பிடாரி அரசியம்மன் கோயில்

பிடாரி அரசியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் வட்டம் இருப்பு கிராமத்தில் இக்கோவில் அமைந்திள்ளது. இருப்பு என்பது நான்கு திசைகளில் உள்ள ஊர்களின் தொகுப்பு பெயராகும்.

இருப்பிடம்

தொகு

கிழக்கிருப்பு, தெற்கிருப்பு, மேற்கிருப்பு, (கோயிலாங்குப்பம்) வடக்கிருப்பு ஆகிய நான்கு கிராமங்களுக்கு நடுவில் உள்ள இடமே இருப்பு என அழைக்கப்படுகிறது. இக்கிராமங்களில் வாழும் மக்கள் ஒரு காலத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளிலிருந்து இங்கு வந்து குடியேறியதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் ஆண்ட நாட்டிலிருந்து வந்துள்ளார்கள் என்பதற்கு சான்றாக அதியமான் குப்பம் என்ற ஊரும் இங்கு உள்ளது. அங்கிருந்து வந்தவர்கள் தங்கள் மன்னனின் பெயரை இந்த ஊருக்கு சூட்டியிருக்கலாம் என கருத இடமுண்டு. இப்பகுதி செம்மண் பூமி. மேலே குறிப்பிட்ட ஊர்களுக்கு பொதுவாக சேமகோட்டை என அழைக்கப்பட்டு வந்தது. இப்பகுதியை ஆண்ட மன்னன் செம்மண்ணால் கோட்டை கட்டி அதில் வாழ்ந்திருக்கலாம் என எண்ண இடமுண்டு. செம்மண் கோட்டை மருவி சேமக்கோட்டை ஆகியிருக்கக்கூடும்.

தல வரலாறு

தொகு

கோயில் பற்றி கல்வெட்டுகளோ, செப்பு பட்டையங்களோ கிடைக்கப் பெறவில்லை. தர்மபுரி பகுதிகளிலிருந்து இங்கு குடிபெயர்ந்த மக்கள் தங்களுடைய குலதெய்வத்தை இங்கு கொண்டு வந்திருக்கலாம் என எண்ண தோன்றுகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலைச் சுற்றி காடுகள் சூழ்ந்திருந்தன. நாளாவட்டத்தில் காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. அரசியம்மன் இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறாள். கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள மண்ணுக்கு மழை நீரை தேக்கி வைக்கும் தன்மை இல்லை. ஆகவே இக்கோயிலுக்கு குளம் ஏதும் இல்லை. இப்பகுதிகளிலிருந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த மக்கள் அரசியம்மனையே குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.

இத்தலத்தைப்பற்றி இவ்வூர் மக்கள் வன்னிய புராணத்தோடு தொடர்பு படுத்தி கூறுகின்றனர். அதாவது புராணத்தில் வரும் வாதாபி, என்ற அரக்கனை அரசியம்மன் வதம் செய்தாள் என்றும், பின் இங்கு வந்து அமர்ந்துவிட்டாள் என்றும் கூறுகின்றனர். ஆனால் வன்னிய புராணத்தில் மேற்படி அரக்கர்கனை சிவனின் யாகத்தீயில் வந்து தோன்றிய ருத்திர வன்னியன் வதம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

உற்சவம்

தொகு

இக்கோயிலுக்குக் கிழக்கிருப்பு மேற்கிருப்பு, வடக்கிருப்பு, தெற்கிருப்பு, அதியமான்குப்பம், நாச்சி வெள்ளையன் குப்பம் (நெல்லெடிகுப்பம்) முடப்புளி, காட்டுகூடலூர், நண்டு குழி, செடுத்தான் குப்பம் ஆகிய ஊர்கள் உற்சவத்தில் பங்கு கொள்கின்றன்றன.

சித்திரை மாதத்தில் அமாவாசை அடுத்து வரும் பூச நட்சத்திரத்தில் கொடியேற்றம் நடைபெறும். கொடியேற்றம் அன்றே நாச்சி வெள்ளை யங்குப்பம் கிராமத்தினரால் முதல் உற்சவம் நடத்தப்படுகிறது. மற்ற நாட்களில் முறையே கிழக்கிருப்பு, தெற்கிருப்பு, மேற்கிருப்பு, அதியமான்குப்பம், வடக்கிருப்பு ஆகிய கிராமத்தினராலும் அடுத்த நாள் பரம்பரை தர்மகர்த்தாவாலும், பின் பிரார்த்தனைக்காக வேண்டிக்கொள்பவர்களாலும் உற்சவம் நடத்தப்படுகின்றன.

தொடர்ந்து வரும் பௌர்ணமி அன்று முதல் அம்மனை கிழக்கிருப்பு, தெற்கிருப்பு, மேற்கிருப்பு, அதியமான்குப்பம், வடக்கிருப்பு, முடப்புளி காட்டுகூடலூரின் ஒரு பகுதி, நாச்சிவெள்ளையங்குப்பம், நண்டுகுழி, செடுத்தான்குப்பம் ஆகிய கிராமங்களுக்கு தூக்கிச்சென்று சாகை வார்த்து (கூழ் வார்த்து) வழிபாடு செய்கின்றனர். 15 ஆம் நாள் இரவு அம்மனைக் கோயிலுக்குக் கொண்டு வருகின்றனர். அன்று இரவு அதியமான் குப்பம் அருகில் உள்ள குளத்திற்கு (ஊத்துகுட்டை) அருகில் எழுந்தருளிருக்கின்ற சிவனிடம் அம்மனை அழைத்து செல்கின்றனர். அங்கு சிவன் லிங்கவடிவில் உள்ளார். அங்கு சிவனுக்கும் அம்மனுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நிறைவேற்றப் படுகிறது. மாங்கல்யம் சூடுவது திருவோண நட்சத்திரத்தில் நடத்துகின்றனர். அம்மனுக்கு நேர்ந்துகொண்ட பெண்கள் அம்மனின் திருமணத்தன்று தங்கள் தாலியைக் காணிக்கையாக்குகின்றனர்.

திருமணம் முடிந்தபின் அம்மனை முத்துபல்லக்கில் அமர்த்திக் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வருவார்கள். கோயிலை அடைந்தவுடன் 6 மணி வரை வாணவேடிக்கை நடத்தப்படும். பின் செடல் உற்சவம் நடைபெறும். நேர்ந்துகொண்டவர்கள் செடல் போட்டுகொள்வதோடு கால்நடைக்கும் செடல் போடுகின்றனர். அன்று மாலை தேர் உற்சவம் நடத்தப்படுகிறது. திருவிழா முடிந்தபின் தேர் இழுப்பது இங்கு வித்தியாசமான நிகழ்வாகும்.

பராமரிப்பு

தொகு

இக்கோயில் தமிழ்நாடு இந்துஅறநிலத்துறையின் கீழ் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மத்தியில் செய்தித்துறை அமைச்சராக இருந்த பூவராகன் வகையறாக்கள் பரம்பரை தர்மகத்தாவாக இருந்து வருகின்றனர்.

வெளி இணைப்புகள்

தொகு