பியூரனோசு
பியூரனோசு (Furanose) என்பது நான்கு கரி அணுக்கள் மற்றும் ஓர் உயிர்வளி அணுவைக் கொண்ட ஐந்து வளைய வேதிக் கட்டமைப்பைக் கொண்ட கார்போவைதரேட்டு ஆகும். பல்வளைய சேர்மமான பியூரானை ஒத்த அமைப்பைக் கொண்டதால் இச்சேர்மம் பியூரனோஸ் எனப் பெயர் பெற்றது. ஆனால் வளைய அமைப்பைக் கொண்ட பியூரனசோசில் இரட்டைப் பிணைப்புகள் காணப்படுவதில்லை.[1]
அமைப்பியல் பண்புகள்
தொகுவளைய ஆல்டோ பெண்டோசின் ஹெமி அசிட்டால் வடிவம் அல்லது வளைய கீட்டோ எக்சோசின் ஹெமி கீட்டோ வடிவ அமைப்பே பியூரனோசின் வளைய அமைப்பு ஆகும்.
வளைய அமைப்பில் நான்கு கரி அணுக்கள் மற்றும் ஓர் உயிர்வளி அணு கொண்ட பியூரனோசில் ஆக்சிசன் அணுவின் வலது புறத்தில் ஓர் அனோமெரிக் கரி அணுவைக் கொண்டுள்ளது. ஒளி சுழற்றுப் பண்பை கொண்ட கரி அணுவே பியூரனோசின் கட்டமைப்பை (D – கட்டமைப்பு அல்லது L – கட்டமைப்பு) நிர்ணயிக்கிறது. அதிக எண்ணிக்கையிலான பதிலீட்டுத் தொகுதிகளை உடைய, ஒளி சுழற்றுப் பண்பை கொண்ட கரி அணுவானது பியூரனோசின் L – கட்டமைப்பில் தளத்திலிருந்து கீழ்நோக்கியும், D – கட்டமைப்பில் மேல்நோக்கியும் அமைந்துள்ளது. பியூரனோசில் அனோமெரிக் ஐதராராக்சில் தொகுதிஅமைந்துள்ள திசையைப் பொருத்தே ஆல்ஃபா அல்லது பீட்டா கட்டமைப்பு நிர்ணயிக்கப்படுகிறது. D – கட்டமைப்பு பியூரனோசில், கீழ்நோக்கி அமைந்துள்ள ஐதராக்சில் தொகுதி உடையது ஆல்ஃபா கட்டமைப்பு என்றும், மேல்நோக்கி அமைந்துள்ளது பீட்டா கட்டமைப்பு என்றும் வழங்கப்படுகிறது. இதற்கு நேர்மாறான கட்டமைப்பை L – கட்டமைப்பு பியூரனோசு பெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Reginald, Garrett; Grisham M., Charles. (2005). Biochemistry 3rd Edition. Cengage Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-534-49033-6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780534490331.