பாவம் என்பது தீய செயல்களை[1] சமயங்களின் பார்வையில் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இது பெரும்பாலும், மற்றவர்களைத் துன்புறுத்தும் செயலைக் குறிக்கிறது. யூதம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சில சமயங்களின் பார்வையில், பாவம் என்பது கடவுளின் கட்டளையை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.

கிறிஸ்தவ சமயம்

தொகு

கிறிஸ்தவ சமயத்தைப் பொறுத்தவரை, கடவுளின் கட்டளைகளை மீறுவதே பாவம்.[2] தந்தையாம் கடவுள் வாழ்வின் நெறிகளை ஒழுங்குபடுத்தும் பத்துக் கட்டளைகளைத் தந்திருக்கிறார். அந்த பத்துக் கட்டளைகளையும் சுருக்கி, இயேசு இறையன்பு, பிறரன்பு என்ற இரண்டேக் கட்டளைகளாகத் தந்திருக்கிறார். இந்த கட்டளைகளை மீறுவதே பாவம் ஆகும். கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்தவரை, திருச்சபையின் ஒழுங்குமுறைகளை மீறுவதும், கடமையில் தவறுதல் என்ற பாவமாக கருதப்படுகிறது.

பாவம், அதன் இயல்புக்கேற்ப பிறப்புநிலைப் பாவம், செயல்வழிப் பாவம் என்று இரண்டு வகைப்படும்.

பிறப்புநிலைப் பாவம்

தொகு

முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி செய்த முதல் பாவம், மனிதரின் அருள்நிலையை நீக்கி, மனித குலத்திற்கு சாவையும்,[3] துன்பத்தையும் கொண்டு வந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இந்த பாவத்தின் பாதிப்பு, உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறப்பதாக நம்பப்படுகிறது.[2] இதுவே பிறப்புநிலைப் பாவம் என்று அழைக்கப்படுகிறது.

மனித குலத்திற்கு சாவைக் கொண்டு வந்த ஆதாமின் பாவத்தை அழிக்கவே கிறிஸ்து உலகிற்கு வந்தார்[4] என்பதே கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை. எனவே கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் பேறுபலன்களினால்,[5] திருமுழுக்கின் வழியாக பிறப்புநிலைப் பாவம் போக்கப்பட்டு இழக்கப்பட்ட அருள்நிலை மீண்டும் பெறப்படுகிறது.[6]

செயல்வழிப் பாவம்

தொகு

மனிதர் தங்கள் வாழ்நாளில் செய்யும் பாவம்,[7] செயல்வழிப் பாவம் என்று அழைக்கப்படுகிறது.

பாவம் நான்கு விதங்களில் செய்யப்படுகிறது. அவை,

 1. தீமையானதைத் திட்டமிடும் சிந்தனை
 2. பிறருடைய மனதைப் புண்படுத்தும் சொல்
 3. பிறரைத் துன்பத்திற்கு ஆளாக்கும் செயல்
 4. செய்ய வேண்டிய கடமையைப் புறக்கணித்தல்

செயல்வழிப் பாவம் பின்வரும் இரண்டு வகைகளில் அடங்கும். அவை,

 • அற்ப பாவம்: முழுமையான அறிவோ, விருப்பமோ இன்றி, கடவுளுடைய அன்புக்கு எதிராக செயல்படுவது அற்ப பாவம் ஆகும்.[8] இத்தகையப் பாவம் தொடர்ந்து செய்யப்படும்போது, அது சாவான பாவத்திற்கு வழிவகுக்கும்.
 • சாவான பாவம்: கடவுளுடைய கட்டளையை முழு அறிவுடனும், முழு விருப்பத்துடனும் மீறி, பெரியதொரு தீங்கைச் செய்து, அவரது அன்பை முறித்துக்கொள்வது சாவான பாவம் ஆகும்.[9]

கொடிய பாவங்கள்

தொகு
 • தற்பெருமை - தன்னையே அனைவரையும் விட பெரியவராக கருதி ஆணவம் கொள்ளுதல்
 • சீற்றம் - அளவுக்கு மீறிய வகையில் எரிச்சலுடன் கோபம் அடைதல்
 • காம வெறி - சிற்றின்ப நாட்டங்களுக்கு அதிக இடம் கொடுத்தல்
 • பேராசை - உலகப் பொருட்களின் மீது அதிகமாக ஆசைப்படுதல்
 • பெருந்தீனி விரும்பல் - உணவுப் பண்டங்களில் அதிக ஆர்வம் காட்டுதல்
 • பொறாமை - பிறரிடம் இருப்பவற்றைக் கண்டு பொறாமை கொள்ளுதல்
 • சோம்பல் - கடவுளுக்குரிய செயல்களிலும், தங்கள் கடமையிலும் சோம்பேறித்தனமாக இருத்தல்

ஆதாரங்கள்

தொகு
 1. 1 யோவான் 5:17 "தீச்செயல் அனைத்துமே பாவம்."
 2. 2.0 2.1 உரோமையர் 5:14 "ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று."
 3. உரோமையர் 5:12 "ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது: அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது."
 4. உரோமையர் 5:18-19 "ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்."
 5. 2 கொரிந்தியர் 5:21 "நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்."
 6. உரோமையர் 6:14 "பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்."
 7. உரோமையர் 3:23 "எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்."
 8. 1 யோவான் 5:17 "எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல."
 9. யாக்கோபு 1:15 "பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது."

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவம்&oldid=3370878" இலிருந்து மீள்விக்கப்பட்டது