பாவுரை மரபு

பாடல்களுக்குப் பாடலால் உரை எழுதும் மரபினைப் பாவுரை மரபு என்கிறோம். நம் முன்னோர் பலர், பல்வேறு நூல்களுக்குப் பாடலால் உரை எழுதியுள்ளனர். [1]

பாட்டால் உரை எழுதிய பெருமக்கள்

தொகு

அகநானூறுக்கு

தொகு

அகநானூறு தொகுப்பிலுள்ள பாடல்களுக்குக் கருத்துரை எழுதுகையில் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ணத் தேவனான வில்லவதரையன் என்பவன் அகவல் பாவால் எழுதினான் என்பதை அறிவோம். [2] அகவலாலான இந்தப் பாடலுரை இப்போது கிடைக்கவில்லை.

ஆத்தி சூடிக்கு

தொகு

ஆத்தி சூடி வெண்பா – என்னும் நூல் ஒன்று உண்டு. இராம பாரதி என்பவர் அதனை இயற்றியுள்ளார். [3] இதில் காப்பு வெண்பா ஒன்றும், ஆத்தி சூடியிலுள்ள 109 ஓரடிப் பாடல்களுக்கும் 109 வெண்பாக்களும் உள்ளன. ஒவ்வொரு வெண்பாவும் ஒருவரி ஆத்திச்சூடிப் பாடலுக்குக் கருத்துரையாக அமைந்துள்ளது . அதன் பாங்கை விளக்குவதற்காக அதிலிருந்து 2 வெண்பாக்கள் மட்டும் இங்குத் தரப்படுகின்றன. மாவலி கதை

மாவலியை மானுக்கு மண்ணுதவா மல்தடுத்த
காவலினால் சுக்கிரனும் கண்ணிழந்தான் – ஆவதனால்
நன்னீதி புன்னைவன நாதமகி பாவுலகத்
தின் ஈ வதுவிலக் கேல். – 4

மோகத்தின் செய்கை

தேவர்முனி வர்மண்ணோர் தென்புலத்தார்க் கும்மோகம்
பாவவித்தென் றோதும் பழமறைகள் – ஆவதனால்
வேளாளா புன்னைவன வித்தகா இத்தரையில்
மூளும்மோ கத்தை முனி.

நற்றிணைப் பாடல்களுக்கு

தொகு

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் [4] தொகுப்பு நூலில் கருத்துரைப் பாட்டு என்னும் தலைப்பின்கீழ் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் 2 குறுந்தொகை 186, 189 பாடல்களுக்காக எழுதப்பட்டவை என்று பாரதிதாசனே குறிப்பிட்டுள்ளார்.

மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் இயற்றிய பாடல் – குறுந்தொகை 189

இன்றே சென்று வருதும் நாளைக்
குன்றிழி அருவியின் வெண்தேர் முடுகுக
இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் அருவியின் பசும்பயிர் துமிப்பக்
காலியற் செய்தியின் மாலை எய்திச்
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மாண் ஆகம் மணந்துவக் குவனே.

இதற்குப் பாரதிதாசன் தந்துள்ள கருத்துரைப் பாட்டு

நாமின்று சென்று நாளையே வருவோம்
வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்
இளம்பிறை போல் அதன் விளங்கெளி உருளை
விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்
காற்றைப் போலக் கடிது மீள்வோம்
வளையல் நிறைந்த கையுடை
இளையளை மாண்புற யான்மணந் துவக்கவே.

ஒக்கூர் மாசாத்தியார் பாடல் – குறுந்தொகை 186
<poem>ஆர்கலி ஏற்றொடு கார்தலை மணந்த
கொல்லைப் பனத்த முல்லை மென்கொடி
எயிறென முகையும் நாடற்குத்
துயில்துறந் தனவால் தோழியெங் கண்ணே.

இதற்குப் பாரதிதாசன் பாடியுள்ள கருத்துரைப் பாட்டு

ஆர்ப்புறும் இடிசேர் கார்ப் பரு வத்தைக்
கொல்லையில் மணந்த முல்லைக் கொடியின்
சிரிப்பென அரும்பு விரிக்கும் நாடனை
எண்ணித் துயில்நீங் கியென்
கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே.

திருக்குறளுக்கு வெண்பா

தொகு

திருக்குறட் குமரேச வெண்பா என்னும் நூல் தூத்துக்குடி கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனாரால் எழுதப் பட்டுள்ளது. [5] முதலில் பருவ இதழாக வெளிவந்து, பின்னர் 5 தொகுதிகளில் 4602 பக்கங்களில் நூல் வடிவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒவ்வொரு வெண்பா அந்நூலில் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வெண்பாவிலும் அதனதன் திருக்குறளோடு தொடர்புடைய ஒரு கதை சுட்டப் பட்டுள்ளது. வெண்பாவின் முதலிரண்டு அடிகளில் கதைச் செய்தியின் கருத்து உள்ளது. பின்னிரண்டு அடிகள் திருக்குறள். வெண்பாவுக்கு அடியில் குறள் விளக்கமும், கதை விளக்கமும் மேற்கோள் பாடல்களோடு தரப்பட்டுள்ளன. கதையோடு கூடிய அதன் கருத்துரைப் பாடல் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை விளங்கிக் கொள்வதற்காக 2 வெண்பாவை மட்டும் காணலாம்.

கண்டணங்கோ கார்மயிலோ கன்னியோ என்றுமால்
கொண்டுநின்றாய் என்னே குமரேசா – கொண்ட
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.

பண்டு துறவுகொண்ட பட்டினத்தார் மாண்புலகில்
கொண்டவுயர் வென்ன குமரேசா – கண்ட
இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

திருக்குறளுக்கு ஓரடிப்பாடல்

தொகு

திருக்கோவனூர் திருக்குறள் அறக்கட்டளையின் தலைவர் தவத்திரு தங்க பழமலை அவர்கள் ஒவ்வொரு திருக்குறளுக்கும் நாற்சீர் ஓரடிப் பாடலால் அமைந்தநூல் ஒன்றைப் படைத்துள்ளார். அது கவிதை நடையில் திருக்குறளுக்குப் பொருள் விளக்கம் தருகிறது. எல்லாக் குறள்களுக்கும் அதில் பாடல்கள் இல்லை.

எடுத்துக் காட்டாகச் சொன்னால் அரண் அதிகாரத்தில் 2 குறட்பாக்களுக்கு மட்டுமே ஓரடிப் பாடலுரை உள்ளது.
நூலின் ஓரடிப் பாடல்களில் சில
41 அரசர், அந்தணர், வணிகர் துணை இல்லறத்தான்
55 தற்கொண்டான் பேணுபவள் பருவத்து மழை
134 ஓதலின் நன்றே ஒழுக்கம் உடைமை
1155 நீங்கின் உயிர் நீங்கும், பிரிவைத் தடு.
706 நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்

திருக்குறளுக்கு விருத்தம்

தொகு

கவிஞர் யுவராஜ் என்பவர் திருக்குறளுக்குக் கவிதையுரை யொன்றை வெளியிட்டுள்ளார். அது விருத்தப் பாவால் அமைந்துள்ளது. காஞ்சி அமுதன் என்பவரின் மகன் இவர். [6]

திருக்குறளுக்குக் கலம்பக நெறிப் பாடல்

தொகு

திருவள்ளுவர் கலம்பகம் என்னும் நூல் மதுராந்தகம் கவிஞர் இளம்பூரணர் அவர்களால் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலாசிரியரின் இயற்பெயர் சி பூ கன்னிசாமி. கலம்பக நெறியில் 100 பாடல்களைக் கொண்ட நூல் இது. இதில் திருக்குறள், திருவள்ளுவர் பற்றிய செய்திகள் பாடுபொருளாக அமைந்துள்ளன. [7]

திருக்குறளுக்கு - குட்டிக்குறள்

தொகு

குழலும் யாழும் மழலைமுன் குழைவே – என்பது குட்டிக்குறள். குட்டிக்குறள் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சுகவனம் சிவப்பிரகாசனார் என்பவரால் செய்யப்பட்ட ஒரு நூல். இந்தக் குட்டிக்குறள்களுக்குக் கீ வா ஜ அவர்களின் உரையும் உண்டு.

குழலும் யாழும்
மழலைமுன் குழைவே – இது ஒரு குட்டிக் குறள்

இது ஒருவகையான புத்தாக்கம்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

என்னும் திருக்குறளுக்குத் தந்த பாடல் உரையாக அமைந்திருத்தலைக் காண முடிகிறது. [8]

திருக்குறளுக்குப் பாவாலான உரை [9]

தொகு

1330 குறளுக்கும் ஓரடி நூற்பாவாலான உரை சுகவனம் சிவப்பிரகாசனார், திருக்குறள் நூற்பா ஒழுக்கமே விழுப்பம் உழிரினும் பெரிது குறள் 131 பல்லாற்றி னானும் துணையாவ தொழுக்கம் குறள் 132 ஒழுக்கமே குடிமை இழுக்கமே இழிமை குறள் 133 இவை நூற்பா

நன்னூலுக்கு

தொகு

ஆண்டிப் புலவர் என்பவர் கி பி 15ஆம் நூற்றாண்டில் நன்னூலுக்கு விருத்தப் பாவில் ஓர் உரை எழுதியுள்ளார்.

திருக்கோவையாருக்கு

தொகு

திருக்கோவையாரில் 100 கலித்துறைப் பாடல்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வோர் அகவலாகக் கிளர்ந்தது கல்லாடம்.

திருக்குறளுக்குக் காந்தி வாழ்க்கை

தொகு

இராய சொக்கலிங்கனார்என்பவர் முதலிரண்டு அடிகளில் காந்தியடிகளைப் பற்றிக் கூறிப் பின்னிரண்டு அடிகளில் தொடர்புடைய திருக்குறள் ஒன்றை இணைத்துள்ளார். 125 திருக்குறள்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டு இவ்வாறு பாடப் பட்டுள்ளன.

காவி உடையணியான், காந்தி, சடைமுடியான்
மேவு தவமிதுவோ மெய்ப்புலவர் – ஓஒ
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற [10]

திருக்குறளுக்குத் தாழிசை உரை

தொகு

சின்னதாராபுரம் பாவலர் இறையரசனின் நூல் குறளும் பொருளும். இது 1330 குறட்பாக்களுக்கும் தாழிசையில் பொருள் விளக்கம் தருகிறது. இந்தத் தாழிசையை அரைவிருத்தம் என்றும் போற்றுவர்.

காக்கை கரவா கரந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. – குறள் 527

அடைகின்ற உணவுகளை மறைத்தி டாமல்
அழைத்தழைத்துக் காகம்தன் இனத்தோ டுண்ணும்
அடைந்திருக்கும் பெருஞ்செல்வம் அதனைப் போன்ற
அரும்பண்பு கொண்டவர்க்கே நிலைப்ப தாகும்[11]

திருக்குறளுக்கு அகவல்

தொகு

அகவல் பாடலால் 1330 குறட்பாக்களுக்கும் உரை எழுதப்பட்ட நூலும் உண்டு.[12]

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. இது குறள்

ஊருண் கேணி உறுபுனல் அற்றே
ஒப்புர வதனை யுவக்கும்
பேரறி வாளன் பெரிய திருவே பா 215 இது அகவல்

திருக்குறளுக்கு வெண்பா

தொகு

133 அதிகாரத்துக்கும் 133 வெண்பா [13]

ஒழுக்கம் ஒருவர்க் குயிரினும் மேலாம்
வழித்துணை யாயும் வருமாம் – வழுவின்
பழிவரும் துன்பமும் பற்றிடும் என்றும்
ஒழுக்கம் உயர்வென்றே ஓம்பு. பா 14

திருக்குறளுக்கு உவமைக்குறள்

தொகு

திருக்குறளின் கருத்துகளையும் தொடர்களையும் வைத்து எழுதப்பட்ட 100 குறட்பாக்களால் அமைந்த நூல் உவமைக் குறள் நா பசும்பொற்கிழார் என்பவரால் இது எழுதப்பட்டது.

ஓர் எடுத்துக் காட்டு.

பணத்தியல்பால் பண்புதிரிந் தற்றாகும் போலிக்
குழத்தியல்பால் சேர்நட்புக் கொள். பா 47 [14]

திருக்குறளுக்கு இரங்கேச வெண்பா

தொகு

பிறைச்சாந்தக் கவிராயர் – இரங்கேச வெண்பா – அரங்கநாதனை இரங்கேசா என்று முன்னிலைப்படுத்திப் பாடியது – 133 வெண்பா – திருக்குறள் அதிகாரத்திற்கு ஒரு வெண்பா என்ற முறையில் முதலிரண்டடிகளில் தொடர்புள்ள கதையும், பின்னிரண்டு அடிகளில் திருக்குறள் ஒன்றும் கொண்ட நூல்.

திருக்குறளுக்குச் “சிவசிவ வெண்பா”

தொகு

சென்ன மல்லையர் என்பவரால் இயற்றப்பட்டது “சிவசிவ வெண்பா” [15] சிவனை முன்னிலைப் படுத்தி இது பாடப்பட்டது. 133 வெண்பாக்கள் இதில் உள்ளன. கதையும் குறளுமாக அமைந்துள்ளது. அருச்சுனன் சிவனை வில்லால் அடித்த அடி உலகத்தார் அனைவர்மீதும் பட்டதும், மதுரையில் பிரம்படி பட்டது அனைவர்மீதும் பட்டதும் முதல் குறளை விளக்கும் கதைகளாகத் தரப்பட்டுள்ளன.

சினேந்திர வெண்பா

தொகு

சினேந்திர வெண்பா என்னும் நூல் சினேந்திரா என்று அருகக் கடவுளை அழைத்துப் பாடும் நூல். இது பதிப்பில் இல்லை. ஆசிரியரின் பெயர்கூடக் கிடைக்கவில்லை.

திருக்குறளுக்குச் சோமேசர் முதுமொழி வெண்பா

தொகு

மாதவச் சிவஞான யோகி இயற்றிய சோமேசர் முதுமொழி வெண்பா என்னும் நூல் ஒன்று உண்டு. சென்னைக் கிறித்துவக் கலாசாலைத் தமிழாசிரியர் வ மகாதேவ முதலியாரின் உரையும் இதற்கு உண்டு 114 கதைகளில் 133 குறட்பாவில் வெண்பாக்கள் இதில் உள்ளன. 16, 17 வரிசையெண் தரப்பட்டுள்ள நூல்களில் 133 – க்குமேற்பட்ட கதைகள் இடம் பெற்றுள்ளன. மேலே கண்ட 3 நூல்களும் திருக்குறள் குமரேச வெண்பாவுக்கு வழிகாட்டிகள்.

இரட்டைப்புலவர் குறள் இணைப்பு

தொகு

இரட்டைப் புலவர் பாடல்

மாங்காட்டு வேளான் மகளை மருமகன்பால்
போங்காட்டில் இன்பம் புணர்ந்தானே – ஆங்கானும்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (தனிப்பாடல் திரட்டு)

இப்பாடல் திருக்குறள் குமரேச வெண்பா தோன்ற வழிகோலியதாகலாம் என்பது முனைவர் இந்திராணியின் கருத்து.

திருத்தொண்டருக்கு ஏற்ற திருக்குறள்

தொகு

திருத்தொண்டர் வெண்பா எனவும் போற்றப்படும் திருத்தொண்டர் மாலை 102 திருக்குறள்களை பின்னடிகளாகக் கொண்டது. இதன் ஆசிரியர் குமார பாரதி. திருத்தொண்டத் தொகையிலுள்ள 72 அடியார்களுக்கு முதன்மை தரப்பட்டு அவர்களின் வரலாறுகளுக்கேற்ற திருக்குறள்கள் இந்நூலின் பாடல்களில் இணைந்துள்ளன.

திருக்குறள் அதிகார மலை

தொகு

திரிப் புல்லாணி மாலை என்னும் நூல் 135 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்டது. இந்நூலில் 133 அதிகாரத்திலிருந்தும் 133 திருக்குறள்கள் தெரிவு செய்யப் பெற்று இணைத்துப் பாடப்பட்டுள்ளன. இந்த வைணவப் பாடல்கள் நாராயண ஐயங்கார் என்பவரால் மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடிகப் பதிப்பாகியுள்ளது.

திருக்குறளுக்கு இன்னிசை வெண்பா

தொகு

திருமலைக் கொழுந்து வெண்பா திருமலைக் கொழுந்து பிள்ளை என்னும் பெருமகனாரை முன்னிலைப் படுத்திப் பாடப்பட்ட நூல். 77 இன்னிசை வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் பாடல்களில் 77 திருக்குறள்கள் இணைந்துள்ளன.

திருக்குறளுக்கு நேரிசை

தொகு

திருமலை வெண்பா – 133 நேரிசை வெண்பா – அதிகாரத்துக்கு ஒரு திருக்குறள் – திருப்பதியாகிய திருமலையை முன்னிலைப் படுத்தியது – 60 பாடல்கள் (அறம் 38 + பொருள் 22) மட்டும் கிடைத்துள்ளன.

திருக்குறளுக்குத் தினகர வெண்பா

தொகு

தினகர வெண்பா – தினகரன் என்பவரை முன்னிலைப் படுத்திப் பாடிய வெண்பா – கி பி 16 ஆம் நூற்றாண்டில் அரசாண்ட அச்சுதேந்திரன் என்னும் நாயக்க மன்னனின் அமைச்சர் இந்தத் தினகரன். இவரது குணநலன்களைப் பெருமைப் படுத்திப் பேசும் இவரது வெண்பாக்களில் பின்னிரண்டு அடிகள் திருக்குறள். அதிகாரத்திற்கு ஒன்று. மேலும் காப்பு, மக்கட்பேறு, புகழ், நட்பு ஆகியவற்றிற்குக் கூடுதல் வெண்பாக்கள். ஆக 137 ஆற்றொழுக்கு ஓட்டப் பாடல்கள் – இவற்றுள் இராமாயணச் செய்திகள் 10

பெரியபுராணச் சரித்திர வெண்பா மாலை

தொகு

பெரியபுராணச் சரித்திர வெண்பா மாலை என்னும் நூல் இருந்ததாகத் தெரிகிறது. எந்தவிவரமும் கிடைக்கவில்லை.

முதுமொழிமேல் வைப்பு

தொகு

முதுமொழிமேல் வைப்பு நூலின் ஆசிரியர் தரும்புர ஆதீன கமலை வெள்ளியம்பலவான முனிவர். இதில் எல்லா அதிகாரங்களிலிருந்தும் திருக்குறள் தெரிந்தெடுக்கப்பட்டு, அவற்றுடன் வீட்டுப்பால் பற்றிய சில கூடுதல் குறட்பாக்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுப் பாடல்கள் இயற்றித் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் உமாபதி சிவாசாரியாரின் திருவருட் பயன் நூலிலிருந்து சில குறள் பாடல்களும் விளக்கம் இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 196 + காப்புச் செய்யுள் உள்ளன. இவற்றில் 151 கதைச் செய்திகள் உள்ளன.

குமரேசர் முதுநெறி வெண்பா

தொகு

குமரேசர் முதுநெறி வெண்பா நூலின் ஆசிரியர் சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள். முருகேசா என்று முருகனை விளிக்கும் வெண்பாக்களின் பின்னிரண்டு அடிகள் திருக்குறள். அகத்தியம் முதலான 27 கதைகள் நூல்களில் காணப்படும் செய்திகள். இதற்கு சோ குமார வீரையரின் உரை ஒன்றும், சு அ இராமசாமிப் புலவர் பொழிப்புரை ஒன்றும் உள்ளது. ஆசிரியர் சமயக் காழ்ப்பு இல்லாதவர்.

வடமலை வெண்பா

தொகு

வடமலை வெண்பா நூலின் ஆசிரியர் ஏகாந்தக்கிராதி பாகை அழகப்பன். ஒருவர் ஒரு முறை கூறிய பாடலை உடனே அப்படியே மனத்தில் பதித்துக் கொள்ளும் ஆற்றல் இவருக்கு இருந்ததால் இவரை ஏகாந்தக்கிராதி என்றனர். அவரது புரவலர் வடமலைப் பிள்ளைமீது பாடப்பட்டது இந்நூல். அறத்துப்பால், பொருட்பால்களிலுள்ள 108 அதிகாரங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு குறள் பின்னிரண்டு அடிகளில் அமைக்கப்பட்டு வெண்பாக்கள் பாடப்பட்டுள்ளன. காமத்துப்பால் பகுதி இடம்பெறவில்லை.

வள்ளுவர் நேரிசை

தொகு

வள்ளுவர் நேரிசை என்னும் இந்த நூலின் ஆசிரியர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார். இதில், முதல் 10 அதிகாரத்தின் 100 குறள்கள் பின்னிரண்டு அடிகளாக இடம்பெற்றுள்ளன. இவர் முழுமைக்கும் செய்யத் திட்டமிட்டிருக்கலாம்.

இப்படிப்பட்ட கருத்துரைப் பாடல்களின் வழிநூலாகத் திருக்குறள் பாவுரை நூல் தோன்றியுள்ளது என்று ஒருவகையில் கொள்ள முடியும். எனினும் அந்நூல்கள் தம் உரைக்கு இணையான மூலத்தை ஆங்காங்கே இணைத்துக் கொண்டுள்ளன. இந்நூல் அதனை ஆங்காங்கே எண்ணிட்டுக் காட்டிவிட்டுத் திரண்ட கருத்தைப் பாவாக்கியுள்ளது. மேலே காட்டப்பட்டுள்ள பாவுரை நூல்களோடு ஒப்பிட்டு நோக்கினால் இந்நூலின் தனித்தன்மையும், அறிவியல் நோக்கும் புலனாகும்.

அடிக்குறிப்பு

தொகு
  1. முனைவர் செங்கைப் பொதுவன் திருக்குறள் பாவுரை, Tiukkural: A Verse Commentary, திருக்குறள் மூலத்துடன், 21 அறிஞர்களின் ஆய்வுக் குறிப்புகளுடன், சில குறிப்புகளுடன் திருக்குறள் மூலம் சேர்க்கப்பட்டது, வெளியீடு 2006
  2. சங்க இலக்கியம் – பாட்டும் தொகையும்- பேராசிரியர் எஸ் வையாபுரிப் பிள்ளை தொகுப்பு – பழம்பாடலும் அதனை அடுத்துத் தரப்பட்டுள்ள குறிப்பும்
  3. (முதல் பதிப்பு- சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப் புலவர் புதுவை இராசகோபால முதலியார். இதன் வழிமுறைப் பதிப்பு – மதுரைப் புதுமண்டபம் புக் ஷாப் வி என் இராகவக் கோனார் – சென்னை, செல்லப்ப முதலியாரது ஜீவகாருண்ய விலாச அச்சு இயந்திர சாலைப் பதிப்பு – 1905)
  4. (ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 2006)
  5. வெளியீடு 1938
  6. செய்தி எழுச்சிக்கவி ஈரோடு தமிழன்பன்
  7. செய்தி – மயிலம் தமிழ்க் கல்லூரி முதல்வர் முனைவர் சு திருநாவுக்கரசு அவர்கள்
  8. செய்தி – சந்தக் கவிமாமணி தமிழகன்
  9. சிலம்பொலி செல்லப்பனார் தொகுத்து வழங்கியவை
  10. காந்தி கவிதை – காந்தியும் வள்ளுவரும் – பா 8
  11. இது நூலின் தாழிசை – மணிமேகலை பதிப்பகம், சின்னதாராபுரம் 1982
  12. வேதாசலம், திருக்குறள் அகவல் 1955
  13. கன்மதியன். குறளமுதம் 1976
  14. செக வீர பாண்டியனாரின் - திருக்குறட் குமரேச வெண்பா – ஓர் ஆய்வு என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை, ஆசிரியர் முனைவர் கெ எ இந்திராணி, நூல் பதிப்பு 2001
  15. பதிப்பு 1967–68
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவுரை_மரபு&oldid=3424786" இலிருந்து மீள்விக்கப்பட்டது