பாரதம் படித்தல்
பாரதம் படித்தல் என்பது தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளில் திருவிழாக்களின் போது நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். பாரதம் படித்தல் பொதுவாக கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி அம்மன் கோவில்களில் முக்கிய நிகழ்வாகும். திருவிழா சாட்டியதிலிருந்து பதினெட்டு நாட்கள் தினமும் கோவில் திடலின் ஒரு புறத்தில் அமைக்கப்பட்ட மேடையில் மகாபாரதம் நூலைப் படிப்பர். செய்யுள்வடிவில் அமைந்த பாடல்கள் பாடி விளக்கமளித்தல், கதை நிகழ்வுகளைச் சொற்பொழிவாகச் செய்தல், பாடலும் விளக்கமும் இணைந்த கதாகாலட்சேபம் எனும் வடிவில் பாரதம் படித்தல் நிகழும்.
வரலாறு
தொகுசாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் கி.பி ஏழாம் நூற்றாண்டில் பகைமை வளர்ந்தது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்மன்(மாமல்லபுரம் நகரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த அரசன் மாமல்லன்), இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டான். பாதாமி நகர் (இது கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி என அழைக்கப்படுகிறது) அழிக்கப்பட்டது.
திரௌபதி அம்மன்
தொகுநரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள் ஆவர். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்றவர் வன்னியர் குலத்தைச் சேர்ந்த பரஞ்சோதி என்கிற சிறுதொண்டர் ஆவார். இத்தாக்கத்தினால் வன்னியர்களிடையே அவர்கள் வாழும்பகுதிகளில் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாக ஏற்படத்தொடங்கியது.[1] பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்தது. பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.[2]
வன்னிய புராணம்
தொகுஇத்தாக்கத்தின் விளைவாக வன்னிய புராணம் என்ற ஒரு கதையும் உருவானது. வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம், வன்னியர்களிடையே கதையாகப் பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன், வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப் புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை. போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இக்கதை வன்னியக்கூத்து என்ற பெயரில் கூத்தாகவும் நடத்தப்படுகிறது. வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை, பாரதக் கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் அரவாணிகளுடனும், கூத்தாண்டவருடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.
வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. பாரதம் படிப்பதற்கென்று பல மானியங்களை பல்லவ மன்னர்கள் அளித்துள்ளதை கல்வெட்டுகள் காட்டுகின்றன.[3] பாரதக் கதையின் பாதிப்பால் உருவான திரௌபதி அம்மன் கோவில்களிலும், கூத்தாண்டவர் கோவில்களிலும் பாரதம்படித்தல் என்பது இன்றும் ஒரு பண்பாட்டு மரபாக விளங்கி வருகின்றது .
உசாத்துணை
தொகு- நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் - சு. சண்முகசுந்தரம் 2009. வெளியீடு: காவ்யா, 16 – இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24.
- தமிழ்ச் சமுதாயமும் நாட்டுப்புறப் பண்பாடும் - துளசி. இராமசாமி 1997, விழிகள் பதிப்பகம்,சென்னை-42.
- தென்னிந்திய குலங்களும் குடிகளும் - எட்கர் தர்ஸ்டன் 1885.
- வன்னிய புராணம், சைவ.கி.வீரப்பிள்ளை 1938.
- Draupadi among Rajputs, Muslims and Dalits - Alf Hiltebeitel 1999.