கலைக்களஞ்சியம்
கலைக்களஞ்சியம் (ⓘ) (Encyclopedia)[1] என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்டத் துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம்.[2] கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.[3]
சமூக தலைமைப்பண்பு
தொகு18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரான்சிய (பிரெஞ்சு) மொழியில் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்ட டெனிசு டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு கூறினார்:
கலைக்களஞ்சியத்தின் நோக்கம் உலகம் முழுதும் பரந்துள்ள அறிவைச் சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு தொகுத்தலும், நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிப்பதும் ஆகும். இது முந்திய நூற்றாண்டுகளின் பணிகள் பிற்காலத்தவருக்குப் பயன்படாமல் போவதைத் தடுப்பதுடன், நமது இளந் தலைமுறையினர் நல்லமுறையில் கற்பிக்கப்படுவதற்கும், மகிழ்வுடன் வாழ்வதற்கும் உதவும். அத்துடன், நாம் இறப்பதற்கு முன், பின் வரும் காலங்களில் வாழவுள்ள மனித குலத்துக்கு நாம் செய்யும் தொண்டும் இது அமையும்.
இயல்புகள்
தொகுஇன்றைய கலைக்களஞ்சியங்கள் 18 ஆம் நூற்றாண்டில் அகரமுதலிகளில் இருந்து உருவானவை. அகரமுதலிகள் பொதுவாக சொற்களையும் அவற்றுக்கான பொருள்களையும் தருகின்றன. அத்துடன், சில வேளைகளில் அச் சொற்களின் பின்புலங்களையும், தொடர்புள்ள பிற தகவல்களையும் குறைந்த அளவில் உள்ளடக்குவதும் உண்டு. சொல்லின் பொருள்களைத் தந்த போதும், அதன் முழுமையான விளக்கம், தனிச்சிறப்பு, பயன்பாட்டு எல்லைகள், பரந்த அறிவுத் துறையில் அச் சொல் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டுள்ளது போன்றவை குறித்த தகவல்கள் பயனர்களுக்குக் கிடைப்பதில்லை.
மேற்குறித்த தேவைகளைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, கலைக்களஞ்சியங்கள் ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக்கொண்டு அதுபற்றி ஆழமான தகவல்களைத் தருவதுடன் அத்துறை தொடர்பாகக் கிடைக்கக்கூடிய எல்லா அறிவுச் செல்வங்களையும் தொகுத்துத் தர முயல்கிறது. கலைக்களஞ்சியங்கள் நிலப்படங்கள், விளக்கப்படங்கள், உசாத்துணைகள், புள்ளித்தகவல்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. கடந்த காலங்களில் கலைக்களஞ்சியங்களும், அகரமுதலிகளும், அவற்றில் எழுதவுள்ள உள்ளடக்கங்களில் துறைபோகக் கற்ற வல்லுனர்களைக் கொண்டு எழுதப்பட்டன.
ஒரு கலைக்களஞ்சியத்தை நான்கு தலைமையான கூறுகள் வரையறுக்கின்றன. அவை: உள்ளடக்கம், எல்லை, ஒழுங்குபடுத்தும் முறை, உருவாக்கும் முறை என்பன.
- கலைக்களஞ்சியங்கள் பொதுவானவையாக இருக்கலாம். இவை, ஒவ்வொரு துறையிலும் உள்ள தலைப்புக்களில் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் (எ.கா: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்).
- கலைக்களஞ்சியங்கள் ஒரு குறிப்பிட்ட துறை எல்லைக்குள் அடங்கும் விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது உண்டு. இவை மருத்துவக் கலைக்களஞ்சியம், மெய்யியல் கலைக்களஞ்சியம், சட்டத்துறைக் கலைக்களஞ்சியம் என்ற வகையில் அமையும். இவற்றில் உள்ளடக்கப்படும் ஆக்கங்களின் ஆழ அகலங்கள் அவற்றின் பயனர்களின் தன்மையைப் பொருத்து அமையும்.
- கலைக்களஞ்சியங்கள் ஒரு சான்றுகோளாக அமையத்தக்க உசாத்துணை ஆக்கமாக அமைய வேண்டும் எனில் அது முறைப்படியான ஒழுங்கு ஒன்றில் அமைய வேண்டும். கடந்த காலங்களில் அச்சில் வெளிவந்த கலைக்களஞ்சியங்கள் இரண்டு தலைமையான முறைகளில் ஒன்றில் ஒழுங்குபடுத்தப்பட்டன. இவை அகரவரிசை முறை, வகைகளின் படிமுறையமைப்பு முறை என்பனவாகும். முதல் முறையே இன்று மிகப் பொதுவாகக் கையாளப்படும் முறையாகும். சிறப்பாகப் பொதுக் கலைக்களஞ்சியங்கள் இம்முறையிலேயே ஒழுங்கமைக்கப் படுகின்றன. தற்காலத்தில் மின்னணு ஊடகங்கள் ஒரே நேரத்தில் பல முறைகளில் உள்ளடக்கங்களை ஒழுங்கமைக்கும் வசதிகளை அளிக்கின்றன. அத்துடன் மின்னணு ஊடகங்கள் முன்னர் நினைத்தும் பார்த்திராத தேடல் வசதிகள், இணைப்பு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குகின்றன.
- தற்காலத்தில் ஏற்பட்டுள்ள பல்லூடகங்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்தல், சரிபார்த்தல், ஒன்றாக்குதல், வெளிப்படுத்துதல் போன்றவைகளில் பெருமளவிலான தாக்கங்களை எற்படுத்தி வருகின்றன. எளிமையாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைந்த எவ்ரித்திங்2, என்கார்ட்டா, எச்2ஜி2, விக்கிப்பீடியா போன்றவை புதிய வடிவிலான கலைக்களஞ்சியங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
அகரமுதலிகள் என்று பெயரிடப்பட்ட சில ஆக்கங்கள் உண்மையில் கலைக்களஞ்சியங்களை ஒத்தவை. சிறப்பாக, குறிப்பிட்ட துறைகளுக்காகத் தனிப்பட அமைந்த அகரமுதலிகள் இவ்வாறாக அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் உள்ள இடைக்காலத்துக்கான அகரமுதலி (Dictionary of the Middle Ages), அமெரிக்கக் கடற்போர்க் கப்பல்கள் அகரமுதலி (Dictionary of American Naval Fighting Ships), பிளாக்கின் சட்டத்துறை அகரமுதலி (Black's Law Dictionary) என்பவற்றைக் கூறலாம்.
வரலாறு
தொகுமூத்த பிளினி
தொகுகி.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோம அரசியலாளரான மூத்த பிளினியால் எழுதப்பட்ட இயற்கை வரலாறு என்று பொருள்படும் நாட்சுராலிசு இசுட்டோரியா (Naturalis Historia) என்னும் இலத்தீன் மொழி ஆக்கமே இன்று கிடைப்பவற்றுள் மிகவும் பழமையான கலைக்களஞ்சிய ஆக்கம் ஆகும். இயற்கை வரலாறு, கலையும் கட்டிடக்கலையும், மருத்துவம், புவியியல், நிலவியல், போன்றவை தொடர்பான 37 பிரிவுகளைக் கொண்ட நூலொன்றை இவர் தொகுத்தார். 100 ஆக்குனர்களால் எழுதப்பட்ட 2000 வெவ்வேறு ஆக்கங்களில் இருந்து 20,000 குறிப்புகளைத் தொகுத்துள்ளதாகவும், தனது சொந்த பட்டறிவிலிருந்தும் பலவற்றை உள்ளடக்கி உள்ளதாகவும் அவர் தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். இது கிபி 77 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சிறப்புவாய்ந்த இந்த ஆக்கம் பெரியதும், விரிவானதும் ஆகும். இது, இயற்கையோடு தொடர்புள்ள அனைத்து அறிவுத்துறை மற்றும் கலைகள் ஆகியவற்றின் முழுமையான தொகுப்பாக விளங்கியது எனலாம். பிளினி பின்வருமாறு கூறினார்:
- இயற்கை உலகம் அல்லது வாழ்க்கை என்னும் என்னுடைய தலைப்பு வரண்டது. மிகக் குறைந்த அளவுக்கு மதிக்கப்படும் ஒரு துறை. பட்டிக்காட்டுத்தனமான சொற்களையோ அந்நியமான காட்டுமிராண்டித் தனமான சொற்களையோ தான் வருத்ததுடன் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இதற்கான பாதை எழுத்தாளர்களால் ஏற்கனவே செழுமை ஆக்கப்பட்டதோ அல்லது எவராவது இவ்வழியில் செல்வதற்கு விருப்பப்பட்டதோ இல்லை. எங்களில் எவரும் இதற்கு முயன்றதும் இல்லை, அல்லது ஒரு கிரேக்கனாவது தனியாக இத் தலைப்பின் எல்லாப் பிரிவுகளையும் கையாண்டதும் இல்லை.
இதே போன்ற பழைய ஆக்கங்கள் பல இருந்திருந்தாலும், இருண்ட காலத்தையும் தாண்டி நிலைத்திருந்த நூல் இது மட்டுமே. உரோமர் காலத்தில் இது மிகவும் புகழ் பெற்றிருந்தது. இதன் பல படிகள் உருவாக்கப்பட்டு ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்தது. முதலில் அச்சேறிய செந்நெறிக்கால (classical period) நூல்களில் ஒன்றாக 1469 ஆம் ஆண்டில் இது பதிப்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து உரோமானியர் காலத்தைப் பற்றிய தகவல்களுக்கான உசாத்துணை நூலாகப் பெயர்பெற்றிருந்தது. சிறப்பாக, உரோமக் கலை, உரோமத் தொழில்நுட்பம், உரோமப் பொறியியல், போன்றவற்றுக்காக இது பெயர் பெற்றிருந்ததுடன்; மருத்துவம், கனிமவியல், விலங்கியல், தாவரவியல், நிலவியல் போன்ற துறைகள் தொடர்பான தகவல்களுக்காகவும் இது பெரிதும் வேண்டப்பட்ட நூலாக இருந்தது.
இடைக் காலம்
தொகுஇடைக் காலத்தின் தொடக்கத்தில் சிறந்த அறிஞராக விளங்கிய செவில் ஊரைச் சேர்ந்த செயின்ட் இசிடோர் என்பவர் இடைக் காலத்தின் முதல் கலைக்களஞ்சியமான எட்டிமோலொச்சியே (Etymologiae - கிபி 630) என்னும் நூலை ஆக்கினார். இதில் அவர் தமது காலத்தில் இருந்த பழையனவும் புதியனவுமான எல்லா அறிவுத் துறை தொடர்பான தகவல்களையும் தொகுத்தார். இது 20 தொகுதிகளில் 448 பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. இத்தொகுப்பு, இதன் சிறப்புத்தன்மைக்காக மட்டுமன்றி, இதில் எடுத்தாளப்பட்ட பிற ஆக்கியோர்களின் மேற்கோள்கள், அவர்களது ஆக்கங்களிலிருந்து எடுத்த பகுதிகள் என்பனவற்றுக்காகவும் பெறுமதி வாய்ந்தது. இவர் இவ்வாறு தொகுக்காமல் போயிருப்பின் பல அரிய நூல்கள் பற்றிய தகவல்களே இன்று கிடைக்காமல் போயிருக்கும்.
பார்த்தொலோமியசு ஆங்கிலிக்கசு என்பவர் 1240 இல் ஆக்கிய கலைக்களஞ்சியமே இடைக்காலத்தின் நடுப்பகுதியில் அதிகமாக வாசிக்கப்பட்ட கலைக்களஞ்சியமாகும். எனினும் பிந்திய இடைக் காலத்தில் 1260 ஆம் ஆண்டளவில் வின்சென்ட் என்பவரால் ஆக்கப்பட்ட கலைக்களஞ்சியம் 3 மில்லியன் சொற்களைக் கொண்டதாக விளங்கியது.
இசுலாமும் பாரசீகமும்
தொகுஇடைக் காலத்தில் ஆக்கப்பட்ட முசுலிம்களின் தொடக்க அறிவுத் தொகுப்புக்கள் பல விரிவான ஆக்கங்களை உள்ளடக்கியிருந்ததுடன், இன்று அறிவியல் முறை, வரலாற்று முறை, மேற்கோள் என்று அழைக்கப்படும் பல துறைகளில் பெரிய வளர்ச்சிகளையும் கண்டிருந்தன. கிபி 960 ஆம் ஆண்டளவில், பாசுராவைச் சேர்ந்த தூய்மையின் உடன்பிறப்புகள் (Brethren of Purity) எனப்பட்டோர் தூய்மையின் உடன்பிறப்புகளின் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். இவற்றுள், அபு பக்கர் அல் ராசி ஆக்கிய அறிவியல் கலைக்களஞ்சியம், முத்தாசிலிட்டே அல் கிண்டி எழுதிய 270 நூல்கள், இபின் சீனாவின் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்பன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.
சீனா
தொகு11 ஆம் நூற்றாண்டளவில் சோங் வம்சத்தின் தொடக்க காலத்தில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சிய ஆக்கமான சோங்கின் பெரிய நான்கு நூல்கள் என்னும் ஆக்கம் அக்காலத்தின் பாரிய அறிவுத்துறை சார்ந்த பணியாகும். இவற்றுள் கடைசி நூல் 1000 தொகுதிகளில் 9.4 மில்லியன் சீன மொழி எழுத்துக்களைக் கொண்டது. சீன வரலாறு முழுவதும் பல கலைக்களஞ்சிய ஆக்குனர்கள் காணப்படுகின்றனர். இவர்களுள் அறிவியலாளரும், அரசியலாளருமான ஷென் குவோ (1031–1095); அரசியலாளரும், கண்டுபிடிப்பாளரும், உழவியலாளரும் ஆன வாங் சென் (1290–1333); சோங் யின்சியாங் (1587–1666) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மிங் வம்சத்தைச் சேர்ந்த சீனப் பேரரசரான யொங்கிள் என்பவர் யொங்கிள் கலைக்களஞ்சியம் என்னும் கலைக் களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பித்தார். 1408 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட இது உலகின் மிகப் பெரிய கலைக்களஞ்சியங்களுள் ஒன்று. இது கையால் எழுதப்பட்ட 11,000 தொகுதிகளையும், 370 மில்லியன் சீன மொழி எழுத்துக்களையும் கொண்டது.
17 – 19 ஆம் நூற்றாண்டுகள்
தொகுபொதுத் தேவைக்கானவையும், பரவலாகப் பயன்பட்டவையுமான கலைக்களஞ்சியன் குறித்த தற்கால எண்ணக்கரு 18 ஆம் நூற்றாண்டின் கலைக்களஞ்சியங்களுக்கும் முற்பட்டவை. எனினும், சேம்பர்சின் சைக்கிளோப்பீடியா அல்லது கலை மற்றும் அறிவியல் அகரமுதலி (Cyclopaedia, or Universal Dictionary of Arts and Sciences – 1728), டிடேரோ மற்றும் டி'அலம்பேர்ட்டின் என்சைக்கிளோபீடியே (Encyclopédie – 1751), பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், கான்வசேசன்ஸ் லெக்சிக்கன் (Conversations-Lexikon) என்பனவே முதலில் இன்றைய கலைக்களஞ்சியங்களின் வடிவத்தில் அமைந்ததுடன், விரிவான வீச்செல்லைகளைக் கொண்ட தலைப்புக்களுடனும், ஆழமான விளக்கங்களுடனும் இவை அமைந்திருந்தன.
பிரெஞ்சு மறுமலர்ச்சியின் கலைக்களஞ்சியவியல், மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே உள்ளடக்கத் தேவையில்லை என்றும், தேவையானவற்றை மட்டுமே உள்ளடக்க வேண்டும் என்னும் அடிப்படையிலும் அமைந்திருந்தது. அவசியமானது எது என்பது பல அளபுருக்களின் (criteria) அடிப்படையில் முடிவு செய்யப்பட்டதனால், வேறுபட்ட அளவுகளைக் கொண்ட கலைக்களஞ்சிய ஆக்கங்கள் உருவாயின. அளபுருக்கள் பெரும்பாலும் ஒழுக்கநெறிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த அணுகுமுறையினால் கலைக்களஞ்சியவியலாளர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கினர். இவற்றுள் எதை உள்ளடக்கக்கூடாது என்று எப்படி முடிவு செய்வது, கட்டமைப்புக்குள் அடக்க முடியாதிருந்த அறிவுத்துறைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுகளை எவ்வாறு கையாள்வது, முன்னைய அமைப்பில் இவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்றவை இத்தகைய சிக்கல்களுக்குள் உள்ளடங்கி இருந்தன.
இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரும், மெய்யியலாளருமான சர் தாமஸ் பிரவுண் (Thomas Browne) என்பவர் 1646 ஆம் ஆண்டில் சியூடோடாக்சியா எப்பிடமிக்கா (Pseudodoxia Epidemica) என்னும் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார். இவர் தனது கலைக்களஞ்சியத்தை மறுமலர்ச்சிக்காலத்தில் பரவலாகக் கையாளப்பட்ட "படைப்பின் அளவுத்திட்டம்" எனச் சொல்லப்பட்ட ஒரு படிமுறை அமைப்பு முறையில் ஒழுங்கமைத்திருந்தார். இதன்படி, தலைப்புகள் கனிமம், காய்கறி, விலங்குகள், மனிதன், கோள்கள், அண்டம் என்னும் வரிசையில் கீழிருந்து மேலாக அமைந்திருந்தன. பிரவுணின் தொகுப்பு ஐந்து பதிப்புக்களைக் கண்டது. ஒவ்வொரு பதிப்பும் திருத்தப்பட்டும் புதிய தகவல்கள் சேர்த்தும் வெளிவந்தன. கடைசிப் பதிப்பு 1672 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18 ஆம் நூற்ராண்டின் முற்பகுதியிலும் படித்த ஐரோப்பியர்களுடைய வீடுகளில் காணப்பட்ட இது பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
தற்காலத்தில் மிகவும் பழக்கமான அகரவரிசையில் ஒழுங்குபடுத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் ஜான் ஹரிஸ் (John Harris) என்பவராவார். 1704 இல் வெளியிடப்பட்ட இவரது நூலின் தலைப்பு லெக்சிக்கன் டெக்னிக்கம் அல்லது கலைகளுக்கும் அறிவியல்களுக்குமான ஆங்கில அகரமுதலி: கலை தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகளையே விளக்குகிறது. (Lexicon Technicum: Or, A Universal English Dictionary of Arts and Sciences: Explaining not only the Terms of Art, but the Arts Themselves). தலைப்பில் குறிப்பிட்டபடியே கலை மற்றும் அறிவியல் தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகள், அறிவியல்கள் பற்றிய விளக்கங்களையும் இந்நூல் உள்ளடக்கி இருந்தது. வேதியியல் பற்றி சர் ஐசாக் நியூட்டன் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட ஒரே ஆக்கம் இதன் 1710 ஆம் ஆண்டுப் பதிப்பில் உள்ளது. இது தலைமையாக அறிவியலையே முதன்மைப்படுத்தியது. 18 ஆம் நூற்றாண்டில் "அறிவியல்" என்பதால் புரிந்துகொள்ளப்பட்டவை பற்றி இதன் உள்ளடக்கங்கள் அமைந்திருந்ததோடு, கலைத்துறை மற்றும் நுண்கலைத்துறைகள் சார்ந்த தலைப்புக்களும் இருந்தன. எடுத்துக்காட்டாக சட்டம், வணிகம், இசை போன்ற துறைகள் சார்ந்த தலைப்புக்களில் 1200 பக்கங்கள் வரை இருந்தன. இதைக் கலைக்களஞ்சியம் என்பதைவிடக் கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட அகரமுதலியாகக் கருதலாம்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "encyclopaedia" (online). Oxford English Dictionary (OED.com), ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 2012-02-18.
- ↑ "Encyclopedia". Archived from the original on 2007-08-03. பார்க்கப்பட்ட நாள் 2012-04-05. Glossary of Library Terms. Riverside City College, Digital Library/Learning Resource Center. Retrieved on: November 17, 2007.
- ↑ Hartmann, R. R. K.; James, Gregory (1998). Dictionary of Lexicography. Routledge. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-14143-5. பார்க்கப்பட்ட நாள் July 27, 2010.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Denis Diderot and Jean le Rond d'Alembert Encyclopédie. University of Michigan Library:Scholarly Publishing Office and DLXS. Retrieved on: November 17, 2007
வெளி இணைப்புகள்
தொகு- Hindupedia, encyclopedia of Hindu Dharma
- CNET's encyclopedia meta-search பரணிடப்பட்டது 2005-02-06 at the வந்தவழி இயந்திரம் (includes Wikipedia)
- Encyclopaedia and Hypertext
- Internet Accuracy Project – Biographical errors in encyclopedias and almanacs
- Encyclopedia – Diderot's article on the Encyclopedia from the original பிரெஞ்சு கலைக்களஞ்சியம்.
- De expetendis et fugiendis rebus பரணிடப்பட்டது 2008-06-15 at the வந்தவழி இயந்திரம் – First Renaissance encyclopedia
- Science Dictionary பரணிடப்பட்டது 2013-01-05 at the வந்தவழி இயந்திரம் – Online Comprehensive Science Encyclopedia
- Errors and inconsistencies in several printed reference books and encyclopedias பரணிடப்பட்டது 2001-07-18 at the வந்தவழி இயந்திரம்
- Digital encyclopedias put the world at your fingertips – CNET article
- Encyclopedias online University of Wisconsin – Stout listing by category
- Chambers' Cyclopaedia, 1728, with the 1753 supplement
- Encyclopædia Americana, 1851, Francis Lieber ed. (Boston: Mussey & Co.) at the University of Michigan Making of America site
- Encyclopædia Britannica, articles and illustrations from 9th ed., 1875–89, and 10th ed., 1902–03.
- Encyclopædia Britannica, 11th ed., 1911, at the LoveToKnow site.
- Encyclopedia Sites list பரணிடப்பட்டது 2015-11-04 at the வந்தவழி இயந்திரம்