பா. தென்றல்

பா. தென்றல் (B. Thendral) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரத்தில் தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பள்ளிக் குழந்தைகளை இணைத்து ‘தேவதைகள் கூட்டம்’ என்ற பெயரில் கதை சொல்லும் நிகழ்வை நடத்தி வருகிறார். ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று வாசல் பள்ளி திட்டம் என்ற பெயரில் பாடங்கள் நடத்தினார்.[1] கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இனிய நந்தவனம் என்ற சிற்றிதழின் துணை ஆசிரியராக இருந்து வருகிறார்.

பா. தென்றல்
B.Thendral
கவிஞர் பா.தென்றல்
பிறப்பு(1971-03-07)7 மார்ச்சு 1971
தொழில்இடைநிலை ஆசிரியர், கவிஞர், சிற்றிதழ் துணை ஆசிரியர்
தேசியம்இந்தியர்
குடியுரிமை இந்தியா
குறிப்பிடத்தக்க விருதுகள்திருப்பூர் சக்தி விருது, தினமலர் இலட்சிய ஆசிரியர் விருது,
துணைவர்கள்சரவணன்
பிள்ளைகள்மனோஜ், ரிந்தியா
பெற்றோர்பாலசுப்ரமணியன், ஆனந்தா

பூங்கா, நூலகம், தச்சுப் பட்டறை போன்ற பல இடங்களுக்குக் களப்பயணமாக மாணவர்களை அழைத்துச் செல்லல், வகுப்பறையில் பொம்மலாட்டம், ஓரங்க நாடகம், நடனம், பாடல், கதை சொல்லுதல், உடற்பயிற்சிகள், தியானம், யோகா போன்றவற்றை செய்வதற்கு மாணவர்களை ஊக்குவித்தல், பள்ளியில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் மாணவர்களோடு மாணவராய் பங்கேற்றல் போன்ற செயல்பாடுகளால் இவர் நன்கு அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

தஞ்சாவூர் மாவட்டம் திருமருகல் என்னும் சிற்றூரில் பாலசுப்ரமணியன், ஆனந்தா தம்பதியருக்கு 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஏழாம் தேதியன்று இவர் மகளாகப் பிறந்தார். பெற்றோர் இருவருமே ஆசிரியர்களாவர். தொடக்கக் கல்வியை காரைக்குடியிலும், உயர்கல்வியை கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், காரைக்குடி மீனாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். 1991 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். காரைக்குடியில் தான் படித்த சிறீ கார்த்திகேயன் தொடக்கப் பள்ளியிலேயே தற்போது ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது கணவர் சரவணனும் ஓர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு மனோஜ், ரிந்தியா என்று இரு குழந்தைகள் உள்ளனர்.

எழுதிய நூல்கள் தொகு

  1. உயிர் பருகும் மழை [2] (கவிதைத்தொகுப்பு)
  2. நீசமாக எண்ணாதே நீச்சலடிக்கக் கற்றுக்கொடு[3] (கட்டுரைத் தொகுப்பு)
  3. வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும்[4] (கட்டுரைகள்)

செயற்பாடுகள் தொகு

தேவதைகளின் கூட்டம் தொகு

ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தன் வீட்டில் "தேவதைகள் கூட்டம்" என்ற பெயரில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். மூன்று வருடங்களாக தேவதைகள் கூட்டத்தின் மாதாந்திர சந்திப்பு நடைபெற்று வருகிறது.[5]

வீட்டைச் சுற்றிலும் உள்ள பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இணைத்து முதலில் கதை சொல்லும் நிகழ்ச்சியாக இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. பாடல், நடனம், ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல், கழிவுப் பொருட்களில் கைவினைப் பொருட்கள் செய்தல் எனப் பல திறன்களையும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவது இவ்வமைப்பின் நோக்கமாகும். தற்பொழுது பல பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். கொரோனா காலத்தில் கூட இந்நிகழ்ச்சி புலனக்குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு தினமும் ஒரு செயல்பாடு அளிக்கப்பட்டது. 64 பள்ளிகளைச் சேர்ந்த 103 குழந்தைகள் தினசரி செயல்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்டார்கள். அமைப்பின் சார்பாக இணையம் மூலமாகப் போட்டிகள் நடத்தி குழந்தைகளுக்குப் பரிசுகள் அளிக்கப்படுகின்றன.

வாசல் பள்ளி தொகு

2020-ஆம் ஆண்டு, ஊரடங்கில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தபோது மாணவர்களின் வீட்டு வாசலில் அமர்ந்து அல்லது அவர்கள் வீட்டுக்கு அருகில் பூட்டிக்கிடக்கும் கடைகளின் வாசலில் அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுக்கும் திட்டம் வாசல் பள்ளி என்ற திட்டமாகும்.[6]

ஒரு நாளுக்கு, ஒரு பகுதி என வாரத்தின் ஆறு நாட்களுக்கும், ஆறு பகுதிகளுக்குச் சென்று மாணவர்களின் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து பாடம் நடத்தினார். இதன் விளைவாக தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

விருதுகள் தொகு

  • திருப்பூர் சக்தி விருது,[7]
  • தினமலர் இலட்சிய ஆசிரியர் விருது,
  • கல்விச் செம்மல்,
  • கலைச்சுடர்,
  • நிலாச்சுடர் விருது,
  • சிகரம் தொட்ட ஆசிரியர்,
  • ஒளிரும் ஆசிரியர் உள்ளிட்ட பல விருதுகளை தென்றல் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "இணைய வசதி இல்லாத குழந்தைகளுக்காக வாசல் பள்ளி திட்டம்: காரைக்குடி பள்ளி ஆசிரியரின் முயற்சிக்கு வரவேற்பு". Hindu Tamil Thisai. 2020-09-01. பார்க்கப்பட்ட நாள் 2023-06-17.
  2. "நூல் அறிமுகம் உயிர் பருகும் மழை". புத்தகம் பேசுது. https://puthagampesuthu.com/2020/09/10/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/. பார்த்த நாள்: 17 June 2023. 
  3. "நூல் அறிமுகம்: தோழியர் தென்றலின் இலக்கிய முயற்சிகளுக்கும்.. – சுப்ரபாரதிமணியன்". Thamiz books.com. https://bookday.in/neesamaga-ennathe-neechal-adikka-katrukkodu-book-review/. பார்த்த நாள்: 17 June 2023. 
  4. "நல்வரவு: வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும்". Hindu Tamil Thisai. 2022-04-30. பார்க்கப்பட்ட நாள் 2023-06-17.
  5. தினத்தந்தி (2022-02-14). "தென்றல் நடத்தும் 'தேவதைகளின் கூட்டம்'". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-17.
  6. "கொரோனா காலத்தில் மாணவர்களை தேடிச்செல்லும் தென்றல் டீச்சர்". BBC News தமிழ். 2020-09-11. பார்க்கப்பட்ட நாள் 2023-06-17.
  7. "திருப்பூர் சக்தி விருது 2021 விழா - சுப்ரபாரதிமணியன் -". www.geotamil.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-17.

புற இணைப்புகள் தொகு

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._தென்றல்&oldid=3738191" இலிருந்து மீள்விக்கப்பட்டது