எட்கர் தர்ஸ்டன்

எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston, 1855-1935) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்தார். பிரித்தானியரான இவர் சென்னையில் இருந்த காலத்தில் தென்னிந்தியாவின் சாதிகள், பழங்குடிகள் என்பன தொடர்பில் மானிடவியல் ஆய்வில் ஈடுபட்டுத் "தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலொன்றை எழுதியுள்ளார்[1]. இத்துறையில் முன்னோடியாக அமைந்துள்ள இந்நூல் தென்னிந்திய மானிடவியலின் ஒரு அடிப்படை நூலாக உள்ளது. மானிடவியலில் மட்டுமன்றி கடல்வாழ் உயிரினங்கள் பற்றியும், பழங்கால நாணயங்கள் பற்றியும் இவருக்கு ஆர்வம் இருந்தது. நாணயங்களைச் சேகரிப்பதிலும் அவற்றை ஆய்வு செய்வதிலும் ஈடுபட்டிருந்த தர்ஸ்டன் அது குறித்தும் நூல்களை எழுதியுள்ளார்.

தர்ஸ்டன் உருவாக்கிய சென்னை மாகாண கருப்பொருள் களஞ்சியம்

வாழ்க்கை

தொகு

எட்கர் தர்ஸ்டன் இங்கிலாந்தில் உள்ள கியூ (Kew) என்னுமிடத்தில் 1855 ஆம் ஆண்டு அவரது பெற்றோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் சார்லசு பாசுவர்த் தர்ஸ்டன். இவர் எட்டனிலும் (Eton), பின்னர் இலண்டனில் உள்ள கிங்சு கல்லூரியின் மருத்துவப் பள்ளியிலும் கல்வி பயின்றார். 1877 ஆம் ஆண்டில் பட்டம் பெற்று வெளியேறினார்[2]. சில காலம் கிங்சு கல்லூரியின் அருங்காட்சியகப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். பின்னர் இந்தியாவுக்கு வந்த இவர் 1885 ஆம் ஆண்டில் சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராகப் பணியில் அமர்ந்தார்[3]. ஏறத்தாழ 25 ஆண்டுகாலம் இப் பொறுப்பில் இருந்த தர்ஸ்டன், ஓய்வு பெற்ற பின்னர் இங்கிலாந்துக்குத் திரும்பினார். அங்கே அவர் தாவரங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டில் "கார்ண்வாலின் பிரித்தானிய மற்றும் வெளிநாட்டுத் மரங்களும் செடிகளும்" என்னும் தலைப்பிலான நூலையும் வெளியிட்டார். 1935 ஆம் ஆண்டு தமது எண்பதாவது வயதில் பென்சான்சு என்னும் இடத்தில் தர்ஸ்டன் காலமானார்[4].

பணிகள்

தொகு

சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்தபோது, அருங்காட்சியகத்தில் முறையான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும் பொது மக்களின் வசதி கருதியும் பல நடவடிக்கைகளை இவர் எடுத்தார். இவர் பதவியேற்ற காலத்தில் சென்னை அருங்காட்சியகத்தில் சென்னை மாகாணத்தின் பண்பாட்டோடு தொடர்பில்லாத ஏராளமான காட்சிப் பொருள்கள் இருந்தன. இவ்வாறான பொருட்களை அவற்றொடு தொடர்புடைய மாநிலங்களுக்கு அனுப்பிவிட்டுத் திராவிடப் பண்பாட்டை முறையாகக் காட்சிப்படுத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்தார்.[5] மக்கள் அருங்காட்சியகத்தைப் பார்ப்பதற்கு வசதி செய்வதற்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கவும் அதற்காக வெள்ளிக்கிழமையை அருங்காட்சியகத்தின் விடுமுறை நாளாக்கவும் நடவடிக்கை எடுத்தார்.[6]

சென்னை மெரீனாக் கடற்கரையில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரினக் காட்சியகத்தைத் தொடங்குவதில் பெரும் பங்கு வகித்தார். இது 1909 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்ப்பதற்காகத் திறந்துவிடப்பட்டது.[7]

ஆய்வுகள்

தொகு

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசு, தென்னிந்தியாவில் உள்ள சாதிகளினதும் பழங்குடிகளினதும் முழு விபரங்களைத் தொகுக்கும் பொறுப்பை தர்ஸ்டனுக்கு வழங்கியது. 1901 ஆம் ஆண்டில் இப் பணிக்கான ஆய்வு வேலைகளைத் தொடங்கிய தர்ஸ்டன், 1907 ஆம் ஆண்டில் தென்னிந்திய இனவரைவியல் குறிப்புக்கள் (Ethnographic Notes on Southern India) என்னும் தலைப்பிலான நூலொன்றை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். 1909 ஆம் ஆண்டில், தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும் (Castes andTribes of South India) என்ற நூல் 7 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. கடைசியாகக் குறிப்பிட்ட நூல் வரிசையை தர்ஸ்டன், ரங்காச்சாரி என்பவருடன் இணைந்து உருவாக்கினார். இந்நூலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 2000 சாதிகள் மற்றும் பழங்குடியினரது இனவரைவியல் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.[8]

குறிப்புகள்

தொகு
  1. ரத்தினம், க, 2001. பக். 4.
  2. Nature, 12 அக்டோபர் 1935.
  3. ரத்தினம், க, 2001. பக். 10.
  4. Nature, 12 அக்டோபர் 1935.
  5. ரத்தினம், க, 2001. பக். 10.
  6. ரத்தினம், க, 2001. பக். 10.
  7. ரத்தினம், க, 2001. பக். 10.
  8. பக்தவச்சல பாரதி, 2008. பக். 362,363.

உசாத்துணைகள்

தொகு
  • பக்தவச்சல பாரதி, தமிழர் மானிடவியல், அடையாளம் வெளியீடு, புத்தாநத்தம், இந்தியா, 2008 (முதல் பதிப்பு 2002).
  • ரத்தினம், க (தமிழாக்கம்), எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய மானிட இனஇயல், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம். 2001.
  • Nature - International Weekly Journal of Science, Obituary - Mr. E. Thurston, C.L.E, 12 October 1935, pp 575-576. 21 அக்டோபர் 2010 அன்று பார்க்கப்பட்டது.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்கர்_தர்ஸ்டன்&oldid=1923736" இலிருந்து மீள்விக்கப்பட்டது