பளமோட்டைக் கல்வெட்டு
பளமோட்டைக் கல்வெட்டு என்பது, இலங்கையின் கிழக்குப்பகுதியில் உள்ள கந்தளாய்ப் பகுதியில், போதன்காடு என்னும் இடத்தில் பழையகாலத்துச் சிவன் கோயில் ஒன்றின் அழிபாடுகளிடையே கண்டெடுக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டு. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தினால் படியெடுக்கப்பட்ட இக்கல்வெட்டை இலங்கையின் பெயர்பெற்ற கல்வெட்டியலாளர் சேனரத் பரணவிதான முதன் முதலில் வாசித்து வெளியிட்டார்.[1]
காலம்
தொகுஇக்கல்வெட்டின் அரசன் பெயரும் ஆட்சியாண்டும் குறிக்கப்பட்ட பகுதி தெளிவாக இல்லை. ஆனால், இதனை வாசித்த பரணவிதான, இது சயவாகு என்னும் அரசனின் 8வது ஆட்சியாண்டைச் சேர்ந்தது எனத் தற்காலிகமான முடிவுக்கு வந்தார். எனினும், பரணவிதானவின் வேண்டுகோளின்படி இதை வாசித்த கே. வி. சுப்பிரமணிய ஐயர், இந்தக் கல்வெட்டு விசயவாகு தேவரின் 42ம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டது என்று கருத்து வெளியிட்டார். பரணவிதானவும் பின்னர் இதை ஏற்றுக்கொண்டார். இந்த மன்னன் முதலாம் விசயவாகு என அடையாளம் காணப்பட்டுள்ளான்.[2]
உள்ளடக்கம்
தொகுஇந்தக் கல்வெட்டு, நங்கைசானி என்னும் பிராமணப் பெண்ணொருத்தி காலஞ்சென்ற தனது கணவனின் பெயரால் கந்தளாய் விசயராச சதுர்வேதி மங்கலத்திலிருந்த விசயராச ஈச்சுரம் என்ற சிவன் கோயிலுக்குக் கொடுத்த தானத்தின் அடிப்படையிலான அறக்கட்டளை தொடர்பானது. இப்பெண் இதற்காகக் குறிப்பிடத்தக்க அளவில் பொன்னைத் தானமாக வழங்கியுள்ளாள்.[2]
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.