பிபின் சந்திர பால்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

பிபின் சந்திர பாலர் இந்திய சுதந்திரப் போ ராட்டத்தலைவர்களில் முக்கியமானவர். ஸ்ரீ அரவிந்தர் அவரை "மிகுந்த வல்லமையும் கொள்கைப்பிடிப்பும் உடைய தேசாபிமானி" என்றார். லால்-பால்-பால் என்று அழைக்கப்பட்ட மும்மூர்த்திகளில் ஒருவர். மற்ற இருவர் பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய். இம்மூவர்தான் சுயராச்சியம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே முதன் முதலில் ஏற்படுத்தியவர்கள். அவர் "புரட்சி எண்ணங்களின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். அவர் ஆசிரியர், பத்திரிக்கையாளர், மேடைப்பேச்சாளர், எழுத்தாளர். அவர் 1858-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் நாள் தற்போது பங்காள தேஷ் நாட்டில் உள்ள சில்ஹட் மாவட்டத்தில் உள்ள போய்ல் என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ராமச்சந்திர பால் ஒரு ஜமீந்தார், பெர்சிய மொழியில் புலமை பெற்றவர். தாயார் நாராயணி தேவி. அவர் வசதியான ஹிந்து வைஷ்ணவக் குடும்பத்தின் ஒரே புதல்வர். அவரது ஒரே சகோதரி கிரிபா.[1][2][3]

பிபின் சந்திர பால்
বিপিনচন্দ্র পাল Edit on Wikidata
பிறப்பு7 நவம்பர் 1858
ஹபிகஞ்ச் மாவட்டம்
இறப்பு20 மே 1932 (அகவை 73)
கொல்கத்தா
படித்த இடங்கள்
  • St. Paul's Cathedral Mission College
வேலை வழங்குபவர்
கையெழுத்து
இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களான லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால்

இளமைக்காலம்

தொகு

பிபின் முதலில் தனது தந்தையிடம் கல்வி கற்றார். பின்னர் ஒரு மௌல்வியிடம் பெர்சிய மொழி கற்றார். சில்ஹட்டில் உள்ள மிஷினரி பள்ளிகளிலும், அரசாங்க உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். கல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கசேர்ந்தார். ஆனால் அவர் படிப்பை முடிக்கவில்லை. ஆனால் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பெங்காலியில் ஹேமச்சந்திரா, பக்கிம் சந்திரா போன்றோரும் ஆங்கிலத்தில் தியோடார் பார்க்கர், எமர்சன் போன்றோரும் அவருக்குப் பிடித்த நாவலாசிரியர்கள். வைஷ்ணவ கவிதை இலக்கியங்களையும் அவர் விரும்பிப் படிப்பார். கீதை, உபநிடதம் போன்றவற்றை ஆழமாகக் கற்றவர். கல்கத்தாவில் படிக்கும் போது கேஷப் சந்திரா சென், பிஜோய் கிருஷ்ண கோஸ்வாமி ஆகியோர் அவருக்கு ஆன்மிகத்தில் வழிகாட்டியாக இருந்தனர். ஷிவ் நாத் சாஸ்திரி, சுரேந்திர நாத் பானர்ஜி ஆகியோர் அவருக்கு அரசியலில் வழிகாட்டியாக இருந்தனர். 1879-ல் கட்டாக்கில் உள்ள கட்டாக் அகாடெமியின் தலைமை ஆசிரியர் ஆனார். ஸில்ஹட், பங்களூர், ஹபிகஞ்ச் ஆகிய இடங்களிலும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் நூலகராகப் பணியாற்றினார். 1898-ல் Comparitive Theology படிக்க இங்கிலாந்து சென்றார். ஓராண்டில் திரும்பிவிட்டார். நியூயார்க்கில் உள்ள National Temperence Association அழைப்பின் பேரில் நான்கு மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து சொற்பொழிவாற்றினார்.

சுதந்திரப் போராட்டம்

தொகு

1886- ல் காங்கிரஸில் சேர்ந்தார். அஸ்ஸாம் தோட்டத் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்தும் சிலசமயம் அடித்தே கொல்லப்படுவது குறித்தும் 1896-ல் பிபின் போராடியதால் காங்கிரஸ் இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது. அப்போதைய அஸ்ஸாம் கமிஷனர் சர் ஹென்றி காட்டன் முயற்சியால் இந்த தீமைகள் விலகின. 1886-ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிலும், 1887-ஆம் ஆண்டு சென்னை காங்கிரஸ் மாநாட்டிலும், 1904-ஆம் ஆண்டு மும்பை காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.வங்கப் பிரிவினையை ஒட்டி தீவிர அரசியலில் ஈடுபட்டார். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை உணர்ந்து கொண்டார். அதை எதிர்த்து தீவிரமாகச் செயல்பட்டார். 1907-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினார். அவரது சொற்பொழிவு மக்களை மிகவும் ஈர்த்தது. மக்களிடையே நாட்டுப் பற்றையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு, சுதேசிப் பொருட்கள் பயன்படுத்துதல், ப்ரிட்டிஷ் தொழிற்சாலைகளில் இருந்து வெளிநடப்பு, தேசியக்கல்வி ஆகியவற்றை வலியுறுத்தி வந்தார். சுதேசிப் பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏழ்மையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் நீக்கலாம் என்று நம்பினார். வந்தே மாதரம் இதழைத் தோற்றுவித்தவர்களில் பிபின் சந்திர பாலும் ஒருவர். வந்தே மாதரம் இதழில் ஆட்சியாளரை எதிர்த்து எழுதிய வழக்கில் அரவிந்தருக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்ததால் ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது விடுதலை நாளைக் கொண்டாட முற்படும் போதுதான் வ. உ. சிதம்பரம்பிள்ளையும் சுப்ரமண்ய சிவாவும் கைது செய்யப்பட்டனர்.

1908-லிருந்து 1911 வரை அவர் நாட்டைவிட்டு வெளியில் வசிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். இந்தியா ஹவுஸ் லண்டனின் வடக்குப் பகுதியில் மாணவர்கள் தங்கும் ஓர் இடம். அங்கே இந்திய விடுதலைக்காக தீவிரமாக செயல்பட்ட வ. வே. சுப்பிரமணியம், வினாயக் தாமோதர் சாவர்க்கர், மதன் லால் டிங்கரா போன்றோருடன் இணைந்து பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக பணியாற்றினர். அங்கிருந்து Swaraj இதழை வெளியிட்டார். கர்சன் வில்லி என்பவர் மதன்லால் டிங்கராவால் கொலை செய்யப்பட்ட பிறகு இந்தியா ஹவுஸ் மீது ஆங்கிலேயரின் கவனம் திரும்பியதால் அங்கிருந்து செயல்பட இயலவில்லை.1916-ல் திலகரின் ஹோம் ரூல் இயக்கத்தில் இணைந்தார். முதலாம் உலகபோரின் போது காங்கிரஸ் பிரதிநிதியாக இங்கிலாந்து சென்றார். ரஷ்யாவில் நடந்த போல்ஷ்விக் புரட்சி அவரை மிகவும் கவர்ந்தது. 1921-ல் பாரிசாலில் நடைபெற்ற வங்காள மாகாண மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் கிலாபத் இயக்கதினருடன் இணைந்து பணியாற்றியதால் பிபின் சந்திர பால் 1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்ளவில்லை. அவரால் மௌலானா முஹம்மது அலியின் வகுப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அரசியலில் மதம் கலப்பது ஆபத்தானது என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் புரட்சி வீரர்

தொகு

பிபின் பிரம்ம சமாஜ உறுப்பினர் ஆவார். இளமையிலேயே இந்து சமூகத்தில் உள்ள கொடுமைகளை எதிர்த்தார். 1881-ல் இவரது திருமணம் நிருத்ய காளி தேவியுடன் நடந்தது. இவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் புரட்சி வீரராகவே திகழ்ந்தார். இவரது இரு மனைவியரும் விதவைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. முதல் மனைவியின் அகால மரணத்திற்குப் பிறகு பிராஜ்மோஹினி தேவி என்பவரை 1891-ல் மணந்தார். இரு மனைவியரிடத்தில் அவருக்கு மூன்று புதல்வர்கள், ஐந்து புதல்விகள்.

பெண் கல்வியை ஆதரித்தார். 1891-ஆம் ஆண்டு Age of Consent Bill(திருமண வயது அதிகரிக்கச் செய்த சட்டம்)க்கு பிபின் மிகுந்த ஆதரவு அளித்தார். அதனால் பழமைவாதிகளின் விரோதத்தைப் பெற்றார். அவரது உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தது.

பிபின் சந்திர பால் இதழாசிரியராக இருந்த பத்திரிக்கைகள்

தொகு
  • Paridarsak வங்காளி வாரப்பத்திரிக்கை 1880
  • Bengal Public Opinion 1882
  • Tribune in Lahore 1887
  • The New India 1892
  • The Independent தினசரி ,
  • India வாரப்பத்திரிக்கை 1901
  • Bandematharam தினசரி1906, 1907
  • Swaraj வாரப்பத்திரிக்கை 1908-1911,
  • The Hindu Review 1913
  • The Democrat வாரப்பத்திரிக்கை 1919, 1920,
  • Bengali 1924, 1925

அமிர்தபஜார், ஸ்டேட்ஸ்மேன் போன்ற பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பிபின் சந்திர பால் எழுதிய நூல்கள்

தொகு
  • அரசி விக்டோரியா (பெங்காலி)
  • இந்திய தேசியம்
  • இந்தியாவின் ஆன்மா
  • சமூக மறுமலர்ச்சியின் அடிப்படை
  • சுயராச்சியமும் தற்கால நிலைமையும்
  • The New Economic Menace of India

The New Economic Menace of India என்ற நூலில் கூலி உயர்வு, வேலை நேரக்குறைப்பு இவை குறித்து விளக்கியிருந்தார். ஆங்கிலேயர்கள் இந்தியத் தொழிலாளர்களைச் சுரண்டுவது குறித்து எடுத்துரைத்தார்.

காந்திஜி எதிர்ப்பு

தொகு

காந்திஜியை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்தவர்களில் முதன்மையானவர். காந்திஜியின் செயல்கள் சர்வாதிகாரத் தன்மை உடையவை என்று கூறினார். 1921-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை உரையில் வெளிப்படையாகவே எதிர்த்தார். "மந்திரத்தால் சுதந்திரம் கிடைக்காது. எனக்கு முழு உண்மை தெரியும் போது மக்களுக்குப் பாதி உண்மையை ஒருபோதும் கூறமாட்டேன்." என்று கூறினார். அவர் இறக்கும் வரை காந்திஜி ஒரு சர்வாதிகாரி என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார். திலகர் காலத்திற்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகிவிட்டார்.

நிரஞ்சன் பால்

தொகு

பிபின் சந்திர பாலரின் மகனான நிரஞ்சன் பால் (1889-1959) கல்கத்தாவில் பிறந்தார். பதின்ம வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதனால் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனால் லண்டன் சென்று அங்கே சாவர்க்கர், மதன்லால் டிங்கரா ஆகியோருடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காகப் போராடினார். 1910-ல் அவர் எழுதிய "The Light of Asia and Shiraz" என்ற இரண்டு நாடகங்களும் லண்டனில் நடிக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றன.லண்டனில் இருந்து ஆங்கிலேய மனைவியுடனும் மகன் கோலின் பாலுடனும் மும்பை திரும்பினார். சில நண்பர்களுடன் சேர்ந்து மும்பை டாக்கீஸ் என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். சிறந்த திரைக்கதாசிரியராக விளங்கினார். அவரது "அச்சுத் கன்யா" என்ற தீண்டாமைக் கொடுமையை விளக்கும் திரைப்படம் மிகுந்த வெற்றி பெற்ற படமாகும். அவரது மகன் கோலின் பால்(1923-2005) பத்திரிக்கையாளர், எழுத்தாளர், நடிகர். அவரது சுயசரிதை 2001-ஆம் ஆண்டு இந்திய தேசிய விருது பெற்றது. அவரது மகன் தீப் பால் 672 திரைப்படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிபிசி நிறுவனத்திற்காக அதிக எண்ணிக்கையில் ஆவணப்படங்களை எடுத்துள்ளார். "டப்பாவாலா" பற்றிய அவரது ஆவணப்படம் 2001-ஆம் ஆண்டு Palm de Canes விருது பெற்றது.

மறைவு

தொகு

பிபின் சந்திர பாலர் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் கல்கத்தாவில் மறைந்தார். அவர் இந்தியாவிற்கு அந்நியரிடம் இருந்து சுதந்திரம் கிடைப்பதுடன் ஆன்மீக விழிப்புணர்ச்சியும் தேவை என்று எண்ணினார். அதனால் தேசிய கல்வி குறித்து மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டார். பெண் மறுமணம் குறித்து ஒரு முன்னோடியாக வழிகாட்டினார். அவரது சொற்பொழிவால் அவர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் ஆங்கிலேயரின் கோபத்துக்கு ஆளானார். காங்கிரஸின் கொள்கை மாறியபோதும் தனது கொள்கைகளில் அவர் உறுதியாக இருந்தார். சுயநலமற்ற இவரைப் போன்ற தலைவர்களின் முயற்சியால் நாம் இன்று சுதந்திர நாட்டில் வாழ்கிறோம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ashalatha, A.; Koropath, Pradeep; Nambarathil, Saritha (2009). "Chapter 6 – Indian National Movement" (PDF). Social Science: Standard VIII Part 1. State Council of Educational Research and Training (SCERT). p. 72. பார்க்கப்பட்ட நாள் 13 October 2011.
  2. M.K. Singh (2009). Encyclopedia Of Indian War Of Independence (1857–1947). Anmol Publications. p. 130. Bipin Chandra Pal (1858–1932) a patriot, nationalist politician, renowned orator, journalist, and writer. Bipin Chandra Pal was born on 7 November 1858 in Sylhet in a wealthy Hindu Kayastha family
  3. Pal, Bipin (1932). Memories of My Life and Times (in English). Calcutta: The Modern Book Agency. p. 22.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபின்_சந்திர_பால்&oldid=4100805" இலிருந்து மீள்விக்கப்பட்டது