பிணைப்பத்திரம் (நிதி)

பிணைப்பத்திரம் (bond) என்பது இரு நபர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் உடன்பாடு ஆகும். நிறுவனங்களும் அரசுகளும் பெரும் தொகையை கடனாகத் திரட்ட பிணைப்பத்திரங்களை வெளியிடுகின்றன. இவற்றை முதலீட்டாளர்கள் வாங்குவதன் மூலம் அவற்றை வெளியிடுவோருக்கு கடன் கிடைக்கிறது. அதற்கான வட்டி ஆண்டுதோறும் பிணைப்பத்திர உரிமையாளருக்கு வழங்கப்படும். இவற்றிற்கான முடிவு நாட்களும் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நாளில் நிறுவனம் (அரசு) பிணைப்பத்திரத்தின் மூலத்தொகையை திருப்பித் தர வேண்டும். இவற்றை வாங்குவதோ விற்பதோ பங்குச்சந்தைகளில் முகவர்கள் மூலமாக நடக்கும்.

இவ்வகை நிதி ஆவணங்கள் நிலைத்த வருமானம் என அழைக்கப்படுகின்றன. இவை நிறுவனங்களின் இலாபநட்டத்தைப் பொறுத்து இல்லாது விற்பனை மூலம் ஈட்டும் வருவாயிலிருந்து செலவுகளை கழித்த பின்னர் கொடுக்கப்படும். எனவே நிறுவனம் ஒழுங்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரை இத்தகைய முதலீட்டில் நிச்சயமற்றத்தன்மை இல்லை.

பிணைப்பத்திரங்கள் இரு வகைப்படும். ஒன்று சாதாரணக் கடன் பத்திரம். மற்றொன்று மாற்றக்கூடிய பிணைப்பத்திரம். மாற்றக்கூடிய பிணைப்பத்திரத்தில் முதலீட்டாளர் விரும்பினால் குறிப்பிட்ட காலத்திற்குப் பகுதியை அல்லது முழுமையாக நிறுவனப் பங்குகளாக மாற்றிக் கொள்ளலாம். இத்தகைய வசதி இருப்பதால் மாற்றக்கூடிய பிணைப்பத்திரங்களுக்கான வட்டிவீதம் சாதாரண பிணைப்பத்திரத்திற்கு உரியதைவிட குறைவாக இருக்கும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணைப்பத்திரம்_(நிதி)&oldid=2157249" இலிருந்து மீள்விக்கப்பட்டது