Vinoja kesavan
இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புத்தான் காதல்.
அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதும், மனைவி கணவனிடத்தே கொண்டிருப்பதும் காதல்தான்.
ஆனால் அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதை பற்று என்றும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதைப் பரிவு என்றும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதை நட்பு என்றும், கணவன் மனைவியிடத்தோ, மனைவி கணவனிடத்தோ கொண்டிருப்பதை அன்பு என்றும் நாம் வகுத்துக் கொண்டுள்ளோம்.
இந்த அன்பு, நேசம், பிரியம், பற்று, பரிவு, நட்பு எல்லாமே காதலென்ற சொல்லினுள்ளேயே அடங்குகின்றன. இருந்தும் தற்போது காதல் என்பது ஆண் பெண் இடையேயுள்ள அன்பை மட்டும் குறிப்பதாகி விட்டது.
இந்தக் காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.
மகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார். காதலினாலுயிர் வாழும் - இங்கு காதலினால் உயிர் வீரத்தில் ஏறும் காதலினால் அறிவுண்டாகும் - இங்கு காதல் கவிதைப் பயிரை வளர்க்கும் ஆதலினால் அவள் கையைப் - பற்றி அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி வேதனை இன்றி இருந்தேன்........ (காதற்பாட்டு, அந்திப்பொழுது - பாரதியார் பாடல்கள்)
ஆழமான அன்பு நிறைந்த காதல் ஒருவனுக்கு இன்பத்தையும், இனிமையையும் மட்டுமல்லாது வீரத்தையும், துணிவையும் அறிவாற்றலையும் வாழ்வில் பற்றுதலையும் கொடுக்கிறது. இதை இன்றைய ஆராய்சியாளர்களும் மருத்துவர்களும் மட்டுமல்லாது அன்றைய கவிஞர்களும் அனுபவித்து உணர்ந்து சொல்லியுள்ளார்கள்.
காதல் இல்லாத வாழ்வே இல்லையெனக் கூறலாம். அப்படியொரு வாழ்வு இருந்தால் அது அர்த்தம் இல்லாததாகவும், சோகம் நிறைந்ததாகவும், தனிமைப் பட்ட உணர்வைத் தருவதாகவும், தாழ்வுச் சிக்கலைத் தோற்றுவிப்பதாகவுமே இருக்கும்.
மனிதர் தோன்றிய காலத்திலிருந்தே காதலும் தோன்றி விட்டது. இதை யாரும் இல்லையென்று சொல்லி விட முடியாது. பண்டைய காலத்திலேயே காதல் ஆதரிக்கப் பட்டுள்ளது. களவியல் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இருந்தும் இடைப்பட்ட காலத்தில் காதல் என்ற வார்த்தையை உச்சரிப்பதே தவறு என்றதொரு தப்பான கருத்து எம்மவரிடையே நிலவியது. இதற்கான முக்கிய காரணம் எம்மவரிடையே தலை விரித்தாடிய சாதி, மதம், அந்தஸ்து போன்ற அர்த்தமற்ற காரணங்களே.
இன்றைய போரும் அதனால் ஏற்பட்ட புலம் பெயர் வாழ்வும் எம்மவரிடையே ஆழப்பதிந்து விட்ட இப்படியான சம்பிரதாயங்களை முழுமையாக வழக்கொழிய வைக்கா விட்டாலும் ஓரளவுக்குத் திருத்தியுள்ளன.
தற்போது காதலனும் காதலியும் மற்றவர் அறியாமல் ஒருவரை யொருவர் தனியாகச் சந்தித்து மனம் விட்டுப் பேசிக் கொள்ளும் களவியலை பெற்றோர்கள் கண்டும் காணாதவர்கள் போல இருந்து அநுமதிக்கிறார்கள்.
மனம் ஒத்த காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து மனம் விட்டுப் பேசுவது ஆரோக்கியமானது. அவசியமானது.
மிகமிக நெருக்கமான அன்பின் ஆழ்ந்த வெளிப்பாடே உடல் இணைவு என்றாலும், காதலர்கள் தமக்கென ஒரு வேலி போட்டு அன்பால் மட்டும் தழுவிக் கொள்வது அழகானது.
உடல்களை விடுத்து உள்ளங்கள் பரிசிக்கும் காதல் உன்னதமானது.