பிரசெண்டேசன் மகளிர் உயர் நிலைப்பள்ளி, கொடைக்கானல்
பிரசெண்டேசன் கான்வெண்ட் எனப்படும் பிரசெண்டேசன் மகளிர் உயர் நிலைப்பள்ளி (Presentation Convent, Kodaikanal), என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, கொடைக்கானலில் அமைந்துள்ள ஒரு பள்ளி ஆகும்.
வரலாறு
தொகுசென்னைப் பிரசெண்டேசன் திருச்சபையைச் சார்ந்த சேவியர் தாயார் (Rev. Mother Xavier) 1915-ஆம் ஆண்டு கொடைகானலில் ஒரு பள்ளியை நிறுவுவதற்கு ஏற்ற இடத்தைத் தேடினார். கிளென் அருவிக்கு அருகில் அமைந்திருந்த ஒரு மலையுச்சியில் பள்ளியை நிறுவ ஏற்ற இடமாக கண்டார். அதன்படி கி. பி. 1916-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் பிரசெண்டேசன் திருச்சபையைச் சார்ந்த கன்னியர்கள், 'ஹில் சைட்' என்ற அந்த இடத்தில் 17 மாணவியர்களைக் கொண்டு இப்பள்ளி துவக்கப்பட்டது. 1916-ஆம் ஆண்டு சூன் திங்கள் 16-ஆம் நாள் தற்போதுள்ள பள்ளிக் கட்டிடத்திற்குக் அடிக்கல் நடத்தப்பட்டது. கட்டிட வேலை முடிந்ததும் கி. பி. 1917-ஆம் ஆண்டு பெப்ருவரித் திங்களில், பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பள்ளியில் ஒரு கிருத்தவக் கோவிலும் அமைக்கப்பட்டது. அக்கோவில் காலையில் வழிபாட்டுக்குரிய இடமாகவும், மாலையில் பள்ளியாகவும் பயன்படுத்தப்பட்டது. கி. பி. 1916-ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாகத் துவங்கிய இது கி. பி. 1919-ஆம் ஆண்டு உயர் நிலைப்பள்ளியாக மாறியது. கி. பி. 1920- ஆம் ஆண்டு கோடைக்கானலுக்கு வந்த வெலிங்க்டன் சீமாட்டி, இப்பள்ளிக்கான இரட்டை மாடிக் கட்டிடம் ஒன்றுக்குக் கால்கோள் இட்டார். ஒரு இலட்சம் ரூபாய் செலவில் இக்கட்டிடம் கட்டப்பட்டது. 'கிண்டர் கார்டன்' வகுப்பிலிருந்து, சீனியர் கேம்பிரிட்ஜ் வகுப்பு வரை, இக்கட்டிடத்தில் நடைபெற்றன.[1]
மாணவிகளுக்கு பள்ளியிறுதி வகுப்புவரை கற்பிக்கபடுவதோடு, டிரினிடி கல்லூரி இசைத் தேர்வுக்கும் பயிற்சி பெறுகின்றனர். கோடை நாட்களில் இப்பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழா குறிப்பிடத்தக்கது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 203-268". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.