பழையனூர் நீலி அம்மன்
நீலி அம்மன் அல்லது பழையனூர் நீலி அம்மன் என்பது ஒரு தமிழ் நாட்டார் தெய்வம் ஆகும். இந்த தெய்வத்தை தென்தமிழ் நாட்டில் இசக்கி அம்மன் என்ற பெயரில் வழிபடப்படுவதாக கருதப்படுகிறது.[1] இத்தெய்வத்திற்கான கோயில் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ளது.
பழையனூர் நீலியின் கதை
தொகுபழையனூர் நீலியின் கதை சிற்சில மாறுபாடுகளுடன் கூறப்படுகிறது. அதில் ஒரு வடிவம் இது; பழங்காலத்தில் காஞ்சி நகரத்தைச் சேர்ந்த அந்தணரான புவனபதி என்பவர் திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். காசி யாத்திரை செல்லத் திட்டமிட்ட புவனபதி காசிக்கு சென்று அங்கேயே சில காலம் தங்கியிருந்தார். அப்போது அங்கிருந்த சத்தியஞானி என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. அவரின் வீட்டுக்கு விருந்துக்குச் சென்ற புவனபதி சத்தியஞானியின் மகளான நவக்கியானியைக் கண்டு ஆசைப்பட்டு தனக்கு திருமணமானதை மறைத்து அவளை திருமணம் செய்துகொண்டார். கொஞ்ச காலம் கழித்தபிறகு தன் ஊரான காஞ்சிக்கு புறப்பட்டார் புவனபதி. நவக்கியானி தானும் உடன் வருவதாக அடம்பிடித்ததால் வேறு வழியில்லாமல் அவளையும் உடன் அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார். இவர்களுடன் நவக்கியானியின் அண்ணன் சிவக்கியானியும் புறப்பட்டார். சொந்த ஊரை நெருங்கும்போது இவர்களை என்ன செய்வது என்று புவனபதி யோசித்தார். ஒருநாள் மாலையில் திருவாலங்காட்டை அடைந்து அவர்கள் அங்கேயே இரவைக் கழிக்க முடிவு செய்தனர். அங்கே தங்கி இருந்தபோது குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவருமாறு கூறி மைத்துனனை அனுப்பிவிட்டு, இரண்டாவது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு ஊருக்குப் புறப்பட்டுவிட்டார் புவனபதி. தண்ணீருடன் வந்த அண்ணன், தங்கை இறந்துகிடப்பதைப் பார்த்து துடித்து தானும் அருகில் இருந்த புளிய மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் இருவரும் நீலன், நீலி என்ற பேய்களாக அந்த ஆலங்காட்டில் சுற்றித் திரிந்தனர். நீண்டகாலம் கழித்து அடுத்த பிறவியில் புவனபதி வணிக குலத்தில் தரிசனன் என்ற பெயரில் பிறந்தார். குழந்தை பிறந்தபிறகு அதன் சாதகத்தைக் கணித்த சோதிடர்கள், இவனைப் பழிவாங்க வடக்கில் ஒரு பேய் காத்துக் கொண்டிருக்கிறது. எனவே வடக்கில் செல்வதை தவிர்கவும் என்று அறிவுரை கூறினர். மேலும் அந்த பேயிடம் இருந்து தப்பிக்க மந்திரித்த கத்தி ஒன்றை கொடுத்தனர். தரிசனன் வளர்ந்த பிறகு காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணைப் திருமணம் செய்து வைத்தார்கள். தரிசனனின் தந்தை இறப்பதற்கு முன், அவருக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றிக் கூறி, மந்திரக் கத்தியை உடன் வைத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு இறந்துபோனார்.
காஞ்சியில் இருந்த தரிசனன் பழையனூர் சென்று வணிகம் செய்ய எண்ணம் கொண்டார். பழையனுரூக்கு புறப்பட்ட தரிசனின் வழியில் திருவாலங்காட்டை அடைந்தார். அவருக்காக காத்திருந்த நீலி அவரை பார்த்து. ஆனால் தரிசனனிடம் மந்திரக்கத்தி இருந்ததால் அவரை நீலியால் நெருங்க முடியவில்லை. இதனால் ஒரு தந்திரம் செய்த நீலி தரிசனனின் மனைவியைப் போல் உருமாறி, ஒரு கள்ளிக் கட்டையை எடுத்து குழந்தையாக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு தலைவிரிகோலமாக திருவாலங்காடு ஊர் பஞ்சாயத்தைக் கூட்டினாள். தன் கணவர் தன்னை பிரிந்து செல்ல நினைக்கிறார். எனவே ஊர் பஞ்சாயத்தார் தன் கனவனை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டும் அழுது முறையிட்டாள். இவள் தன் மனைவியல்ல என்பதை உணர்ந்த தரிசனன் அவளை மறுத்தார். தன் கணவர் ஒரு முக்கோபி, தான் பஞ்சாயத்தை கூட்டியதால் தன்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவார். எனவே அவர் கையில் உள்ள கத்தியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள்.
இவள் ஒரு பேய். என்னைக் கொல்ல வந்திருக்கிறாள் என்று தரிசனன் வாதாடினார். இவளுடன் சென்றால் என் உயிருக்குதான் ஆபத்து என்றும் கூறினார். அதற்கு பஞ்சாயத்தார் இவளுடன் இன்று ஒருநாள் தங்குங்கள் உங்களுக்கு ஒன்றும் நேராது. காலையில் மற்ற விசயங்களை பேசிக்கொள்ளளாம். ஒருவேளை உங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், இந்த பஞ்சாயத்தில் அமர்ந்திருக்கும் 70 வேளாளர்களான நாங்கள் அப்போதே உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று சத்தியம் செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கத்தியையும் வாங்கிக்கொண்டனர்.
இதன்பிறகு நீலியுடன் ஒரே அறையில் தங்கவைக்கப்பட்ட தரிசனனை நீலி கொன்றுவிட்டாள். இதனால் 70 வேளாளர்களும் தங்களால் ஒரு உயிர் போய்விட்டதே என்று மிக வருந்தினர். தாங்கள் தரிசனனுக்கு அளித்த வாக்கின்படி சாட்சிபூதேசுவர் சிவன் கோயிலின் அருகில் தீ மூட்டி அதில் விழுந்து தங்களை மாய்த்துக் கொண்டனர்.
வழிபாடு
தொகுவாக்குத் தவறாத இந்த 70 வேளாளர்களும் திருவாலங்காட்டில் தீக்குளித்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டப்பட்டு அவர்கள் தீகுளிக்கும் சிற்பமும் வைக்கப்பட்டுள்ளது.[2] மன உறுதியுடன் மறு பிறப்பு வரை போராடி தன் கணவனை கொன்று பழிதீர்த்த நீலிக்கு திருவாலங்காட்டில் ஒரு சிறிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பழையனூர் நீலியை வழிபடும் பெண்கள் மனதைரியத்தையும், கணவனின் கொடுமைகளில் இருந்தும் விடுபடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
சிலை
தொகுகையில் குழந்தையுடன் கூடிய நீலி அம்மன் சிலை ஒன்று நாகர்கோவில், பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது.