பாஸ்கரராயர்

பாஸ்கர ராயர் (1690 - 1785) இந்துக் கடவுளான பராசக்தியைப் பற்றி எழுதிய ஒரு மூல எழுத்தாளர். சாக்த மந்திரங்களைப்பற்றி ரகசியமாக இருந்து வந்த பல உட்பொருள்களையெல்லாம் வடமொழியில் இயற்றியவர். இந்து சமயம் இவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. இவருடைய 'வரிவஸ்யா ரகசியம்', 'ஸௌபாக்கிய பாஸ்கரம்', 'சேது பந்தம்' முதலிய மூன்று படைப்புகளும் முக்கியமானவை.

இவருடைய தந்தை கம்பீரராயர், தாய் கோனமாம்பா. கம்பீரராயர் பெரும் பண்டிதர். விசயநகர மன்னனால் பாரதி எனப் பட்டமளிக்கப்பட்டவர். தந்தையார் தம் மகனை எட்டாவது வயதில் காசிக்கு அழைத்துச்சென்று அங்குள்ள நரசிம்மாத்வரி என்பவரிடம் வேதக்கல்வியைக் கற்க ஏற்பாடு செய்தார். கங்காதர வாஜபேயி என்பவரிடம் கௌட தர்க்கத்தைப் பயின்றார்.[1]

வாழ்க்கைக் குறிப்புதொகு

லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதிய பாஸ்கரராயர் மஹாராஷ்டிரத்தில் பாகா எனும் இடத்தில் பிறந்தவர்.[2] அவருடைய தந்தை பெரிய வித்வான். இவரது தந்தை இவரை காசிக்கு அனுப்பித்து ஒரு அரிய கலைஞரிடம் சாஸ்திரங்களையும் மந்திரங்களையும் கற்க வைத்தார். இவர் பிறகு குஜராத் மாகாணத்தில் பல இடங்களில் மத்வ சம்பிரதாயங்களில் தேர்ச்சி பெற்றவர்களுடன் வாதங்கள் செய்து பராசக்தியின் பெருமைகளை நிலைநாட்டினார். இதைக் கேள்விப்பட்ட தஞ்சாவூர் மன்னன் காவிரிக்கரையில் ஒரு கிராமத்தை இவருக்குக் கொடுத்து அங்கு இவரை வசிக்கச் செய்தார். திருவிடைமருதூருக்கருகில் இருக்கும், பாஸ்கரராயபுரம் என்று தற்காலத்தில் வழங்கி வரும் கிராமம் தான் அது. அங்கு தான் இவர் அவருடைய எஞ்சிய வாழ்நாளைக் கழித்தார். அவருடைய ஆன்மிகப்பெருமைகள் தமிழ்நாட்டு மக்களிடையே பரவலாக இன்றும் பேசப்படுகிறது.

இரு மனைவிகள்தொகு

உரிய வயதில் ஆனந்தீ என்னும் மங்கையை மணந்து பாண்டுரங்கன் என்னும் மைந்தனைப் பெற்றார். நான்காம் வேதம் ஆகிய அதர்வண வேதத்தைப் பயில்வார் அருகி வருவதை உணர்ந்து, தாமே பயின்று பல மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். தேவி வழிபாட்டில் ஈடுபட்டுப் பிரகாசானந்த நாதர் என்னும் தீட்சைப் பெயருடைய சிவதத்த சுக்லர் என்பவரிடம் ஸ்ரீவித்யை உபதேசம் பெற்றார். பின்னர் பாசுரானந்த நாதர் என அழைக்கப்பட்டார். தம் மனைவியையும் ஸ்ரீவித்யையில் ஈடுபடுத்தி பத்மாவதி எனப் பெயர் வழங்கினார். இவரால் வெல்லப்பட்ட ஒரு துறவி தம் பூர்வாஸ்ரம உறவினப்பெண் ஆகிய பார்வதியை இரண்டாவது மனைவியாக மணமுடித்தக்கொடுத்தார். இவர் காசியில் இரு மனைவியருடன் சில காலம் வசித்தார். இவருடைய வாழ்நாளிற்குப் பிறகு இவருடைய மூத்த மனைவியால் பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு இன்றளவும் வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன. இவரால் வழிபடப்பெற்ற ஸ்ரீசக்ர பூர்ணமேரு இன்றும் திருவிடைமருதூர்ப் பெருங்கோயிலில் மூகாம்பிசை சன்னிதியில் வழிபடப்படுகிறது.[1]

லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தரியலஹரி, இவையிரண்டிற்கும் பாஸ்கரராயருடைய உரையே முக்கிய உரைகளாகும்.

தமிழ் உரைதொகு

தஞ்சாவூர் பண்டித எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரிகள் அவர்களும் (1934), சென்னை குகானந்த ண்டலியைச் சேர்ந்த ந.சுப்ரமணிய அய்யர் அவர்களும் (1938) பாஸ்கர ராயருடைய சில வடமொழி நூல்களைத் தமிழ் உரையுடன் வெளியிட்டுள்ளனர்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 தேதியூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், பாஸ்கர ராயர், திருக்குடமூக்கில் மாமகம், 1992 சிறப்பு மலர்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-10-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-25 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்கரராயர்&oldid=3563110" இருந்து மீள்விக்கப்பட்டது