தி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, 1976ஆம் ஆண்டு சென்னை கந்தசாமிக் கல்லூரியில் பியுசி வகுப்பு. பின்னர் 1980-இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம். அதன் பின்னர், 1982-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம். அதே ஆண்டு, தொழிலாளர் சட்டத்தில் பட்டையம். 1991ல் கல்வியியலில் இளங்கலைப் பட்டம்.


தொழில்

1982-இல் அகில இந்திய வானொலி, புதுவையில் இணைப்பு உரையாளர் பணி. அதன்பிறகு, ஒரு அரசு பெட்ரோலிய நிறுவனத்தின் முகவர் பணி ஆற்றிய பிறகு, 1990-2000 வரை ஆரோவில் நியூக்கிரியேஷன் பள்ளியில் ஆசிரியர் பணி. அதுமுதல் இன்று வரை மொழிப்பெயர்ப்பாளர் பணி தொடர்கிறது.

தற்போது புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள பன்னாட்டு நகரமான ஆரோவில்லில் மொழிபெயர்ப்பாளராகவும், செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன்.


வெளியீடு

2000-இலிருந்து ஆரோவில்லில் வெளியாகும் “செய்திகளும் குறிப்புகளும்“ என்ற வாராந்திர செய்திக்கடிதத்திற்கு செய்தி ஆசிரியராகப் பணிசெய்து வருகிறேன். சிறுவர்களுக்கான பல சிறுபுத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். ஆரோவில் தொடர்பான மாத்ரிமந்திர், ஆரோவில், ஆரோவில் பற்றி ஸ்ரீ அன்னை கூறியவை போன்ற பல்வேறு தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்தும், தமிழ் வீடியோக்களை வெளியிட தனியாகவும், இணைந்தும் பணியாற்றி உள்ளேன். பிறமொழி பேசுவோர் பேச்சுத் தமிழைக் கற்க நான்கு மொழிப் புத்தகங்களில் பணியாற்றி உள்ளேன். பல்வேறு சமுதாய விழிப்புணர்வு வீடியோ நாடகங்களுக்கு ஆங்கில வசன வரிகளை தமிழிலிருந்து மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். பல்வேறு நிறுவனங்களுக்கு ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு செய்துவருகின்றேன். பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூட்டங்களில் சந்திப்புகளில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறேன்.


விக்கிபீடியா பங்களிப்புகள்

தமிழ்அன்பன்3000 என்ற புனைபெயரில் 2009ஆம் ஆகஸ்டு முதல் பல கட்டுரைகளை தொகுத்து உள்ளேன். சில ஆங்கில கட்டுரைகளை மொழிபெயர்ப்பும் செய்துள்ளேன்.2010-ல் இருந்து எனது சொந்த பெயரில் பங்களிப்பை செய்துவருகிறேன். என்றபோதிலும், தற்போது முனைப்பாக பங்கேற்க வேண்டும், என்னுடைய மொழிபெயர்ப்பு அனுபவத்தை விக்கிபீடியாவிற்கு அளிக்கவேண்டும், அதிலும் குறிப்பாக, விக்கியின் எல்லா மொழிகளிலும் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய, ஆனால், இன்னும் தமிழில் எழுதப்படாமல் அல்லது மொழிபெயர்ப்பு செய்யப்படாமல் உள்ள கட்டுரைகளை எடுத்து எளிமையான தமிழ் நடையில் மொழிபெயர்ப்பு செய்யது அனைவரும் பயன்பெற வேண்டும் என்பது எனது அவாவும் எண்ணமும் ஆகும். --59.92.38.181 14:04, 28 சூலை 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thillaiganapathi&oldid=829316" இருந்து மீள்விக்கப்பட்டது