பள்ளிமடம் சுந்தரபாண்டிய ஈசுவரம் பள்ளிப்படைக் கோவில்

பள்ளிமடம் சுந்தரபாண்டிய ஈசுவரம் பள்ளிப்படைக் கோவில் என்பது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், குண்டாற்றின் வடகரையில் உள்ள, பள்ளிமடம் (பள்ளிப்படை) கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் பராமரிப்பில் உள்ளது.

அமைவிடம்

தொகு

இவ்வூர் திருச்சுழியில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், கோவிலாங்குளத்திலிருந்து 14.8 கி.மீ. தொலைவிலும், காரியாபட்டியிலிருந்து 21.1 கி.மீ. தொலைவிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 27.0 கி.மீ. தொலைவிலும், விருதுநகர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து கிழக்கு நோக்கி 35 கிமீ தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 626129 ஆகும். [1]

வரலாற்றில் சுந்தரபாண்டிய ஈஸ்வரம்

தொகு

பிற்காலச் சோழர்களின் காலத்தில் உயிர்நீத்த சோழ அரசர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள், மற்றும் படைத்தளபதிகள், ஆகியோரது அஸ்தியின் மீது எழுப்பப்பட்ட கோவில்கள் பள்ளிப்படைக் கோவில்கள் என்று பெயர் பெற்றிருந்தன. இவை சிவன் கோவில்களாகும். கும்பகோணம் அருகே உள்ள பட்டீசுவரத்தில் உள்ள பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை, வேலூர் அருகே மேல்பாடியில் அமைந்துள்ள அரிஞ்சிகை ஈசுவரம், திருக்காளத்தி அருகே தொண்டைமான் பேராற்றூரில் உள்ள ஆதித்தேசுவரம் (கோதண்டராமேசுவரம்) பள்ளிப்படை ஆகிய பள்ளிப்படைகளை சான்றாகக் குறிப்பிடலாம்.[2]

மூன்றாம் இராஜசிம்மன் மகனான சுந்தரபாண்டியன் இப்பகுதிக்கு வந்தபோது இறந்து போனான். மூன்றாம் இராஜசிம்மனின் இளைய மகனும், சுந்தரபாண்டியனின் தம்பியுமான வீரபாண்டியன் (கிபி 946-966), தனது தமையன் நினைவாக இந்தப் பள்ளிப்படைக் கோவிலை எழுப்பினான். [2] பாண்டிய நாட்டில் அமைந்துள்ள ஒரே பள்ளிப்படைக் கோவில் இதுவாகும். [2] சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் என்று போற்றப்படும் இவன், சோழாந்தகன், பாண்டி மார்த்தாண்டன் போன்ற சிறப்புப்பெயர்களை பெற்றிருந்ததாக திருப்புடைமருதூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.[3][4]

சுந்தரபாண்டிய ஈஸ்வரம், ஆயிரம் ஆண்டு வரலாற்றை உள்ளடக்கிய ஒரு பள்ளிப்படைக் கோவிலாகும். இக்கோவில் பருத்திக்குடி-நாட்டில் உள்ள தேவதானமான திருச்சுழியல் இருந்ததைக் கல்வெட்டுகள் சுட்டுகின்றன. சுந்தர பாண்டியன் என்ற பெயருடைய அரசன் அல்லது இளவரசன் பெயரால் சுந்தர பாண்டிய ஈஸ்வரம் பெயரிடப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கிராமம் பள்ளிமடை அல்லது பள்ளிப்படை என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் சுந்தர-பாண்டியனின் நினைவாக கட்டப்பட்டிருக்கலாம்.[5]

கோவில் அமைப்பு

தொகு

பள்ளிப்படை சுந்தர பாண்டிய ஈஸ்வரமுடையார் கோவில் தற்போது காளைநாதசுவாமி கோவில் என்று அழைக்கப்படுகிறது. வழிபாட்டில் உள்ள இக்கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்பில் அமைந்துள்ளது. கோவில் அதிட்டானம் ஓரளவு தரையில் புதைந்துள்ளது. கோவில் சிற்ப அலங்காரங்கள் இல்லாமல் வெறுமையாகக் காணப்படுகிறது. இது பாண்டியர்களின் கலைப்பாணியாகும். [2] கோவில் முன்பு பலிபீடம் மற்றும் நந்தி மண்டபத்தில் நந்தி ஆகிய அமைப்புகள் காணப்படுகின்றன. மகாமண்டபத்தில் நடராசர் சிற்பம் காணப்படுகிறது. கருவறைக்கு முன்னர் ஒரு நந்தி உள்ளது.

கோவில் மூலவர் காளைநாதசுவாமி ஆவார். இக்கோவிலில் இலிங்க வடிவில் தனி சன்னதி கொண்டுள்ளார். மூலவரை திருச்சுழியல் பள்ளிப்படை சுந்தர பாண்டிய ஈசுவரத்து மகாதேவர் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மூலவர் விமானம் நாற்கரமாக அமைக்கப்பட்ட நாகர விமானம் ஆகும். மூலவர் கோவில் கருவறையின் வலப்புறம், தாயார் சொர்ணவல்லியம்மனுக்கு, தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன்னர் நந்தி சிலை உள்ளது.[2]

கல்வெட்டுகள்

தொகு

இக்கோவிலில் 16 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்தில் ஒரு பகுதி பண்டைய காலத்தில் வெண்புநாடு என்று அழைக்கப்பட்டது. இங்குத் திருக்காட்டாம்பள்ளி என்ற சமணப்பள்ளி இருந்து அழிந்துள்ளது. [6] பாதி புதைந்த நிலையில் காணப்படும் படிக்கட்டில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு, இங்கிருந்த குறண்டி திருக்காட்டாம்பள்ளி என்னும் சமணப்பள்ளி குறித்த செய்தியினை குறிப்பிடுகிறது. இப்பள்ளி கட்டுமானத்திற்குத் தேவைப்பட்ட கற்கள் ஆவியூர் அருகேயுள்ள இந்தக் குறண்டி என்ற கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்டது.

தொடர்புக் குறிப்பு

தொகு

மதுரை அருகேயுள்ள கீழக்குயில்குடி சமணர் மலையின் தென்மேற்கே செட்டிபுடவு குகையின் இடப்புற பாறையில் செதுக்கப்பட்டுள்ள மகாவீரர் புடைப்புச் சிற்பத்தை செய்து வழங்கக் காரணமானவர்கள் குறித்த வட்டெழுத்துக் கல்வெட்டு இது: "வெண்பு நாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக னந்திப்ப டாரர் அபினந்தபடாரர் அவர் மாணாக்கர் அரிமண்டலப் படாரர் அபினந்தனப்படாரர் செய்வித்த திருமேனி." இச்சிற்பத்தை குறண்டி திருக்காட்டாம்பள்ளி மாணாக்கர்கள் செய்வதற்குக் காரணமாக இருந்துள்ளனர்.[7]

இக்கோவில் சீரமைப்பின் போது பல கல்வெட்டுகள் மாற்றியமைத்து கட்டப்பட்டுள்ளன. இங்கு கண்டறிந்த பிற கல்வெட்டுகள் கோவிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் குறித்து பதிவு செய்துள்ளன. வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு (கி.பி. 953) ஒன்று, அரங்கம் பூதி என்கிற மூவேந்த வேளான், கிழவன் அருளாளி, தச்சன் உலகன், சோழந்தகை என்ற மாறன் ஆதிச்சன் மற்றும் புலியூர் பல்லவராயன் ஆகியோர் கோவிலில் எரிப்பதற்கான விளக்கு மற்றும் ஆடுகளை தானமாக வழங்கியுள்ள செய்தியினைப் பதிவு செய்துள்ளது.[5]

இதே காலகட்டத்தில், இக்கோவிலில் பணிவிடைக்காக அமர்த்தப்பட்டிருந்த தேவரடியார்கள் இக்கோவிலுக்கு ஆடுகளை வழங்கியுள்ளானர். காவிதி கணைப்பெற்றல், நிதிப்பெற்றல், நாகன் குளங்கவிளை ஆகியோரும் இக்கோவிலுக்கு நன்கொடை வழங்கியுள்ளதாகக் கல்வெட்டுகள் குறிப்பிட்டுள்ளன.[5]

கோவில் சீரமைப்பு

தொகு

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தப் பள்ளிப்படைக் கோவில், பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னர்களால் மீண்டும் சீரமைக்கப்பட்டும் மீண்டும் கட்டப்பட்டும் இருக்கலாம். பிற்கால பாண்டியர் கால கல்வெட்டின் படி, சோனாடன் நம்பி என்பவன், கோவில் புதுப்பித்தலின் போது ஒரு கதவு நிலையை நன்கொடையாகக் கொடுத்துள்ளான். கி.பி. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று சேதுபதி மன்னர் மேற்கொண்ட கோவில் சீரமைப்பு குறித்த செய்தியினை குறிப்பிடுகிறது.[2]

ஈமச்சடங்குகள்

தொகு

பள்ளிப்படை என்பது நீத்தார் நினைவாக எழுப்பப்பட்ட கோவில் தானே. எனவே இக்கோவில் இராமேசுவரத்திற்கு அடுத்து, நீத்தருக்கான ஈமச்சடங்குகளை மேற்கொள்ள ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது. குண்டாற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோவிலில் மக்கள் நீத்தாருக்கான ஈமச்சடங்குகளை மேற்கொள்கின்றனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Pallimadam Onefivenine
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Tracing the history of the sepulchre temple of Sundara Pandya Eswaram Kavitha The Hindu March 06, 2013
  3. முற்காலப் பாண்டிய மன்னர்கள் தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகம்
  4. வீரபாண்டியன் தமிழகம் ஊரும் பேரும் ரா.பி.சேதுப்பிள்ளை பக். 103
  5. 5.0 5.1 5.2 Pandya Inscriptions. Inscriptions of the Early Pandyas South Indian Inscriptions
  6. தென்னிந்தியாவில் சமணர்க்கோயில்கள் திண்ணை ஜனவரி 19, 2015
  7. கீழக்குயில்குடி தகவலாற்றுப்படை

உசாத்துணை

தொகு

தென்னிந்தியக் கல்வெட்டுகள்: 1. SII No. 79.(A. R. No. 420 of 1914.); 2. SII No. 80.(A. R. No. 421 of 1914.); 3. SII No. 82. (A. R. No. 424 of 1914.); 4. SII No. 83.(A. R. No. 429 of 1914.); 5. SII No. 88. (A. R. No. 423 of 1914.); 6. SII No. 90. (A. R. No. 426 of 1914.)

வெளி இணைப்புகள்

தொகு