பார்வதிபாய் அத்வாலே
பார்வதிபாய் அத்வாலே (1870 - 1955) இந்தியாவின் சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவரான டாக்டர் தோண்டோ கேசவ் கார்வேயின் நெருங்கிய நண்பராவார். பெண்களின், குறிப்பாக இந்து விதவைகளின் சமூக மேம்பாட்டில் அத்வாலே பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். [1]
பார்வதிபாய் அத்வாலே | |
---|---|
பிறப்பு | கிருஷ்ணா ஜோஷி 1870 |
இறப்பு | 1955 (அகவை 84–85) |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | என் கதை: ஒரு இந்து விதவையின் சுயசரிதை |
பார்வதிபாய் அத்வாலே, 1870 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கோகன் பகுதியில் உள்ள தேவ்ருக் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கிருஷ்ணா ஜோஷி என்பதாகும். அவர் தனது பதினொரு வயதில் மகாதேவ் நாராயண் அத்வாலே என்பவரை திருமணம் செய்து, மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார், ஆனால் ஒரே ஒரு மகன் (திரு. நாராயண் மகாதேவ் அத்தவலே) மட்டுமே உயிர் பிழைத்தார்.
தனது வாழ்வின் பிற்பகுதியில், பார்வதிபாய் சமூக ஆர்வலரான, கார்வே நடத்திவந்த விதவைகள் கல்வி மற்றும் மேம்பாட்டிற்காக நிதி மற்றும் நன்கொடைகளை சேகரிக்க அமெரிக்கா சென்றுள்ளார்.சிறுவயதிலேயே கணவரை இழந்து கைப்பெண்ணான காரணத்தால், அந்தக் காலத்தில் இருந்த பாரம்பரியத்தின்படி, ஒரு மகாராஷ்டிர பிராமண விதவை, நகைகள் எதுவும் அணியாமல், வண்ண புடவைகள் உடுத்தாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல், தலைமுடியை மழித்து மொட்டையடிக்க வேண்டியிருந்தது, குடும்பத்தை விட்டு விலகி, விதவைகள் இல்லத்தில் இவர் பணிபுரிந்த பிறகு, இந்த நடைமுறைக்கெல்லாம் மாற்றம் வர வேண்டும் என்றால், அதை அவர்களிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பதை உணர்ந்த பார்வதிபாய், அதற்கெல்லாம் முன்மாதிரியாக, தான் பூண்டிருந்த விதவைக்கான அடையாளங்களையும் அறிகுறிகளையும் நிராகரிக்க முடிவு செய்தார். 1912 ஆம் ஆண்டில், அவர் தனது தலையை மொட்டையடிப்பதை நிறுத்திவிட்டு, விதவையின் ஆடையை கைவிட்டார். அதற்காக பலதரப்பட்ட மக்களிடம் இருந்து எதிர்ப்பும் விமர்சனங்களும் வந்தாலும், அந்த அவமானங்களுக்கு அடிபணியவில்லை என்று குறிப்புகளில் கூறியுள்ளார்.
என் கதை: ஒரு இந்து விதவையின் சுயசரிதை என்ற தலைப்பில் பார்வதிபாய் அத்வாலே தனது சுயசரிதையை விரிவாக எழுதியுள்ளார், அக்காலத்திய அடக்குமுறைகள்,சடங்குகள் மற்றும் அடிமைத்தனங்கள் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ள அந்த நூலை பின்னர் ஜஸ்டின் இ. அபோட் ஆங்கிலத்தில் 1930 இல் மொழிபெயர்த்து [2] வெளியிட்டுள்ளார். அந்த நூல் இன்றளவும் பல்வேறு தரப்பினரிடையே சமூக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kosambi, Meera (2008). Smith, Bonnie G. (ed.). The Oxford Encyclopedia Women in World History. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195148909.
- ↑ Athavale, Parvati, and Justin E. Abbott. 1930. My story: the autobiography of a Hindu widow. New York: Putnam.