பயனர்:Viji2003/மணல்தொட்டி

கண்ணகி கோவிலில்  மறுக்கப்படும் தமிழரின் உரிமைகள். 

மங்கலதேவி என்ற மாண்புறு பெயர் சிறப்பு பெற்ற கண்ணகியின் வாழ்க்கை கதையை சிலப்பதிகாரம் என்ற பெயரில் இளங்கோ அடிகள் அழகுக்காப்பியமாக வடிவமைத்தார். பாண்டிய மன்னனால் தன் கணவன் கொலையுண்ட செய்தி கேட்டு, மதுரை மாநகரை எரித்த கண்ணகி, வைகை ஆற்றின் தென்கரையைப் பற்றி நடந்து, பதினான்காம் நாளில் சேரநாட்டு எல்லையில் உள்ள விண்ணேத்திப்பாறை வந்தடைந்தாள். அப்பொழுது விண்ணிலிருந்து பூ பல்லக்கில் தேவர்களுடன் வந்த கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து விண்ணுலகம் அழைத்துச்சென்றான். (கைம்பெண்ணாக வந்துநின்ற கண்ணகிக்கு கோவலன் மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற சிறப்புப்பெயர் பெற்றாள் என்றும் கூறுவர்) அந்த இடத்திலேயே கண்ணகிக்கு இமயத்திலிருந்து கல் கொணர்ந்து கோவில் எழுப்பினான் சேரன் செங்குட்டுவன். அதுதான் கண்ணகி கோட்டம்.

இந்த கண்ணகி கோட்டம் தேனிமாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு கூடலூருக்கு தெற்கேயுள்ள வண்ணாத்திப்பாறை, தமிழக கேரள எல்லைப்பகுதியான, பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதி மங்கலதேவி மலையில் 4830 அடி உயரத்தில் உள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இக்கோவில் பின்னாளில் சிதிலமடைந்ததால், சோழப்பேரரசன் முதலாம் இராஜராஜன் தன்ஆட்சிகாலத்தில் (கி.பி. 985-1014) இக்கோவிலை சோழர் கலைப்பாணியில் மீட்டமைத்தான். இப்போதுள்ள வடிவம்தான் அது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரா பவுர்ணமியன்று திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு மே 10 அன்று கண்ணகி கோவிலில் சித்திரா பவுர்ணமி விழா நடைபெற உள்ளது. இந்த கோவிலை கேரள அரசு சொந்தம் கொண்டாடி வருவதால் கோவிலுக்குச் செல்ல கேரளஅரசிடம் அனுமதி பெறச்சொல்கின்றனர். இதனால் இங்கும் தமிழரின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக வனப்பகுதி வழியே நிரந்தர பாதை அமைப்பதே தீர்வாகும்.

மங்கலதேவி கோவில் என அழைக்கப்பட்ட இக்கோவில்தான் கண்ணகி கோட்டம் என்றும், இக்கோட்டத்தின் சீரமைப்பினை மேற்கொண்டு, சிலம்பின் சிறப்பை உலகறியச் செய்யவேண்டும் என இப்பகுதி மக்கள், காமராஜர் தமிழக முதல்வராக இருந்பொழுது கொடுத்த மனு இன்னும் தமிழக அரசின் கோப்பில் புதைபொருளாய் உள்ளது. சிலப்பதிகார ஆசிரியர் குறிப்பட்டபடி, அமைந்துள்ள கோட்டம் இதுதான் என 1963-ல் கரந்தை தமிழ்புலவர் கல்லூரி பேராசிரியர் கோவிந்தராஜன், ஈரோடு முனைவர் இராசு, மத்திய தொல்லியல் கல்வெட்டுத்துறை தலைவர் கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை இயக்குநர் நாகசாமி ஆகியோர் ஆய்வுசெய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இவர்களின் அறிக்கை இந்திய அரசின் கல்வெட்டு தொகுதி 1965-66 ல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 1975-ல் தமிழக அரசின் வருவாய்துறை அதிகாரியாக இருந்த அனந்தபத்மநாபன், அறநிலையத்துறை ஆணையர் ஆர்.சி.பண்டா, நிலஅளவை அதிகாரி முருகேசன் ஆகியோர்கள், கேரள மாநில ஆதிகாரிகளுடன் இக்கோவிலுக்குச் சென்று, கோவில் அமைவிடத்தை அளந்து, இக்கோவில் தமிழக எல்லையில் இருப்பதை ஆவணங்களின் வழி உறுதிபடுத்தியுள்ளனர்.

இத்தருணத்தில் துணைப்பொறியாளர் சுவாமிஅய்யா தலைமையில் தொழிலாளர்கள், கூடலூர் அருகே உள்ள பளியன்குடியிலிருந்து அத்தியூத்து வழியாக கண்ணகிகோவில் வரை சாலை அமைக்க, பாதைப்பகுதிகளை அளந்து வரைபடம் தயாரித்து, திட்டமதிப்பீடு 67 லட்சம் ரூபாய் என்றும் அறிக்கையை அரசிடம் ஒப்படைத்தனர். அவசரநிலை வெளியீட்டால் அன்றைய திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் இப்பணி செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அன்றைய கேரள முதல்வர் கருணாகரன், கண்ணகிகோட்டத்திற்கு செல்ல கேரளவனப்பகுதி வழியாக சாலை அமைக்க உத்தரவிட்டதைத் தொட்ந்து, தேக்கடி வழியாக கோவிலுக்குச்செல்ல 90 நாட்களில் 13 கிலோமீட்டர் சாலை தயாரானது. மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இப்பாதை வழியே கோவிலுக்குச் செல்ல, கேரள அரசிடம் நாம் அனுமதி பெறவேண்டும் என்று கேரள அரசு வற்புறுத்தியது.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலேயே கூடலூரிலிருந்து பளியன்குடி வனப்பாதை வழியாக கண்ணகி கோவிலுக்குச் சென்று வழிபட நமக்கு நடைபாதை வசதி இருந்துள்ளது. ஆனால் கடந்த 1982-ல் தமிழக வனப்பகுதியான பளியன்குடி வழியாக கண்ணகிகோவிலுக்குச் சென்றவர்களை, மரம் வெட்டவும், வேட்டையாடவும் வந்த கும்பல் என கேரள வனத்துறையினர் பிடித்து பொய் வழக்குப் போட்டனர். விசாரணையில் பொய்வழக்கு எனத்தெரிந்ததால் கேரள நீதிமன்றம் அணைவரையும் விடுதலை செய்தது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 1985 முதல் இருமாநில அரசு அதிகாரிகளும் கலந்து பேசி விழா நடத்துகின்றனர். இக்கோட்டத்தில் ஒருவாரம் வரை மக்கள் தங்கியிருந்து கொண்டாடிய சித்திரை முழுநிலவு விழா, காலப்போக்கில் கேரள வனத்துறையின் கெடுபிடியால் தற்போது ஒருநாள் விழாவாக மாறியது. தமிழகத்து எல்லையிலுள்ள, தமிழ்கடவுள் மங்கலதேவியை, தமிழர்கள் சென்று வணங்கிட, கேரளஅரசிடம் அனுமதி பெறச்சொல்வதால் இங்கும் தமிழரின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது.... தமிழக அரசு கூடலூர் பளியன்குடிவழியாக கண்ணகி கோவிலுக்கு நிரந்தர பாதை அமைத்து கொடுத்தால், தமிழகத்து எல்லையிலுள்ள, தமிழ்கடவுள் கண்ணகியை, தமிழர்கள் சென்று வழிபட, இனி தடை ஏதும் இருக்காது....

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Viji2003/மணல்தொட்டி&oldid=2522804" இலிருந்து மீள்விக்கப்பட்டது