திருப்பந்துருத்தி   பாப்பு ஹஜ்ரத்

மேலத்திருப்பந்துருத்தி வாழ் முஸ்லிம்களில் கடந்த இரண்டு தலைமுறையினருக்கு பாப்பு ஹஜ்ரத் அவர்களைத் தெரியாமலிருக்க முடியாது. பெரியப் பள்ளிவாசல் தலைமை இமாமாகவும் மதரஸா மன்பவுல் ஹிதாயாவின் தலைமை ஆசிரியராகவும் அரை நூற்றாண்டு காலம் அதாவது 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய இந்த மாமேதையை யாரால் மறக்க முடியும்?

பாப்பு ஹஜ்ரத் என்றும், பாப்புபாய் ஹஜ்ரத் என்றும் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்த மாமேதையின் இயற்பெயர் அப்துல்லாஹ் ஹஜ்ரத். ஜனாப் அப்துல் மலிக், மௌலவி முஹம்மது மன்சூர், மெளலவி முஹம்மது அத்ஹர் ஆகியோரின் தந்தையாகிய இப்பெரு மேதை வசித்தது பெரியப்பள்ளிவாசல் தெருவின் 57 எண் வீட்டில்.

எண்ணற்ற அறிஞர் பெருமக்களை தன்னகத்தே கொண்ட பேறு பெற்ற நமதூர் இந்த அறிஞரையும் ஏற்றிப் போற்றியது என்பதை மறுப்பதற்கில்லை.

முஅத்தின் இகாமத் சொல்லத் தொடங்கும்போது முன் வரிசையில் ஓரமாக அமர்ந்திருக்கும் ஹஜ்ரத் அவர்கள் எழுந்து, மிஹ்ராபை சென்றடைவதற்குள் கண்இமைக்கும் நேரத்தில் தலைப்பாகை கட்டுவார்களே! நேரில் கண்டு ரசித்தவர்களுக்குத்தான் அந்த நேர்த்தி தெரியும்.

ராஜநடை என்று சொல்லக் கேட்டிருப்போம் ஆனால் எந்த ராஜாவின் நடையையும் நாம் நேரில் பார்த்ததில்லை. ஆனால் பாப்பு ஹஜ்ரத் அவர்களின் நடையழகை பார்த்தவர்களுக்குத் தான் ராஜ நடை என்னும் வார்ததையின் பொருள் புரிந்திருக்கும்.

தெருவில் அவர்கள் நடந்து வரும்போது திறந்திருக்கும் வீட்டுக் கதவுகளும் சன்னல் கதவுகளும் மூடிக் கொள்ளும். வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்திருக்கும் பெரியவர்கள் கூட எழுந்து இறங்கி வந்து தெருவில் நின்று கொள்வர். இவ்வளவுக்கும் அவர்கள் நடக்கும் போது வலப்புறம் இடப்புறம் எங்குமே திரும்ப மாட்டார்கள். அவர்களின் பார்வை தரையை நோக்கி மட்டுமே இருக்கும்.

வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு வரும்போது அவர்கள் அணியும் நீண்ட அங்கி அழகு. மிக நேர்த்தியாக அவர்கள் அணியும் தலைப்பாகை தனி அழகு. கம்பீரமாக பள்ளிவாசலில் அவர்கள் நுழையும் அழகே அழகு

கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஏகத்துவக் காற்றை நாமெல்லோரும் சுவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டிருக்காத அந்தக் காலகட்டத்திலேயே அவர்களால் இயன்ற அளவு மூடப்பழக்கங்களை கண்டித்திருக்கிறார்கள். கல்யாணப் பந்தலுக்கு கால்நடுவது போன்ற கழிசடைச் செயல்களுக்கெல்லாம் பாத்திஹா ஓதக் கூப்பிட்டால் வரமாட்டார்கள்.

இமாமாக நின்று தொழுகை நடத்தும்போது, தக்பீர் கட்டும்போதும், ருகூவின் போதும், சஜ்தாவின் போதும் சரியான ஏற்ற இறக்கத்துடன் அல்லாஹ் அக்பர் சொல்லும் அழகை இது வரை வேறு எந்த இமாமிடமும் நாம் கண்டிருக்க முடியாது. அதிலும் கடைசி இருப்பில் அமரும்போது சொல்லும் அல்லாஹ் அக்பர் மூலம், தாமதமாக வருபவர் அது கடைசி இருப்பு என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

புனித இரவுகளில் பள்ளியில் நடைபெறும் ராத்தீபு என்னும் திக்ரு மஜ்லிஸை பாப்பு ஹஜ்ரத் அவர்கள் வழிநடத்தும் விதமே தனி. ராத்தீபைத் தொடங்கி வைத்து இருவரிசகளுக்கும் நடுவில் நடந்து வந்து அனைவரும் ஒரே சீராகச் சொல்கின்றனரா? என கவனிப்பார்கள். சரியாகச் சொல்லாதவர்கள் முன்பு நின்று அவர் சரியாகச் சொல்லும் வரை அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்கள். இப்போதெல்லாம் திக்ரு மஜ்லிசில் சிறுவர்களைத் தான் காணமுடிகிறது. ஆனால் அந்தக் ◌காலகட்டத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை கூட்டத்தில் பள்ளி நிரம்பி வழியும். வயதில் மூத்த பெரியவர்கள் மட்டுமல்ல வசதி படைத்த செல்வந்தர்களும் கூட ஹஜ்ரத் அவர்களின் கட்டளைக்கு மகுடிக்கு மயங்கிய நாகம் போல் கட்டுண்டு கிடப்பார்கள். இப்படிப்பட்ட ஹஜ்ரத்மார்களை இவர்களுக்குப்பின் இதுவரை இந்த ஊர் கண்டதில்லை.

50 ஆண்டு காலம் ஒரே பள்ளியில் இமாமாகவும் குர்ஆன் போதிக்கும் ஆசிரியராகவும் தொடர்ந்து பணிபுரிந்த அவர்கள், மிகக்குறைந்த வருமானத்தில் தன்மானத்துடன் காலம் கழித்திருக்கிறார்கள். 3 ஆண்கள் 7 பெண்கள் ஆக 10 குழந்தைகள் நிறைந்த அந்தக் குடும்பம் வல்ல இறைவனின் மாபெரும் மறைமுக ◌பரக்கத்தால் எப்போதும் களைகட்டியிருக்கும்.

அந்தக் காலகட்டத்தில் ஹஜ்ரத்மார்கள் மலேசியா சிங்கப்பூர் என்று தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள பயணம் புறப்படுவார்கள். ஆனால் பாப்பு ஹஜ்ரத் அவர்கள் தம் வாழ்நாளில் ஒருபோதும் ஹஜ் பயணத்தைத் தவிர வேறெந்த வெளிநாட்டுப் பயணமும் மேற்கொண்டதில்லை. தன்மானத்தை இழந்து எந்த செல்வந்தர் முன்பும் கைகட்டி நின்றதில்லை. இன்னும் சொல்லப்போனால் பாப்பு ஹஜ்ரத் அவர்கள் ஒரே ஒரு முறை மலேசியா சிங்கப்பூர் சென்றிருந்தால் அந்த நாடுகளில் வாழும் நமதூர்க்காரர்கள் மட்டுமே இலட்சக் கணக்கில் வாரிவழங்கி ஹஜ்ரத் அவர்களைக் குளிர வைத்திருப்பர்கள்.ஏனெனில் அனைவருமே ஹஜ்ரத் அவர்களிடம் குர்ஆன் பயின்ற மாணவர்கள் தான். ஆனால் இந்தத் தன்மானச் சிங்கம் ஒருபோதும் யாரிடமும் தலைவணங்கி பழக்கப்பட்டதில்லை.

ஹஜ் என்பது வசதி படைத்த செல்வந்தர்கள் மட்டுமே நிறைவேற்றக் கூடியது. சாமானிய மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து தம் வாழ்நாட்களைக் கழித்த இந்த ஹஜ்ரத் அவர்களும் அவர் தம் துணைவியாரும் புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் பெரும் பேற்றைப் பெற்றதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.ஏனெனில் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவன் வல்ல இறைவன் அல்லவா!

நமதூரின் நல்ல மனம் படைத்த இரு தனவந்தர்கள் முறையே பாப்பு ஹஜ்ரத் அவர்களுக்கும் அவர்கள் தம் துணைவியாருக்கும் தாங்கள் பொறுப்பேற்று ஹஜ் பயணம் மேற்கொள்ள வைத்தார்கள். இறையடி சேர்ந்து விட்ட அவ்விரு நல்லடியார்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து சுவனபதியில் ஹாஜிகளின் கூட்டத்தில் அவர்களைச் சேர்த்து வைப்பானாக. ஆமீன்.

பெரியப் பள்ளிவாசலின் இமாமாக மட்டுமின்றி நமதூரின் மத்ரஸா மன்பவுல் ஹிதாயாவில் திருக்குர்ஆனைக் பயிற்றுவிக்கும் பேராசிரியராகவும் பாப்பு ஹஜ்ரத் அவர்கள் பணியாற்றினார்கள்.

சற்றொப்ப அரை நூற்றாண்டு காலம் நமதூர் பெரியப் பள்ளிவாசல் சுற்று வட்டாரத்தில் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் இன்று திருக்குர்ஆனைத் திருத்தமுற பிழையின்றி ஓதுகிறார்கள் என்றால் அந்தப் புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர் கண்ணியமிகு பாப்பு ஹஜ்ரத் அவர்கள் ◌தான் என்றால் அது மிகையாகாது.

அல்லாஹ்வின் திருமறையை அழகுற ஓதும் அனைத்து உள்ளங்களும் அந்த மாமேதையை நினைக்காமலிருக்க முடியாது. நமதூரில் இன்றளவும் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் புண்ணியர்களின் நன்மையில் ஒரு பகுதி இந்த கண்ணியத்திற்குரியவருக்கு இறைவனிடம் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

மாணவ மாணவியருக்கு திருக்குர்ஆனைப் பயிற்று வித்த இந்த மாமேதை அத்தோடு றிறுத்திக் கொள்ள வில்லை. தமது குழந்தைப் பருவத்தைக் குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ளாமல் வீணாக்கி கைசேதப் பட்ட இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் பக்கம் தம் கவனத்தை திருப்பினார்கள். ஆம் தமிழகத்தின் எந்த ஊரிலும் இல்லாத ஒரு நடைமுறையை நமதூரில் ஏற்படுத்தினார்கள், ஆம். அது தான் தர்த்தீலுல் குர்ஆன் என்னும் ஓர் அதிஅற்புதத் திட்டம்.

ஒவ்வொரு ஆண்டும் ரஜப் மாதம் முதல் பிறையில் தொடங்கி சுமார் இரண்டு மாத காலம் இரவு இஷாத் தொழுகைக்குப் பின்னர் பள்ளியில் வைத்து ஆர்வமுள்ள பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு திருக்குர்ஆனை பிழையின்றி ஓதப் பயிற்சி அளித்தார்கள். அதன் மூலம் பயன் பெற்ற பெரியவர்களும் இளைஞர்களும் ஏராளம்.

இந்த மாமேதையின் நன்முயற்சியில் உருவான இந்த நல்லத் திட்டத்தை இன்றளவும் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது இந்தப் பேரறிஞரை ஒருபோதும் நமதூர் ஜமாஅத்தினர் மறக்கவில்லை என்பதற்கு ஓர் அத்தாட்சி.

திருக்குர்ஆனை ஓதக் கற்கும் ஆரம்ப மாணவ மாணவியருக்குப் பயன்படும் விதத்தில் அரபி மொழிப்பாடத்தை மிக அழகாகவும் எளிமையாகவும் கற்பிக்க பாப்பு ஹஜ்ரத் அவர்கள் உருவாக்கிய 'தஃலீமுல் கவாயித்' என்னும் சின்னஞ்சிறு கையேடு அரபி மொழி போதனையில் ஓர் அரிய சாதனை எனலாம். நமதூரில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் இன்றளவும் அரபி ஆரம்பப் பாடசாலை மாணவ மாணவியருக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமது சொந்த அனுபவத்தின் மூலம் உருவாக்கிய இந்த அற்புத நூலின் வெளியீட்டு உரிமையை, தாம் வாழும்போதே நமதூர் முஸ்லிம் ஜமாஅத்துக்கு மனமுவந்து அர்ப்பணித்த இந்த மாமேதை பெருமைக்கும் புகழுக்கும் அப்பாற்பட்டவர்கள். சின்னஞ்சிறு குழந்தைகள் எடுத்துச் செல்ல எளிதாக அலிஃ பே அட்டையை வடிவமைத்த பெருமையும் இந்த அறிஞரையே ச்சாரும்.

ஸிம்துஸ்ஸிப்யான், ஃபராயிலுல் முஃமினீன், துஹ்ஃபத்துல் அத்ஃபால், போன்ற அரபுத் தமிழ் நூல்களை வாசிக்க ஆரம்பப் பாடத்தைக் கற்றுத்தரும் 'அரபுத்தமிழ் பாடம்' என்னும் நூலையும் இவர்கள் தான் உருவாக்கினார்கள். இந்த நூல்கள் எல்லாம் இவர்கள் மறைவுக்குப் பின் மறுபதிப்புச் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

ரமளானில் தராவீஹ் தொழுகைக்குப் பின் நமதூரில் வழக்கமாக ஓதப்படும் துஆக்களைத் தொகுத்து 'தராவீஹ் தொழுகை' என்னும் சிறு நூலை வெளியிட்டிருக்கிறார்கள். முஸ்லிம் குடும்பத்தினர் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளை சுவரொட்டி போல பெரிய பிரசுரமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

மத்ரஸாவில் மாணவர்களிடம் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்கள். தவறு செய்த மாணவர்களுக்குத் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். இருந்தாலும் எந்தப் பெற்றோரும் அது குறித்துக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஏனெனில் பாப்பு ஹஜ்ரத் அவர்களின் கண்டிப்பும் தண்டணையும் நியாயமானதாகத் தானிருக்கும் என்பது அனைத்துப் பெற்றோருக்கும் தெரியும்.ஊரையே நடுங்கவைத்த நிர்வாகிகள் கூட பாப்பு ஹ்ரத் அவர்களிடம் கனிவோடும் பரிவோடும் தான் நடந்து கொள்வர்.

ஐவேளைத் தொழுகை நடத்தும் இமாமாகவும் மத்ரஸாவின் ஆசிரியராகவும் நீண்ட நெடுங்காலம் அவர்கள் பணிபுரிந்த போதும், உடல்நிலை காரணமாகவோ சொந்த அலுவல் காரணமாகவோ இவர்கள் விடுப்பு எடுத்து யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது.

மேலத்திருப்பந்துருத்தி வரலாற்றில் எத்தனையோ ஆலிம்கள் இடம் பெற்றிருக்கலாம் ஆனால் அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்து, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்து, ஆயிரமாயிரம் அறிஞர் பெருமக்களை உருவாக்கி விட்டு, அமைதியாய் நமதூர் கப்ருஸ்தானில் மீளாத்துயில் கொண்டுள்ள இந்த மார்க்க அறிஞருக்காக நமதூர் மக்களாகிய நாம் செய்ய வேண்டிய நன்றிக்கடன் ஒன்று ஒண்டு.

மேலத்திருப்பந்துருத்தி வாழ் மக்களே! மேன்மைமிகு முஸ்லிம்களே! வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்களுக்கு மிக அருகாமையில் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த அறிஞரின் மண்ணறைக்குச் சென்று அன்னாரின் மறுமைப் பேற்றுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அரபுநாடுகளில் வாழும் அனபர்களே! விடுப்பில் நீங்கள் தாயகம் வரும் போதெல்லாம் ஒரு முறையேனும் இவர்களின் கப்ரை சியாரத் செய்து இவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.

இறைவா! உனது இன்பத் திருமறையை திருத்தமுடன் ஓத எங்களுக்குப் பயிற்சி அளித்த எங்கள் மேன்மை மிகு ஆசான் பாப்பு ஹஜ்ரத் அவர்களின் மண்ணறை வாழ்வை மகிழ்வாக்கி வைத்து, மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைத்து, அவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் கூட்டத்தில் எங்கள் உஸ்தாத் அவர்களையும் சேர்த்து வைப்பாயாக ஆமீன்.

Start a discussion with Masdooka

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Masdooka&oldid=998306" இலிருந்து மீள்விக்கப்பட்டது