பால் ஆலிவர்
பால் ஆலிவர் (பிறப்பு: 25 மே 1927) என்பவர் ஒரு பிரித்தானியக் கட்டிடக்கலை வரலாற்றாளரும், ஆப்பிரிக்க அமெரிக்க இசை வடிவங்களுள் ஒன்றான "புளூசு" (blues) பற்றிய ஆய்வாளரும், எழுத்தாளரும் ஆவார். "புளூசு" பற்றிய அவரது திறனாய்வுகளும், ஆய்வும் அத்துறையில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
வரலாறு
தொகுஆலிவர், தாங்கு வளர்ச்சிக்கான ஆக்சுபோர்டு நிறுவனத்தில் (கட்டிடக்கலைப் பிரிவு, ஆக்சுபோர்டு புரூக்சுப் பல்கலைக்கழகம்) ஆய்வாளராகப் பணிபுரிந்தார். 1978-79இலிருந்து கட்டிடக்கலைக் கல்லூரியின் துணைத் தலைவராக இருந்தார். இவருக்கு 1999 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கட்டிடக்கலைஞர் அரச நிறுவனத்தில், கௌரவ உறுப்பினர் தகுதியும், 2007 ஆம் ஆண்டில், குளூசெசுட்டர்சயர் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டன. நாட்டார் கட்டிடக்கலை (vernacular architecture) குறித்துப் பல நூல்களை எழுதிய ஆலிவர், எதிர்காலத்தில் பண்பாடு, பொருளாதாரம் இரண்டிலும் தாங்கு வளர்ச்சியை அடைவதற்கு உள்ளூர்க் கட்டிடக்கலையே தேவை என்று வாதிட்டார். இவர் எழுதிய "உலகின் நாட்டார் கட்டிடக்கலைக்கான கலைக்களஞ்சியம்" (Encyclopedia of Vernacular Architecture of the World) என்னும் நூலுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர். 80 நாடுகளில் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் 2500 பக்கங்களுடன் இந்த நூல் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது.
இவர் "புளூசு" இசை குறித்த முன்னணி ஆய்வாளரும் ஆவார். அமெரிக்க மரபுவழி இசை தொடர்பான இவரது ஆய்வுகள், "புளூசு" இசை குறித்த ஆர்வம் பரவுவதற்குப் பெரிதும் உதவியது. இவரது தொடக்க ஆய்வுகளில் இந்த இசையின் உருவாக்கத்தில் வட ஆப்பிரிக்க இசுலாமிய இசையின் தாக்கம் பற்றிய ஆய்வும் உள்ளடங்கியது. 1950களில் தொடங்கிய இவரது ஆய்வுகளில் நேர்காணல்கள், கள ஆய்வுகள் என்பனவும் அடங்கும். அத்துடன், ஒலிப்பதிவுகள், அச்சு மூலங்கள் என்பவற்றைப் பயன்படுத்தி, அடிமைமுறைக் காலத்திலும், அதற்கு முன்பும் ஆப்பிரிக்க-அமெரிக்க இசை, பண்பாடு ஆகியவற்றின் தோற்றம் குறித்த ஆய்வுகளையும் இவர் செய்தார்.