உலகின் நாட்டார் கட்டிடக்கலைக்கான கலைக்களஞ்சியம்
உலகின் நாட்டார் கட்டிடக்கலைக்கான கலைக்களஞ்சியம் (Encyclopedia of Vernacular Architecture of the World) என்பது உலகம் முழுதும் பரவிக் காணப்படும் நாட்டார் கட்டிடக்கலை தொடர்பான ஒரு கலைக்களஞ்சியம். ஆங்கில மொழியில் எழுதப்பட்டு, 1997 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூலை, தாங்கு வளர்ச்சிக்கான ஆக்சுபோர்டு நிறுவனம், ஆக்சுபோர்டு புரூக்சுப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணிபுரிந்த பால் ஆலிவர் தொகுத்தார். இந்நூல் முதலில் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தினால் 2500 பக்கங்கள் கொண்ட மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. நாட்டார் கட்டிடக்கலை குறித்த ஆய்வில் ஒரு மைல்கல்லாக இக் கலைக்களஞ்சியம் விளங்குகிறது.
ஆயிரத்துக்கு மேற்பட்ட பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் உருவாக்கி வாழ்ந்துவரும் இவ்வாறான கட்டிடங்களின் பல்வகைமையைக் காட்டும் வகையில் வெளியான முதல் நூல் என்னும் பெருமை இதற்கு உண்டு. இதன் முதல் தொகுதி நாட்டார் கட்டிடக்கலைக்கு அடிப்படையாகவுள்ள கோட்பாடுகள், கொள்கைகள், மெய்யியல் என்பன குறித்து ஆராய்கிறது. இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் குறிப்பிட்ட பண்பாட்டு, சமூகப் பின்னணிகளில் மேற்படி கோட்பாடு முதலியவற்றைப் பொருத்தி விளக்குகின்றன.
80 நாடுகளைச் சேர்ந்த 750க்கு மேற்பட்டவர்கள் இந்நூலுக்குக் கட்டுரைகளை வழங்கியுள்ளனர். 1700க்கு மேற்பட்ட புகைப்படங்கள், 1000க்கு மேற்பட்ட வரை படங்கள், 80 நிலப்படங்கள் என்பவை இந்த நூலில் அடங்கியுள்ளன. கட்டிடக்கலை, மானிடவியல் துறைகளைச் சேர்ந்த 1200 கலைச் சொற்களுக்கான விளக்கக்குறிப்புகளும் இந்தக் கலைக்களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் சார்ந்த எந்த நூலிலும் இல்லாத வகையில், 9,000க்கு மேற்பட்ட உசாத்துணை நூற்பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் துணை நூலாக Atlas of Vernacular Architecture of the World என்னும் நூலை "ரூட்லெட்ச் பதிப்பகம்" வெளியிட்டுள்ளது.