பர்வான் யுத்தம்
பர்வான் யுத்தம் (Battle of Parwan) என்பது 1221 ஆம் ஆண்டு மங்கோலியப் பேரரசுக்கும் குவாரசாமிய அரசமரபின் மிங்புர்னுவுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தமாகும்.
யுத்தம்
தொகுகுவாரசமியா மீது மங்கோலியர்கள் படையெடுத்த பிறகு மிங்புர்னு வேறு வழியின்றி இந்து குஷ் மலைகளுக்குத் தப்பி ஓடினார். அங்கு அவர் மங்கோலியர்களை எதிர்கொள்வதற்காகக் கூடுதல் துருப்புகளைத் தனது படையில் சேர்க்க ஆரம்பித்தார். தற்போதைய ஆப்கானித்தானில் இருந்து வந்த 30,000க்கும் மேற்பட்ட குவாரசமிய வீரர்களால் இவரது இராணுவ பலமானது 60,000-ஐ அடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மிங்புர்னுவைப் பிடிக்கச் செங்கிஸ் கான் தனது தலைமை நீதிபதி சிகி குதுகுவை அனுப்பினார். ஆனால் புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட அந்தத் தளபதிக்கு வெறும் 30,000 துருப்புகளை மட்டுமே கொடுத்தார். தொடர் மங்கோலிய வெற்றிகளால் சிகி குதுகு அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை கொண்டிருந்தார். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த குவாரசமியப் படைக்கு எதிராக சீக்கிரமே அவர் பின்னடைவைச் சந்தித்தார். இந்த யுத்தமானது மங்கோலியக் குதிரைப் படைக்கு ஒத்துவராத குறுகலான பள்ளத்தாக்கில் நடைபெற்றது. மிங்புர்னு தன்னிடமிருந்த குதிரை வீரர்களை குதிரைகளிலிருந்து இறங்கச் செய்து மங்கோலியர்கள் மீது அம்பு எய்யுமாறு ஆணையிட்டார். யுத்தகளமானது குறுகலான நிலப்பரப்பாக இருந்த காரணத்தால் மங்கோலியர்கள் தங்களது வழக்கமான போர்த் தந்திரங்களை பயன்படுத்த இயலவில்லை. குவாரசமியர்களை ஏமாற்ற சிகி குதுகு தன்னிடமிருந்த உபரிக் குதிரைகளின் மீது வைக்கோலாலான பொம்மைகளை அமர வைத்தார். இதன் மூலம் அவரது படையினர் உடனடியாக கொல்லப்படாமல் சற்று நேரம் கிடைத்த போதிலும், சிகி குதுகு தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டார்.[1]
தோல்விகளில் தன்னை நிரூபித்த குவாரசமிய இளவரசனால் வெற்றிகளின் போதும் அவ்வாறு தன்னை நிரூபிக்க இயலவில்லை.[2] போரில் கிடைத்த ஒரு மங்கோலிய வெள்ளைக் குதிரையை யார் வைத்துக் கொள்வது என்ற ஒரு பிரச்சனை இவரது மாமனாருக்கும் ஒரு குவாரசமியத் தலைவருக்கும் இடையே ஏற்பட்டது. இப்பிரச்சினையில் மிங்புர்னு தனது மாமனாருக்கு ஆதரவாகச் செயல்பட்டார். பெரும்பாலான குவாரசமிய வீரர்கள் முகாம் நெருப்பானது எரிந்து கொண்டிருக்கும் போதே வெளியேறினர். நாள் முழுவதும் போரிட்டுக் களைப்படைந்திருந்தபோதிலும் அந்த இரவே வெளியேறினர். பல்லாயிரக்கணக்கான படை வீரர்களை இழந்த காரணத்தினால் மிங்புர்னு அடுத்த நாள் கிழக்கு நோக்கிப் பின்வாங்கினார்.
யுத்தத்திற்குப் பிறகு
தொகுசிகி குதுகுவின் தோல்வியைப் பற்றிய செய்தியை அறிந்த செங்கிஸ் கான், மிங்புர்னு இந்தியாவிற்குத் தப்புவதற்கு முன்னர் அவரைப் பிடிப்பதற்காகத் தனது படையினருடன் உடனடியாகக் கிளம்பினார். சிகி குதுகுவுடன் யுத்தகளத்திற்குச் சென்ற செங்கிஸ் கான், அங்கு குதுகு எந்த இடத்தில் தவறு செய்தார் என்பதை அவருக்கு அறிவுறுத்தினார்.[1] தற்போதைய பாக்கித்தான் நகரமான கலபக்குக்கு வடக்கில் இருந்த பகுதியில் சிந்து ஆற்றைக் கடக்க மிங்புர்னு முயற்சித்தார். எனினும் சிந்து ஆற்றின் கரையில் மங்கோலியர்கள், மிங்புர்னு இருந்த இடத்தை அடைந்து அவரைத் தோற்கடித்தனர். இந்தப் போர் சிந்து ஆற்றுப் போர் என்று அழைக்கப்படுகிறது.[3]
மங்கோலியர்களை வெல்லமுடியாது என்ற மாயை உடைக்கப்பட்டதால், பர்வான் யுத்தமானது ஆப்கானித்தான் மற்றும் ஈரானில் முக்கியமான விளைவுகளுக்குக் காரணமாக இருந்தது. அமைதியாகச் சரணடைந்த நகரங்கள் மங்கோலியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தின. இதன் காரணமாகச் செங்கிஸ் கான் மற்றும் அவரது மகன் டொலுய் மேலும் சில மாதங்களைக் கிளர்ச்சிகளை அடக்குவதற்காக குவாரசமியாவில் செலவழிக்க நேர்ந்தது.