Kopayone
கோப்பாய் வரலாறு
தொகு'இடப்பரப்பும் நிலத்தன்மையும்
யாழ். மாவட்டம் வலி-கிழக்கு பகுதி கோப்பாய் தெற்கு வேளாந்தோப்பு முதல் வளவாய் இறுதியாக சுமார் 42 சதுர மைல் விஸ்தீரணமுடையதாய் கோப்பாய், நீர்வேலி, புத்தூர், அச்சுவேலி என்ற நான்கு கிராமச் சங்க இடப்பரப்புக்களையும் உரும்பிராய், ஊரெழு பட்டின சபையையும் கொண்டதாயுள்ளது. இன்றைய அரசியலமைப்பின்படி கோப்பாய் பாராளுமன்றத் தொகுதியாகியுள்ளது.
இதில் கோப்பாய் கிராமச்சங்க இடப்பரப்பு கோப்பாய் வடக்கு, கோப்பாய் தெற்கு, இருபாலை ஆகிய மூன்று விதானைமார் இடங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தற்போது (1994 இல் ) கோப்பாய் வடக்கு, கோப்பாய் மத்தி, கோப்பாய் தெற்கு, இருபாலை, கட்டப்பிராய், கல்வியங்காடு எனும் ஆறு கிராமசேவையாளர் பிரிவுகளாக விளப்பமான எல்லைகளையுடையதாய் பிரிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 சதுர மைல் விஸ்தீரணமுடையது. குறித்த இடப்பரப்பில் யாழ் -பருத்தித்துறை பிரதான வீதி, நல்லூர்-அச்சுவேலி, இராச வீதி இரண்டும் வடக்கு தெற்காகவும் கைதடி -மானிப்பாய் வீதி, இருபாலை -கோண்டாவில் வீதி என்பன கிழக்கு மேற்காகவும் ஊடறுத்துச் செல்கின்றன. இருபாலை ஐந்து சந்தியிலிருந்து பழந்தெரு பிரிந்து இருபாலையூடக வடக்கு நோக்கி ஒரு மைல் தூரம் வரை சென்று நாவலர் பாடசாலையடியில் மீண்டும் பருத்தித்துறை வீதியை அடைகிறது. இராச வீதியிலிருந்து இன்னொரு வீதி பிரிந்து வடக்கு நோக்கி ஒரு மைல் தூரம் வரை சென்று இருபாலை கலாசாலை வீதியை அடைகிறது. குறித்த கோப்பாய் கிராமசங்க இடப்பரப்பின் கிழக்கு - உப்பாறு, வடக்கு-நீர்வேலி, மேற்கு-உரும்பிராய், கோண்டாவில், தெற்கு-நல்லூர், திருநெல்வேலி எல்லைகட்க்கு இடைப்பட்டதாயுள்ளது.
இதில் கோப்பாய் வடக்கு, கைதடி- மானிப்பாய் வீதியை தெற்கு எல்லையாகக் கொண்டு தற்போதுள்ளது.உப்பாற்றங்கரையிலிருந்து நிலம் படிப்படியாக உயர்ந்து இராச வீதிவரை செல்கிறது. உப்பாற்றினை அடுத்து களிமண் உவர் தரையும் யாழ்-பருத்தித்துறை வீதியையடுத்து இடையிடை மணல் தரையும் அப்பால் செம்மண்ணும் படிமுறையே கூடி நிலமும் உயர்ந்து இராச வீதிவரை சென்று அப்பால் பதிந்து செல்கிறது அதற்குத் தக நீரிலுள்ள உவர்த்தன்மையும் படிப்படியாகக் குறைந்து நன்னீர் காணப்படுகிறது. கிணறுகளும் கிழக்கே 8` -12` யிலிருந்து படிப்படியாகக் கூடி இராச வீதியையடுத்து 25`-30 அடி ஆழமுடையவனாகக் காணப்படுகின்றன.
1945 ஆம் காலப் பகுதியில் இராச வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட வைரக்கற்பார்கள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு கமத்திற்கு மிக வாய்ப்பான அசல் செம்மண் தோட்டங்களாக்கப்பட்டுள்ளன யாழ், புத்தித்துரை வீதியில் கிழக்குப் புறமாய்க் குடியிருப்பு, தோட்ட நிலம், வயல், மேய்ச்சல் தரவை, சதுப்பு நிலம் என ஐவகை நிலங்கள் காணப்படுகின்றன. மேற்குறித்த குடியிருப்புப் பகுதியில் நாற்சந்தியிலிருந்து சுமார் 100 யார் வடபுறமாய் பழைய கோப்பாய்க் கோட்டையிருந்ததற்கான அறிகுறிகள் இன்றுமுண்டு.
கோப்பாய்க் கோட்டை
ஈழவள நாட்டின் வடபகுதியிலிருந்து தமிழரசிற்கு நல்லூர் இராசதானியாகவிருந்தது. சிங்கைபுரம், நல்லைநகர், யாழ்நகர் என்ற பெயரும் காலத்துக்கு காலம் வழங்கப்பட்டன. தலைநகரில் பலமான கோட்டையிருந்தது, பாதுகாப்பிற்காக கோப்பாயிலும் வன்னிப் பிரதேசங்களிலும் கட்டப்பட்ட கோட்டைகளிருந்தன. கோ- அரசன் பாய்-இருப்பிடம் கோப்பாய் என்பது அரசன் இருப்பிடம் எனவும் நல்லூர் மந்திரி மனையருகே தூர்ந்து காணப்படும் சுரங்கப்பாதை உபதலைநகரமான கோப்பாய்க்குச் செல்ல உதவியதாகவும் ஆபத்துக் காலங்களில் அரசர் இதன் மூலம் தப்பிக் கோப்பாய்க்குச் சென்றதாகவும் யாழ்ப்பாண இராச்சியம் எனும் நூலில் காணப்படுகிறது. யாழ்ப்பாணம் அரசின் கூழங்கைச் சக்கரவத்தி முதல் சங்கிலியன் செகராசசேகரன் இறுதியாக ஆட்சி செய்த விபரங்களை இலங்கைச் சரித்திரம் கூறுகின்றது. சிங்கள அரசினால் காலத்துக்குக் காலம் எடுக்கப்பட்ட படையெழுச்சிகள் முறியடிக்கப்பட்டு தமிழரசு நிலைத்து நின்றது.
1505 இல் இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசர் தென்னிலங்கையில் கரைநாடுகளை வசப்படுத்தி ஆண்ட போதும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற எடுத்த படையெழுச்சிகள் பல தோற்க்கடிக்கப்பட்டன. மீண்டும் 1624 இல் புரட்டாதியில் காக்கைவன்னியன் என்பவன் சூழ்ச்சியுடன் பறங்கிப் படை வழமை
போல் கொழும்புத்துறையில் இறங்காது பண்ணையில் இறங்கி நல்லூரை நோக்கி நகர்ந்தது. அன்று விஜயதசமி, ஆயுத பூசையில் தமது ஆயுதங்களை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்த நேரம். திடீரென நுழைந்த பறங்கிப் படைகளின் குண்டுமாரிக்கு எதிர்கொள்ள தமிழ் வீரர்கள் ஆயத்தமான போது காக்கைவன்னியன் தோன்றிச் செய்த சூழ்ச்சியினால் சங்கிலியனை அகப்படுத்திச் சிறையிலிட்டனர். சங்கிலியன் சிறைக்கூடத்திலிருந்து சுரங்கப்பாதை வழியாக வெளியேறி தப்பி கோப்பாய்க் கோட்டைக்குப் பின்வாங்கினான். பறங்கியர் நல்லூர்க் கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டு கோப்பாய்க் கோட்டையை நோக்கி வந்தனர். பறங்கியர் வருகையை அறிந்த சங்கிலியன் இரவோடிரவாக வன்னிக் கோட்டையை நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பறங்கியர் காக்கைவன்னியனின் உதவியுடன் ஆனையிறவுப் பூசந்தியில் வைத்துச் சங்கிலியனை இலகுவாக அகப்படுத்தியதாகச் சரித்திரம் கூறுகிறது.
பறங்கியர் நல்லூர்க் கோட்டையை இடித்துப் பண்ணையில் கோட்டை கட்டினார்கள். கோப்பாய்க் கோட்டையையும் முற்றாக இடித்துத் தரைமட்ட ஆக்கினார்கள். குறித்த தரைமட்டமாக்கப்பட்ட கோட்டையின் நுழைவாயிலில் பழைய கோட்டை (OLD CASTLE ) என்று எழுதப்பட்டிருந்த கட்டிடம் சில காலத்தின் முன்னரே இடித்தழிக்கப்பட்டது. குறித்த கோட்டை வளவில் செங்கற்க்களாலான உறுதியான சுவர்களையுடைய விசாலமான பழமையான வீடு ஒன்று இன்றுமுண்டு. தற்போது பல வீடுகள் கட்டப்பட்ட போதிலும் சில இடங்களில் நிலத்தினை அகழும் போது செங்கற்க் குவியல்கள் வெளிப்படுகின்றன. குறித்த கோட்டையிருந்த இடத்திலுள்ள குடியிருப்பாளர்கள் உறுதிகளிலும் கோட்டை வாய்க்காலும் பழைய கோட்டையும் என்றே எழுதப்படிருப்பதுவும், நல்லூர்க் கோட்டைக்கு யமுனா ஏரி போல கோப்பாய்க் கோட்டைக்குக் குதியடிக்குளம் நீச்சல் தடாகமாக அமைந்திருந்ததும். குறித்த கோட்டை வளவிற்கு தெற்கு எல்லையில் செல்லும் கோட்டை வாய்க்காலும் கோப்பாய் கோட்டையை நினைவுபடுத்தும் சின்னங்களாக இன்றும் உள்ளன.
குறித்த குதியடிக்குளம் 1955 ஆம் ஆண்டளவில் கி.மு.ச. கோரிக்கையின் படி அரச செலவில் ஆலமாக்கப்பட்டு, குறித்த குளத்தைச் சுற்றியுள்ள அறைசாந்தால் கட்டப்பட்ட அகலமான சுவர்கள் இடிக்கப்பட்ட போது தென்மேற்கு மூலையில் 6 x 2 அடி வரையுள்ள ஓர் குழி காணப்பட்டது. அதற்குள் சாம்பல் போன்ற உக்கிய அசேதனப் பொருள்கள் காணப்பட்டன. பண்ண்டைய வழக்கப்படி தடாகம் பூரணமாக்கப்பட்ட வேலை கொடுக்கப்பட்ட நரபலியின் சேதனப் பொருட்க்களாயிருக்கலாம் என்ற அபிப்பிராயம் பல அனுபவத்தர்களினாலும் கூறப் பெற்றது.
மக்களும் குடியிருப்புக்களும்
யாழ்ப்பாணத்தின் பூர்வீககுடிகள் நாகசாதியர் இவர்கள் நாக வழிபாடு உடையவராய் இருந்தனர். நாகதம்பிரான், நாகபூசணி, நாகம்மாள் கோயில்கள் பலவும் அதற்க்கான சான்றுகளாயுள்ளன
கோப்பாயிலும் நாகவழிபாட்டிற்க்கான சான்றுகள் இன்றும் காணப்படுகின்றன. கோப்பாய் வடக்கு கல்லொழுங்கை முடிவின் கிழக்குப் புறமாய் வயலோரத்தில் தாளை மரநிழலில் புராதனமான நாக தம்பிரான் வழிபாட்டிடம் ஒன்று உண்டு. வயலில் விதைப்பு அரிவி வெட்டு சூடுமிதித்தல் ஆரம்பிக்கும் போது நாகதம்பிரானை வழிபடுவது இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சுமார் 1800 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிதமான பலானை கண்ணகையம்மன் ஆலயம் நாக வழிபாடு நடந்த கூழா அருகிலே ஸ்தாபிதமானது. கூழாவடியில் இன்றும் புராதன வழக்கத்தையொட்டி நாகவழிபாடுகளும் நடைபெறுகின்றன. கூழாவிலாச்சி என்று நேர்த்தி செய்வது இன்றும் வழக்கத்திலுண்டு.
சில வருடங்கள் முன் குளம் ஆழமாக்கும் வேலைகள் நடந்த போது பழைய செங்கல் தளம் காணப்பட்ட நாச்சிமார் கோவிலடிக் குளமும் ஆராய்ந்தறிய வேண்டிய தொன்றாகும்.
தென்னிந்தியாவிலிருந்து தமிழர் அண்மையிடங்களிலுள்ள அந்தமான், நிக்கோபார், பீஜி தீவுகளில் குடியேறியது போன்று மிக அண்மையிலுள்ள இலங்கையின் வடபாகத்திலும் வந்து குடியேறினர். மேலும் மேலும் கவிவீரராகவன் பரிசிலாகப் பெற்ற மணற்றி எனும் இந்த மணல் மேட்டில் அவனோடு வந்தும் பலர் குடியேறியதாகச் சரித்திரமுண்டு. இவ்வாறு வந்தவர்கள் தாமிருந்து வந்த திருநெல்வேலி, நல்லூர் போன்ற ஊர்ப்பெயர்களையே குடியேறிய இந்த இடங்கட்க்கும் சூட்டினார்கள். ஆதியிலிருந்து நாகரும் பின்னர் தென்னிந்தியாவிலிருந்து காலத்துக்கு காலம் வந்த தமிழரும் கலந்ததே இன்றைய யாழ்-தமிழர் என்றால் மிகையாகாது.
தென்னிந்தியாவிலிருந்து தமிழர் குடியேறியுள்ள இடங்களில் சிவன் வழிபாடுகளும், தொடர்ந்து விநாயகர், முருகன், அம்பாள், வைரவர் முதலிய வழிபாடுகளும் இந்த வகையாகவே இங்கு வந்திருக்க வேண்டும். பழைய ஆலயங்கள் சில உருமாறிய போதிலும் நாகதம்பிரான், நாகபூசணி, நாகம்மாள் ஆகிய ஆலயங்களின் பெயர்மாறாது இன்றும் பழமையை நினைவூட்டுகின்றன. பெயர் மாறிய சில ஆலயங்களில் இன்றும் முன்னைய வழமையையொட்டி பங்குனித் திங்கள் தோறும் பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன.
கிணறுகள் தோண்டுவதற்குரிய நவீன சாதனங்களில்லாத அக்காலத்தில் மனித வலுவைப் பெரிதும் பயன்படுத்தியே தோண்டப்பட்டதான பழைய கிணறுகளை இன்றும் காணக்கூடியதாயுள்ளது. இவ்வாறு தோண்டப்பட்ட கிணறுகளின் உட்ப்புறச் சுவர்கள் அலுத்தமில்லாது கரடுமுரடாயும் மண்கண்டத்தில் கட்டப்பட்ட மேற்ச்சுவர்கள் அரைச்சாந்து கொண்டு கண்டக் கற்களால் கட்டப்பட்டதாயும் உள்ளதனையு இன்றும் அவதானிக்கக் கூடியதாயுள்ளது. மக்கள் நன்னீருள்ள செம்மண் தரையான மேட்டுப்பிரதேசங்களிலே பெரும்பாலும் குடியிருந்தனர். இந்த வகையில் கோப்பாய் வடக்கில் இலகடி, கம்பாவத்தை, மாக்கம்பரை, கணவதியம்புலம், அப்பிலானை முதலான கிணறுகள் உருமாறாது இன்றுமிருப்பதனையும், தோட்டக்கிணறுகளான உண்ணாப்புலம், நொங்கியவத்தை, குயவன்புலம், தளம்பத்தை, அம்பியவலைக் கிணறுகளும் இவ்வாறே அமைத்துள்ளதையும் இன்றும் அவதானிக்கக் கூடியதாயுள்ளது.
கிணறுகளைச் சுற்றியே மக்கள் சமூகரீதியாக கூட்டம் கூடமாக குடியிருப்பை அமைத்து வாழ்ந்தனர். வளவுகளுக்குள் மா, பலா, வாழை, தென்னை முதலிய பலம் தரு மரங்களும் சுற்றவரவுள்ள இடங்களில் பனை, வேம்பு, கிலுப்பை, புளி என்பனவும் காணப்பட்டன. வெளியான நன் செய்நிலங்களில் வரகு, கருத்தசாமை, எள் போன்ற சிறு தானியப் பயிர்களும் மானவாரியாகச் செய்தனர். தோட்டங்களில் பொதுவாக துலா, பட்டைக்கொடி கொண்டு இறைத்து சிறுதானியப் பயிர்களைச் செய்து தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்தனர். இவ்வாறு தோட்டங்களில் செய்வது கமம் என்றும் மலையை நம்பி மானவாரியாகவும், வாய்ப்பான இடங்களில் அருகேயுள்ள குளங்களிலிருந்து ஏற்றுப்பட்டைகள் மூலம் நீர்பாய்ச்சியும் வயல் நிலங்களில் நெல் செய்வது வேளாண்மை என்றும் கூறப்பட்டு அதற்க்கேற்றவாறு அவர்களைக் கமக்காரர், வேளாளர் என்றழைப்பதும் நமதூர் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. கிழக்கேயுள்ள வயல்களில் வேளாண்மை செய்வோர் குடியிருப்புக்களாக மேற்கிலுள்ள மேட்டு நிலங்களிலேயிருந்தன. வயல் உறுதிகளில் நெற் பரப்பு என்றும் மேட்டு நிலத்துக்குரிய கம உறுதிகளில் வரகுப் பரப்பு என்றும் மேலும் அவர்களின் அளவுகள் முறையே பரப்பிற்கு 12 குழிகள் 18 குழிகள் என்று கணக்கிடுவது இன்று வரையும் இருந்து வருகிறது.
விவசாயத்திற்கும் மற்றும் குடியிருப்புக்களுக்கும் தேவையான உபதொழில்களைச் செய்வோர் தொழிலுக்கு அமைவாகவும் தங்கள் தொழில் பாதுகாப்புக் கருதியும் கூட்ட கூட்டமாகவே வசிப்பிடங்களை அமைத்து வாழ்ந்து வந்த நிலைமை தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கிறது. இக் கூட்டத்தார் ஏனையோருடன் சேர்ந்து பொதுவாகவுள்ள ஆலயங்கட்குச் சென்று வழிபடுவதனோடு, சிறப்பாகத் தங்கள் பாரம்பரிய குல தெய்வங்கட்க்கு கோயில்கள் அமைத்து வழிபாடு செய்தும் வருகின்றனர். மர இரும்புத் தொழிலாளர்கள் காளிதேவியையும், பனை தென்னந் தொழிலாளர்கள் அண்ணமார்,, பேர்த்தியம்மனையும், சலவைத் தொழிலாளர்கள் பெரியதம்பிரானையும், வைரவரையும், பொற் கொல்லர் நாச்சிமாரையும், மற்றத் தொழிலாளர்களும் தங்கள் இருப்பிடங்களின் மத்தியில் தத்தம் குல தெய்வங்கட்க்கு கோயில்களை அமைத்து வழிபாடு செய்து வருவது இன்று வரை நீடிக்கிறது.