பால் வன்கார நோய்
பால் வன்கார நோய் (Milk-alkali syndrome) என்பது இரத்தத்தில் கால்சியத்தின் அளவு மிகுதல் மற்றும் வளர்சிதை மாற்றத்தால் இரத்தம் வன்காரமாதல் போன்ற நிலைகளைக் குறிக்கும் ஒரு வகை நோயென மருத்துவத்துறை அடையாளப்படுத்துகிறது.[1] கால்சியம் வகை உணவுகளை அதிகமாக உட்கொள்வதாலும் அமிலமுறி மருந்துகளை நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவதால் காரத் தேக்கம் ஏற்படுவதாலும் பால் வன்கார நோய் உண்டாகிறது. எலும்புப்புரை நோய் சிகிச்சைக்காக உட்கொள்ளப்படும் பால் உள்ளிட்ட கால்சியம் நிரப்பி துணை உணவுகளும், வயிற்றின் அமிலத்தன்மையைச் சரிசெய்ய எடுத்துக் கொள்ளும் அமிலநீக்கி மருந்துகளுமே கால்சியம் மற்றும் காரத்தினுடைய பொதுவான மூலங்களாகும். உரிய நேரத்தில் உரிய சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பால் வன்கார நோய் சிறுநீரக செயலிழப்பு அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும்.[2]
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பால் வன்கார நோய் மிகவும் பொதுவானதாக இருந்தது. ஆனால் 1990 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. எலும்புப்புரை நோயை நிவர்த்தி செய்ய அல்லது தடுக்க எடுத்துக்கொள்ளும் கால்சியம் துணை உணவுகளின் அதிகரித்த பயன்பாடுதான் நோய்க்கான காரணமென நம்பப்படுகிறது.[3][4]
அறிகுறிகள்
தொகுபசியின்மை, தலைச்சுற்றல், தலைவலி, குழப்பம், மனநோய் மற்றும் வறண்ட வாய் போன்றவை மிகவும் பொதுவான அறிகுறிகளாகும்.[5] பால் வன்கார நோய் உள்ள ஒருவருக்கு உயர் இரத்த கால்சியம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் வளர்சிதை மாற்ற வன்காரம் இருப்பதை ஆய்வக சோதனைகள் மூலம் அறியவியலும்.[6]
காரணங்கள்
தொகுகால்சியம் பற்றாக்குறை காரணமாக உண்டாகும் எலும்புப்புரை நோயை நிவர்த்தி செய்ய அல்லது தடுக்க மேற்கொள்ளப்படும் சிகிச்சையின் தொடர்ச்சியாக ஒருவர் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான கால்சியம் துணை உணவுகளும், நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் அமில நீக்கி மருந்துகளுமே இந்நோய்க்கான காரணமென கருதப்படுகிறது.[6][7]
வழிமுறை
தொகுகால்சியம் மற்றும் காரத்தை அதிகமாக உட்கொள்வதனால் பால் வன்கார நோய் தோன்றும் என்பதற்கான வழிமுறை தெளிவாக இல்லை. ஏனெனில் மனித உடல் கால்சியத்தின் அளவை சரியாகவே கட்டுப்படுத்துகிறது. பலவீனமான சிறுநீரக செயல்பாடு ஒரு ஆபத்து காரணி என்று கருதினாலும் ஆரோக்கியமான சிறுநீரகங்கள் உள்ளவர்களுக்குக் கூட இந்நோய்த் தாக்கம் காணப்படுகிறது.[6]
நோயறிதல்
தொகுபாராதைராய்டு இயக்குநீரே உடலில் கால்சியம் சேருவதையும் சிறுநீரகம் மூலமாக அது வெளியேறுவதையும் உறுதிப்படுகிறது.[8] இரத்தத்தில் கால்சியம் அளவு குறையும்போது பாராதைராய்டு சுரப்பியானது எலும்பிலுள்ள கால்சியத்தை எடுத்து இரத்தத்தில் சேர்க்கிறது. பால் வன்கார நோய் கண்டறியும் செயல்முறையில் முதல்நிலை மிகை பாராதைராய்டு இயக்குநீர் சுரப்பை ஒடுக்கவேண்டும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவும் பைகார்பனேட்டு அளவும் அதிகரிக்கும் போது பொதுவாக பாசுபரசு அளவு குறைகிறது.
சிகிச்சை
தொகு- நோயாளி எடுத்துக் கொள்ளும் கால்சியம் துணை உணவுகள், அமில நீக்கி மருந்துகள், நீரேற்றம் உட்பட அனைத்தும் நிறுத்தப்படும்.[6][9]
- கடுமையான சந்தர்ப்பங்களில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். இந்நிலையில் உமிழ்நீர் நரம்பு வழியாக நிர்வகிக்கப்படும்.[9]
- சிறுநீரக செயலிழப்பு உயர்நிலைக்கு சென்றுவிட்டால் அதற்கான சிகிச்சை தேவைப்படும். அதாவது நாள்பட்ட சிறுநீரக தூய்மிப்பு அவசியமாகும்.[9]
விளைவுகள்
தொகுதொடக்க நிலை பாதிப்பு நிகழ்வுகளில் முழுமையான மீட்பை எதிர்பார்க்க இயலும். கடுமையான நோய் முற்றிய சந்தர்ப்பங்களில் நிரந்தர சிறுநீரக செயலிழப்பு அல்லது மரணம் ஏற்படும்.[9]
தொற்று நோயியல்
தொகுஉயர் இரத்த கால்சியத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் இணை கேடையச் சுரப்பு மிகை நோய், புற்று நோய் ஆகியவற்றுக்கு அடுத்ததாக பால் வன்கார நோய் உயிர் போக்கும் கொள்ளை நோயாக பார்க்கப்படுகிறது.[9]
வரலாறு
தொகுபால் வன்கார நோய் என்ற பெயர் 1900 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பெர்ட்ராண்டு சிப்பி என்பவரால் உருவாக்கப்பட்ட இரைப்பைப் புண்களுக்கான சிகிச்சையின் விளைவாக எழுந்த ஒரு வினையிலிருந்து உருவானது.[9] அதிகப்படியான இரைப்பை அமிலத்தால் புண்கள் ஏற்படுகின்றன என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சிப்பி தனது நோயாளிகளுக்கு பால் மற்றும் காரத்தை பரிந்துரைத்தார். இருப்பினும், சில பத்தாண்டு காலத்திற்குள்ளாக குத்பெர்ட் கோப் என்பவர் 1936 ஆம் ஆண்டில் மிகை கால்சியம் நோயை அடையாளம் கண்டார். 1949 ஆம் ஆண்டில் சார்லஸ் எச். பர்னெட்டும் இதேபோன்ற ஆனால் மிகவும் கடுமையான மிகை கால்சியம் நோய்க்குறியை அடையாளம் கண்டுகொண்டார். உயர் இரத்த கால்சியம் அளவுகளுடன் மோசமான விளைவுகள். உணரப்பட்டன.[9]
இரைப்பை புண்களின் உண்மையான காரணம் அடையாளம் காணப்பட்டவுடன் நெஞ்செரிச்சல் சிகிச்சைக்காக அமிலமுறி மருந்துகள் உருவாக்கப்பட்டன. பால் வன்கார நோய் இதனால் வெகுவாகக் குறைந்தது. இருப்பினும், எலும்புப்புரை நோய் விழிப்புணர்வு அதிகரித்ததாலும், அதைத் தடுக்க கால்சியம் துணை உணவுகள் பயன்படுத்துவது வழக்கமாகிப் போனதாலும் பால் வன்கார நோய் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Milk-alkali syndrome: MedlinePlus Medical Encyclopedia". medlineplus.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 April 2019.
- ↑ Irtiza-Ali, Ayesha; Waldek, Stephen; Lamerton, Elizabeth; Pennell, Ashley; Kalra, Philip A. (2008). "Milk Alkali Syndrome Associated with Excessive Ingestion of Rennie®: Case Reports". Journal of Renal Care 34 (2): 64–67. doi:10.1111/j.1755-6686.2008.00018.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1755-6678. பப்மெட்:18498570.
- ↑ "Health-behavior induced disease: return of the milk-alkali syndrome". J Gen Intern Med 22 (7): 1053–5. July 2007. doi:10.1007/s11606-007-0226-0. பப்மெட்:17483976.
- ↑ "Milk-alkali syndrome: a historical review and description of the modern version of the syndrome". Am. J. Med. Sci. 331 (5): 233–42. May 2006. doi:10.1097/00000441-200605000-00001. பப்மெட்:16702792. https://archive.org/details/sim_american-journal-of-the-medical-sciences_2006-05_331_5/page/233.
- ↑ "சந்தேகம் சரியா 40: கால்சியம் மாத்திரையைச் சுயமாக வாங்கிச் சாப்பிடலாமா?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Medarov BI (2009). "Milk-alkali syndrome". Mayo Clin Proc 84 (3): 261–7. doi:10.1016/S0025-6196(11)61144-0. பப்மெட்:19252114.
- ↑ U.S. Department of Health and Human Services, National Institutes of Health, U.S. National Library of Medicine. Last updated Update Date: 7 November 2013 by:Brent Wisse. Medline Plus: Milk-alkali syndrome
- ↑ Correspondent, Vikatan. "வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 9.7 Scofield RH et al. for eMedicine. Updated: 12 Aug, 2014 eMedicine: Milk-Alkali Syndrome
புற இணைப்புகள்
தொகுவகைப்பாடு | |
---|---|
வெளி இணைப்புகள் |
|