பயனர்:Tvtilango/மணல்தொட்டி
அதியமான் நாணயம்
அதியமான் நெடுமான் அஞ்சி, சங்ககால குறுநில மன்னன். அதியமான் ஊர் தகடூர். இப்போது அவ்வூரின் பெயர் தர்மபுரி. அதியமானின் மலை, குதிரை மலை எனப் பெயர் பெற்றது. அதியமானைக் குறித்து, பல சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளனர். புறநானுாறு, அகநானுாறு, குறுந்தொகை, நற்றிைண போன்ற சங்க இலக்கியங்களில் காணலாம்.அவ்வையாருக்கு, அதியமான் இனியவன். அவன் தனக்குக் கிடைப்பவை எல்லாம், அவ்வையாருக்கு அளித்தான். கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை அவருக்கு அளித்தான். அந்தக் கனியைச் சாப்பிட்டால், நீண்ட நாள் உயிர் வாழலாம்.
அதியமான், மழவர் இனத்தைச் சேர்ந்தவன். குதிரைகளைக் கொண்ட மழவர், குறும்படை மழவர், கடுங்கண் மழவர், செங்கண் மழவர், கல்லா மழவர், போர்த்திறம் கொண்ட மழவர் என்று, சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிகிறோம். அதியமானின் முன்னோர், முற்றிலும் நீரால் சூழப்பட்ட பகுதியிலிருந்து வந்ததாகக் கருதப்படுகின்றனர்.தற்போது, பாகிஸ்தானில் ஓடும் ஜீலம், சீனாப், ரவி ஆகிய நதிகளின் இடைப்பட்ட மிக வளமான பகுதியை, 'மாலவாஸ்' என்ற பழங்குடியினர், தொன்மைக் காலத்தில் ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்கள் மிக்க போர் குணம் கொண்டவர்கள். கிரேக்க பேரரசன் அலெக்சாண்டர் படையெடுத்தபோது, இந்தப் பழங்குடியினர் போரில் தோல்வியுற்று, தங்கள் நாட்டைவிட்டு, ராஜஸ்தான் வழியாக மத்திய இந்தியாவிற்கும், பின் பிற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கும், அதியமானின் முன்னோர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். ஆனால், அதை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை.
சங்ககால சேர, சோழ, பாண்டியர், மலையமான் நாணயங்கள், கடந்த 30 ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. சென்ற ஆண்டு, 'அதியமான்' பெயர் பொறித்த நாணயத்தை கண்டுபிடித்து வெளியிட்டேன். அதே ஆண்டில், கோவையைச் சேர்ந்த ஒரு வணிகரிடம், சில நாணயங்களை வாங்கி ஆய்வு செய்தபோது, ஒரு சில செம்பு நாணயங்களில், காரீயத்தால் மேல் பூச்சு பூசப்பட்டு, நாணயங்கள் தெளிவில்லாமல் இருந்தன.காரீயத்தை அகற்ற வேண்டுமானால், லேசாகத் தீயில் காட்ட வேண்டும். அப்போது, அந்த காரீயப் பூச்சு இளகிவிடும். அவ்வாறு இளகிய நிலையில் இருக்கும்போது, அந்தப் பூச்சை சுரண்டி அகற்ற வேண்டும். தீயில் காட்டும்போது, சில நேரங்களில் நாணயம் வெடித்து துண்டு துண்டாகிவிடும். இந்த இடர்ப்பாடுகளுக்கு இடையில், பல நாட்கள் சுத்தம் செய்தபின், நான் சுத்தம் செய்த நாணயம் செம்பினால் செய்யப்பட்டது என்பதை அறிந்தேன். அந்த நாணயத்தைப் பற்றிய விளக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
முன்புறம்: யானை வலப்பக்கம் நோக்கி நிற்கிறது. அதன் முன் ஒரு கொடிக் கம்பம் உள்ளது. நாணயத்தின் மேல் விளிம்பின் இடப்பக்கத்தில் ஒரு, 'ஸ்வஸ்திக்' சின்னமும், அதன் அருகில் 'டவுரின்' சின்னமும் உள்ளது. யானையின் மேல் பகுதியில், 'அதியமான்' என்ற பெயரில், நான்கு எழுத்துக்கள், 'பிராமி' எழுத்து முறையிலும், ஓர் எழுத்து, 'தமிழ் - பிராமி' முறையிலும் உள்ளன.பின்புறம்: நாணயத்தின் அடிப்பகுதியில், ஆறு ஒன்று அச்சாகியுள்ளது. தேய்ந்த நிலையில் இருப்பதால், முழுமையாகத் தெரியவில்லை. ஆற்றில் இரண்டு மீன்கள் இருக்கின்றன. நாணயத்தின் மத்தியில், குதிரை ஒன்று வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. குதிரையின் முன் பகுதியில், போர் வீரன் ஒருவன் நின்று கொண்டிருக்கிறான். போர் வீரனின் ஒரு கையில் கேடயமும், மறு கையில் வாள் போன்ற ஆயுதத்தையும் வைத்திருக்கிறான். போர் வீரன் தன் தலையில் அணிந்திருக்கும் தொப்பி போன்ற கவசத்தில், கிரேக்கப் போர் வீரர்கள் அணியும் அலங்கார முடி அமைப்பு உள்ளது.
'அதியமான்' என்ற பெயர், குதிரையின் பின்புறத்திலிருந்து துவங்கி, குதிரையின் மேல் பகுதி வழியாகச் சென்று, வலப் பக்கத்தில் முடிகிறது. முன்புறத்தில் உள்ள எழுத்து முறைபோல் இதிலும் இருக்கிறது. நாணயத்தில் அச்சாகியிருக்கும் எழுத்துக்களை எளிதில் படிக்க முடியவில்லை. புகைப்படம் எடுத்து அதை பன்மடங்கு பெரிதாக்கி, பிறகு கணினி மூலம், எழுத்துக்களின் இடையில் இருந்த அவசியமில்லா பகுதிகளைப் பிரித்து எடுத்தபின் தான் படிக்க முடிந்தது. இந்த நாணயத்தின் காலம், கி.மு., 3ம் நுாற்றாண்டாகக் கொள்வதில் தவறில்லை. நமது தமிழக பெருமையைக் காட்டும் நாணயங்களில் இதுவும் ஒன்று.[1]
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1398280. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2015.
{{cite web}}
: Missing or empty|title=
(help)