பெரே
பெரே (beret) என்பது மென்மையானதும், வட்ட வடிவம் கொண்டதும், தட்டையான உச்சியைக் கொண்டதுமான ஒரு வகைத் தொப்பி. இதைப் பொதுவாக நெய்யப்பட்ட அல்லது கையால் பின்னப்பட்ட கம்பளியினால் அல்லது அழுத்திய கம்பளித் தகட்டினால் செய்வர். தற்காலத்தில் இத் தொப்பிகளைச் செய்வதற்கு அக்கிரிலிக் செயற்கை இழைகளையும் பயன்படுத்துகின்றனர். தற்காலத்து பெரேடுகள் பாசுக்கு இடையர்கள் பாரம்பரியமாக அணிந்த தொப்பியில் இருந்து வளர்ச்சியடைந்தது. 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சிலும், இசுப்பெயினிலும் முதன் முதலாகப் பெரும்படியாக இத் தொப்பிகளை உற்பத்தி செய்யத் தொடங்கினர். இன்றும் இத் தொப்பி வகை, இவ்விரு நாடுகளுடனும் தொடர்புடையதாக இருந்து வருகிறது. இத் தொப்பியை உலகம் முழுவதிலும் உள்ள பல படைத்துறையினரும், காவல் துறையினரும் தமது சீருடையின் ஒரு பகுதியாக அணிகின்றனர். வேறு அமைப்புக்களும் கூட இவற்றைத் தமது உறுப்பினர்களுக்கான சீருடையின் ஒரு பகுதியாக ஆக்கியுள்ளன.
சொற்பிறப்பு
தொகுபெரே என்பது, பிரசு (birrus) அல்லது பிரம் (birrum) என்னும் செல்ட்டிய மொழிச் சொல்லை இலத்தீனாக்கம் செய்து பெறப்பட்ட பிரெட்டம் (birretum) என்பதன் சுருங்கிய வடிவம் ஆகும். பிரசு அல்லது பிரம் என்னும் செல்ட்டிய மொழிச் சொல் தலை மூடியுடன் கூடிய ஒரு குட்டையான மேலாடையைக் குறிப்பது.
வரலாறு
தொகுதற்கால பெரேடைப் போன்றதொரு தலையணி வெண்கலக் காலத்தில் இருந்தே வடக்கு ஐரோப்பா முழுவதிலும் தெற்கே கிரீட், இத்தாலி ஆகிய பகுதிகள் வரையிலும் புழக்கத்தில் இருந்தன. இப் பகுதிகளைச் சேர்ந்த மினோவர்களும், எசுட்ரசுக்கர்களும் இவற்றை அணிந்ததாகத் தொல்லியல் ஆய்வுகளும், கலை வரலாற்று ஆய்வுகளும் காட்டுகின்றன. நவீன வரலாற்றுக் காலத்திலும் ஐரோப்பா முழுவதிலும், பிரபுக்களும், கலைஞர்களும் இவற்றை விரும்பி அணிந்தனர்.
குளிரான மலைப்பகுதிக் காற்றிலிருந்து காத்துக்கொள்வதற்கான அமைப்பைக் கொண்டிருந்த பாசுக்குப் பாணி பெரேயை, தெற்கு பிரான்சுக்கும் வடக்கு இசுப்பெயினுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பைரெனீசு மலைத் தொடர்களில் வாழ்ந்த பாசுக்கு இன இடையர்கள் அணிந்தனர். அவர்கள் அணிந்த தொப்பிகள் அவை புழங்கிய பகுதிகளைப் பொறுத்து வெவ்வேறு நிறங்கள் உடையனவாக இருந்தன. எடுத்துக்காட்டாக, குயிப்புசுக்கோவாவில் சிவப்பு நிறத் தொப்பிகளையும், அலவாவில் வெள்ளை நிறத் தொப்பிகளையும், விசுக்காயாவில் நீல நிறத் தொப்பிகளையும் அணிந்தனர். காலப்போக்கில் பாசுக்கு இனத்தவர் நீலத் தொப்பிகளை மட்டுமே அணியலாயினர். நெவாரேயைச் சேர்ந்தவர்கள் தமது மரபுவழி உடைகளின் ஒரு பகுதியாக சிவப்பு நிற பெரேக்களை அணிந்தனர். பிரான்சிலும், இசுப்பெயினிலும், கறுப்பு நிறப் பெரேக்களே பெரும்பாலும் பயன்பட்டன.
பாசுக்குப் பாணி பெரே தொப்பிகளின் வணிக அடிப்படையிலான உற்பத்தி 17 ஆம் நூற்றாண்டில், தெற்குப் பிரான்சில் உள்ள, பாசுக்குப் பகுதி அல்லாத ஒலோரோன்-செயின்ட்-மேரி என்னும் இடத்தில் தொடங்கியது. தொடக்கத்தில் உள்ளூர்க் கைப்பணியாக இருந்த பெரே செய்தல் 19 ஆம் நூற்றாண்டில் தொழில்மயமானது. முதலாவது தொழிற்சாலையாகிய "பீட்டெக்சு-லௌல்கெரே" 1810 இலிருந்து பெரேக்களின் உற்பத்திப் பதிவுகள் இருப்பதாகக் கூறுகிறது. 1920களில், பிரான்சில் பெரேக்கள் தொழிலாளர் வகுப்பினருடன் தொடர்பு கொண்டதாக இருந்தது. 1928 ஆன் ஆண்டளவில் பிரான்சில் 20 க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் மில்லியன் கணக்கான பெரேக்களை உற்பத்தி செய்தன.
மேற்கு நாடுகளில் ஆண்களும், பெண்களும், 1920 ஆம் ஆண்டுகளில் இருந்து விளையாட்டு அணியாக பெரேயைப் பயன்படுத்தினர். பின்னர் அது ஒரு நடப்புப் பாணியாக விளங்கியது. முதலாம் உலகப் போரின் போது, அல்பைன் படையினர், பெரேக்களைப் படைத்துறையில் பயன்படுத்தினர். இரண்டாம் உலகப் போரின் போது, ஃபீல்ட் மார்சல் மொன்ட்கொமரி இதைச் சிறப்புப் படையணிகளுக்குரிய அடையாளமாகப் பிரபலமாக்கினார்.
அமைப்பு
தொகுபெரேக்கள் தலையைச் சுற்றி இறுக்கமாகப் பொருந்தக் கூடியன என்பதுடன் அவற்றை வெவ்வேறு விதமான வடிவம் கொள்ளும்படி அணியவும் முடியும். அமெரிக்காக்களில், மேற்பகுதி ஒரு பக்கமாகச் சாய்ந்திருக்குமாறு அதனை அணிவர். எனினும் இதற்குத் திட்டவட்டமான விதி எதுவும் கிடையாது. இத் தொப்பியை ஆண், பெண் இரு பாலாருமே அணிவதுண்டு.
படைத்துறைச் சீருடைகளில் பெரேக்களில் தலைப்பட்டி இணைக்கப்பட்டு இருப்பது உண்டு. இது, தோல், பட்டு, பருத்தி போன்ற ஏதாவது ஒரு பொருளில் ஆனதாக இருக்கலாம். சில தொப்பிகளில் தலையோடு இறுக்கிக் கட்ட வசதியாக சுருக்கு நாடாக்கள் இருக்கும். இந்த நாடாக்களை இருகக் கட்டியபின் எஞ்சிய பகுதியை ஒட்ட நறுக்கி விடலாம், அல்லது உள்ளே சொருகி விடலாம். சிலவேளைகளில் நாடாவைத் தொங்க விடுவதும் உண்டு. பெரேக்களில் பொதுவாக ஒரு சின்னம் பொருத்தப்பட்டியுப்பது வழக்கம். இது துணியால் அல்லது உலோகத்தினால் செய்யப்பட்டிருக்கும். சில பெரேக்களில் இச் சின்னங்கள் பொருத்தும் இடத்தில் விறைப்பான துணி அல்லது வேறு அதுபோன்ற ஏதாவது வைத்திருப்பார்கள்.
பெரேக்களுக்கு உட்புறம் உறைகள் வைத்துத் தைப்பது வழக்கமில்லை. சில தொப்பிகளில் பகுதியாக ஒண்பட்டுத்துணி உள்ளுறை இருக்கும்.