பல்சாக்

(பல்ஸாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹோனர் தெ பல்சாக் (Honoré de Balzac) (மே 20, 1799 - ஆகஸ்ட் 18, 1850) ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். தொண்ணூற்றிரண்டு நாவல்கள், அவற்றுள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாத்திரங்களென பிரெஞ்சு இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளி, பல்சாக். மனிதத்தையும் அதை சார்ந்த உலகினையும் மிக நுணுக்கமாக அவதானித்த படைப்பாளி இவர். மேற்கத்திய உலகில், 'பல்சாசியன் நடை' என்பது விமர்சகர்களால் பெரிதும் போற்றப்படும் தகுதியாக இன்றைக்கு இலக்கியங்களில் முன்வைக்கப்படுகிறது. 'எழுத்தென்பது தவம்' எனப்புரிந்து செயல்பட்டவர். நல்ல படைப்புக்களுக்காக கடுந்தவம் புரிந்திருக்கிறார். ஆவி மணக்கும் காப்பியைச் சுவைத்தபடி இரவு முழுக்க எழுதுவதென்பது அவரது அன்றாடப்பணி. நாளொன்றுக்கு சராசரியாக பதினெட்டுமணிநேரங்கள் எழுத்துக்குச் செலவிட்டிருக்கிறார் பல்ஸாக்.

பல்சாக்
பிறப்பு20 மே 1799
டூர்ஸ்
இறப்பு18 ஆகத்து 1850 (அகவை 51)
பாரிசு
கல்லறைபெர் லசெயிஸ் சுடுகாடு
படிப்புஇளங்கலைச் சட்டம்
படித்த இடங்கள்
பணிஎழுத்தாளர், prose writer, dramaturge, publisher
சிறப்புப் பணிகள்Eugénie Grandet, La Peau de chagrin, Les Chouans, Splendeurs et misères des courtisanes
வாழ்க்கைத்
துணை/கள்
Ewelina Hańska
விருதுகள்Knight of the Legion of Honour, Q130762055Kategori:Articles without Wikidata information
கையெழுத்து

பாரிஸ் மாநகர வீதிகளாகட்டும் அல்லது ஒதுங்கிய நாட்டுப்புற நிலங்களாகட்டும், ஆடைகளாகட்டும் அல்லது வீட்டுத் தளவாடங்களாகட்டும், அனைத்துமே, அவரெழுத்தால் துல்லியமாக அறிமுகம் பெறமுடியும்.

"ஏதோவொருவகையில் நான் வகித்தப் பல்வேறுபணிகள் இப்படியானதொரு அவதானிப்புக் குணத்தினை எனக்குக் கொடுத்தன" என்பது, நாம் வியக்கும் அவதானிப்பு குணம்பற்றிய அவரது சொந்த வாக்குமூலம்.

பதிப்பகத் தொழிலில் இவருக்கேற்பட்டத் தோல்விகளும் நிதி நெருக்கடிகளும், அவருக்கான படைப்புக் களங்களை அடையாளம் காணவும், படைப்பு மாந்தர்களை இயற்கை தன்மைகளுக்கு சற்று மேலான தளத்தில் உலவச் செய்யவும் உதவின. சில நேரங்களில் கதைமாந்தர்களுக்கும் அவர்தம் வாழ்வியல் உடமைகளுக்கும் இவர்செய்யும் நகாசு வேலைகள், படைப்புக்களை பெருமைபடுத்துகின்றன. உலகின் பெரும்பாலான தேர்ந்த இலக்கியவாதிகளைப்போலவே, அனுபவங்களென்கிற ரசவாதக் குப்பியில், மேலான சிந்தனைமுலாம் என்கின்ற குழம்பில் தனது படைப்புமாந்தர்களை முங்கியெடுக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவரது பெற்றோர்கள் முதலாம் நெப்போலியன் காலத்தில் உயர்பதவியிலிருந்த பிரபுக்கள் வம்சத்தவர். தந்தை, 'பெர்னார் பிரான்சுவா' (Bernard Francois), தாய் 'ஆன்ன் சலாம்பியெ' (Anne Sallambier). பல்சாக் பெற்றோர்களுக்கு இரண்டாவது குழந்தை. பிறந்தவுடனேயே காப்பகத்தில் இடப்பட்டதால், பெற்றோர்களிடம் ஏற்பட்ட வெறுப்பு இறுதிவரைத் தொடர்கிறது. காப்பகத்தில் இவருடனேயே வளர்ந்த சகோதரி 'லோர்'(Laure) ரிடம் ஏற்பட்ட பாசப்பிணைப்பு பலவருடங்கள் நீடிக்கிறது. 1815 ஆம் ஆண்டு Ganser பள்ளியில் நடைபெற்ற மேடைப்பேச்சுகள் மூலமாக தனது தாய்மொழியான பிரெஞ்சு மொழியின் மீது பற்றுக்கொள்ள ஆரம்பித்தது. 1816ல், அக்காலத்தில் வாழ்ந்த மேல்தட்டுவர்க்க வழக்கப்படி சட்டம் பயின்றபோதும், இவரது கவனமனைத்தும் மொழியிலும் எழுத்திலுமிருந்தது.

1819 - 1820 ஆண்டுகளை பல்ஸாக்கின் இலக்கியப்பிரவேச காலங்களெனலாம். ரெனே தெகார்த்தெ , மால்ப்ரான்ச் (Nicholas Malebranche) ஆகியோரது தத்துவார்த்த எழுத்துக்களை விரும்பி வாசித்தார். மற்றமொழி படைப்புக்களையும் விட்டுவைக்கவில்லை. மொழிபெயர்ப்புகளிலும் அதிக நாட்டம். பைரன்(Byron) கவிதைகள், க்ராம்வெல் ( Oliver Cromwell) அவற்றுள் முக்கியமானவை. புகழ்பெற்ற பிரெஞ்சு மொழியின் நாடகவியலாளர்களான ராசின் (Jean Racine), கொர்னெய் (Pierre Corneille) ஆகியோர் அடியொற்றிப் படைப்புக்களை அளித்தார். ழான்-ழாக் ரூஸ்ஸோவினைப்போன்று (Jean-Jacques Rousseau) உருக்கமான புதினமும் எழுதப்பட்டது. இலக்கியங்களின் அனைத்துக்கூறுகளையும் அவர் நாடிபிடித்துப் பார்த்தக் காலமது.

இக்காலங்களில்தான் தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தையும் அதன் கட்டமைப்பையும் அறிவதற்காக வெகுசனப் புலங்களில் தன்னை ஒளித்துக்கொண்டார். பேட்டைவாசியாகவும், தொழிலாளியாகவும் அவரெடுத்த அவதாரங்களுள், "மனித புத்திகளின் யோக்கியதைகளை அறிவதற்கான தேடல்போதை இருந்திருக்கின்றது" ("Prenant Plaisir A L'identifier. Dans Une Sorte D' Ivresse Des Facultes Morales), என்பது ஒரு விமர்சகரின் கருத்து.

ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது Buffonனுடைய Histoire Naturelle வாசித்துவிட்டு, "ப்யுஃபோனால், விலங்கியலை அடிப்படையாகக்கொண்டு சிறப்பானதொரு நூலை எழுதமுடியுமென்றால், அவ்வாறான நூலொன்றினை ஏன் நமது சமூகத்திற்காகவும் படைக்கக்கூடாது? என்ற எண்ணம் 1842ல் எழுதபபட்ட 'La Comedie Humaine' க்குக் காரணமாகிறது. மூத்த சகோதரி 'Laure' ன் திருமணம் முடிந்த சிலநாட்களில் எழுதப்பட்டது 'Falthurne' என்ற சரித்திர நாவல்.

1822 ல் மதாம் தெ பெர்னி (Madame de Berny)யிடம் இவருக்கு காதல் ஏற்பட்டது. இளைஞன் பல்சாக்கிற்கு வயது இருபத்துமூன்று, சீமாட்டிக்கு வயது நாற்பத்தைந்து. திருமணமானவள், உபரியாக ஒன்பது பிள்ளைகள், இருந்தும் மோகித்தார். அவளுக்கும் இவரது எழுத்திலும், திறனிலும் நம்பிக்கை இருந்தது. 'Clotilde de Lusignan அல்லது le Beau Juif' என்கின்ற நாவல் இச்சீமாட்டியின் நினைவாகவே எழுதப்பட்டது.

அடுத்து வெளிவந்தது 'சதசஞ்சீவி' (Centenaire). தனக்குப் பலியானவர்களால் உயிர்வாழ்ந்து யுகங்களிற் பயணிக்கும் கிழட்டு வேதாளத்தைப் பற்றியது. பிறகு 'அர்தென்ன் ராஜகுரு'( Vicaire des Ardennes ). உடன்பிறந்தவளை காதலிக்கும் பாவத்திலிருந்து தப்ப நினைக்கும் இளைஞன், அடுத்து (உண்மை அறியாமல்) மையல்கொள்கின்றபெண் அவனதுச் சொந்தத்தாய். இப்படைப்பு அக்காலத்திய சமூக அமைப்பையும் மத நம்பிக்கையும் கேலி செய்ததற்காகத் தடைசெய்யப்பட்டது.

சூதாட்டக் கணவனால் துன்புற்று வாழ்ந்த தன் இளைய சகோதரியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட 'குடிகேடன்'(Chouhan) படைப்பிற்கு 600 பிரெஞ்சு பிராங்கினை ஒரு பதிப்பாளர் கொடுக்க முன்வந்தபோது, "எழுதும் தொழில் செய்து அவமானப்படுவதைக் காட்டிலும், விரல்களால் நிலத்தைக் கிண்டி பிழைப்பேன்" என்று சத்தமிட்டுவிட்டு, படைப்பைப் பிரசுரிக்க விரும்பாமல் மேசையில் வைத்துப் பூட்டிக்கொண்டார்.

"எஞ்சிய தேவதை (La Derniere Fee, ou La Nouvelle Lampe) அல்லது புதிய விளக்கு" மற்றொரு வித்தியாசமான புதினம். இந்தமுறை அவரது 'ராஜகுரு - கட்டுபாடற்ற காதலின் மன்னிப்புக் கோரல் என்கிற தலைப்பில் பழைய மொந்தையில் புதியகள்ளாக வெளிவருகிறது. உலக ஒழுக்கிலிருந்து விலக்கியச் சூழலில் வளர்க்கப்பட்ட இளைஞனுக்கு, உலகின் பிரதான இயக்கக்காரணிகளான சமூகம், அரசியல், பந்தம்..போன்றவற்றைத் தெரியப்படுத்த, ஒரு சீமாட்டி முன்வருகிறாள்.

பின்னர் 'அர்தென்ன் ராஜகுரு' வின் தொடர்ச்சியாக 'அன்னெத்தும் கயவனும் - Annette et le criminel)' எழுதப்படுகிறது. . 1824ம் ஆண்டுவாக்கில் பல்சாக்கிற்குக் கிடத்த 'ஹொராஸ் ரேஸ்ஸொன் (Horace Raisson) நட்பு, 'இலக்கியத் தொடர்' -(Feuilleton littéraire) இதழியலைத் தொடங்க உதவுகிறது. இவ்விதழ் ஆரம்ப காலத்தில் எல்லாவற்றையும் எழுத ஆரம்பித்து, நாளடைவில் இலக்கியம், அரசியம், விஞ்ஞானமென தனது எல்லைகளை சுருக்கித் தகுதியை வளர்த்துக்கொண்டது.

உடன்பிறந்த சகோதரியின் கணவனால் ஏற்பட்ட கடன் தொல்லைகளிலிருந்து மீள்வதற்காக 1828ம் ஆண்டு நண்பர்களின் உதவியுடன் அச்சகம் மற்றும் பதிப்பகத் தொழிலை மேற்கொள்கிறார். Molierன் அனைத்து படைப்புகளும் முறையாக இவரால் பதிப்பிக்கபடுகின்றன. இவரது எண்னத்திற்கு மாறாக இத்தொழில் மேலும் கடனாளியாக மாற்றியது. மீண்டும் எழுத்துலகிற்குத் திரும்புகிறார்.

படைப்புகள்

தொகு

1829க்குப் பிறகு அவரால் எழுதபட்ட படைப்புகள் அனைத்துமே மகோன்னதனமானவை. முதன்முதலாக அவரது சொந்தப் பெயரில் (HONORE DE BALZAC) படைப்புகள் அச்சுக்கு வந்தன என்பதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

  • 1829 - 'எஞ்சியுள்ள குடிகேடன்' -LE DERNIER CHOUHAN., 'திருமணத்தின் உடற்கூறு (LA PHYSIOLOGIE DU MARRIAGE)', 'கீர்த்தியும் கேடும்' ( GLOIRE ET MALHEUR),
  • 1830ல் - கட்டுரைகள், சிறுகதைகள் குறிப்பாக 'அந்தரங்க வாழ்க்கையின் காட்சிகள் (SCENES DE LA VIE PRIVEE),.
  • 1831 'துயர் குறைக்கும் தோலாடை'(LA PEAU DE CHAGRIN) மற்றொரு உன்னதப் படைப்பு. கையிலிருந்த கடைசி நானயத்தையும் சூதாட்டத்தில் தொலைத்துவிட்டு, ஆற்றில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் கதை நாயகன் ஒரு புராதனப்பொருள் அங்காடியில் நுழைய நேரிடுகிறது. இவனது நிலையை அறிந்து இரக்கப்பட்ட அங்காடி உரிமையாளன் ஓர் அதிசயத் தோலாடையைக் காண்பித்து "உன் வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய ஆடை, ஆனால் ஒவ்வொரு வேண்டுதலின் போதும், தோலாடைச் சுருங்கத் தொடங்கும் அதற்கு ஈடாக உன்னுடைய ஆயுளும் குறைந்து கொண்டுவரும்" என எச்சரிக்கிறான். ஆடையைப்பெற்றுத் திரும்பும் இளைஞனுக்கு, கேட்டது கிடைக்கின்றது, வளங்கள் பெருகுகின்றன. வேண்டுதல் நிறைவேற்றப்படும்போதெல்லாம் தோலாடைச் சுருங்குவதுடன் கூடவே அவனது ஆயுளும் குறையத் தொடங்குகின்றது. ஒரு கட்டத்தில் தோலாடையை விரும்பித் தொலைத்தபோதும் அவனை அது விடுவதாகயில்லை. இறுதியில் அவனுயிரைக் குடித்து அதுவும் முடிந்து போகிறது.

எதுவுமற்ற வாழ்க்கை என்கின்றபோது 'முடிவைத்' தேடி 'அவன்' சென்றான். எல்லாவற்றயும் தனதாக்கிக்கொள்ள முனைந்தபோது, 'முடிவு' அவனைத் தேடிவந்தது நெருங்கினாலும், விலகினாலும் 'இறப்பினை' கடந்தேசெல்லவேண்டும். என்கின்ற விதியினை மனதிற் பதியவைக்கும் அற்புதப் படைப்பு.

  • 1832 - நாட்டுப்புற வைத்தியன் (Le Medecin de Campagne)
  • 1834 - லான்ழே சீமாட்டி (La Duchesse de Langeais,) முழுமையின் தேடல் (La recherche de l'absolu). இக்காலத்தில் எழுதப்பட்ட 'பாதிரியார் கொரிஓ' (LE PERE GORIOT)வும் அவசியம் நாம் படித்தாகவேண்டிய நூல். வாழ்க்கையின் மிக உன்னத நிலையிலிருந்த மனிதனொருவன் தனது இரு பெண்களால் எல்லாவற்றையும் இழந்து நாயினும் கேவலாமாக மரணிப்பதை விவரிக்கும் புதினம்.
  • 1838 COMEDIE HUMAINE: மனிதத்தைப்பற்றி பேசுகின்ற ஒரு நூல். இயற்கை வரலாற்றில் விலங்குகள் வகைபடுத்தப்படுவதைப்போன்று, பல்ஸாக் தன் பங்கிற்கு மனித உயிர்களைப் பட்டியலிடுகிறார். அப்பட்டியலில் அன்றாடங் காய்ச்சிகளிலிருந்து, அறுசுவை உணவினைக் கொள்வோர்வரை எல்லோரும் இடம்பெற்றிருந்தனர். பணிகளென்றால் மருத்துவர், வணிகர், வங்கியாளர்,மதகுருமார், அதிகாரி,, அந்தஸ்தில் உள்ளவர், ஊழியர்கள், நிறுவன அதிபர்களென நீண்டவொரு பட்டியல். புலங்களெனில், பெருநகரமா, நகரமா, கிராமமா? ஆகச் சமூகத்தின் காரணிகளின் அடிப்படையில் மனிதர்களை வாசித்தார். அவரது தூரிகையில் மனிதர்களைப் பற்றிய முழுமையானச் சித்திரம் கிடைக்கிறது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோன்று அவரது அவதானிப்பின் முழுவீச்சையும் இங்கே உணருகிறோம். மிக நுணுக்கமாகத் தீட்டப்படும் அவரது எழுத்தோவியத்தில் ஒரு முழுமையான மனிதனைக் காண்கிறோம். நகரமா, வீதியா, இருப்பிடமா, ஆடைகளா, மேசைகளா, நாற்காலிகளா, இன்ன பிற பொருட்களா, அவனுக்கான, அவன் சார்ந்த ஒழுக்கங்களா, உறவுகளா, அசைவுகளா, மொழிகளா அனைத்தையும், பட்டைத்தீட்டிய மனிதவைரமாக நம்மிடம் நீட்டும்போது அதனொளி நம்முள்ளத்தில் செய்யும் விந்தைகளை, விவரிப்பது கடினம். எல்லாவற்றிற்கு மேலாக உண்மைகளின் அடிப்படையில், பொய் வேதாந்தங்களை ஒதுக்கி மனிதத்தினை கண்டறிந்த அறிவிலக்கிய முயற்சி 'LA COMEDIE HUMAINE'.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்சாக்&oldid=2767881" இலிருந்து மீள்விக்கப்பட்டது