பரக்கலக்கோட்டை பொதுவுடையார் கோயில்

பரக்கலக்கோட்டை பொதுவுடையார் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் பட்டுகோட்டைக்குக்கிழக்கில் முத்துப்பேட்டை செல்லும் சாலையில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[1]

இறைவன் தொகு

இங்குள்ள இறைவன் பொதுவுடையார் ஆவார். மிகப்பெரிய ஆல மரத்தின் கீழ் லிங்கத்திருமேனியாக சந்தனக் காப்பிட்டு இறைவனுக்கு பூசை நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பொங்கல் திருநாளன்று விடியற்காலம் முதல் மாலை வரை இவருடைய தரிசனம் பகலில் மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நடை அடைபட்டிருக்கும் சமயங்களில் ஆல மரத்தின் முன்னதாக அமைக்கப்பட்டுள்ள கதவுகளுக்கு பூசை செய்யப்படுகிறது. ஆல இலைகளை பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர்.[1]

வரலாறு தொகு

வான்கோபர், மகாகோபர் என்ற இரு முனிவர்களிடையே இல்லறம் மற்றும் துறவறம் தொடர்பாக வாக்குவாதம் எழுந்தது. அவர்கள் தில்லை நடராசப் பெருமானிடம் தம் வாதத்தை முன்வைத்தபோது, அவர் அவர்களை தென்திசை நோக்கிச் சென்று இரண்டு புளிய மரங்கள் இருக்கும் இடத்தில் காத்திருக்கும்படி கூறினார். இறைவன் வந்து இருவரும் ஏற்கும்படி இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்தவை என்று தீர்ப்பு கூறியதாகக் கூறுவர். இவ்வாறாகத் தீர்ப்பு வழங்கியதால் மத்யபுரீசுவரர் என்றும் பொதுவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இரு முனிவர்களும் அமர்ந்திருக்கும் சிலைகளுக்கு அருகே உள்ள புளிய மரங்கள் உறங்கும் புளி, உறங்காப் புளி என்றழைக்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014