பிரதானி தாமோதரம் பிள்ளை
பிரதானி தாமோதரம் பிள்ளை இராமநாதபுரத்தின் தளவாயாகப் பணியாற்றியவர். ரெபெல் முத்துராமலிங்க சேதுபதி ( 1763 - 1772 ) இரண்டு மாதக் குழந்தையாக இருந்தபோது சேதுபதியின் பாதுகாப்பாளராக செல்லமுத்து என்பவரும் பிரதானி மற்றும் தளவாயாக தாமோதரம் பிள்ளையும் நியமிக்கப்பட்டனர். பாதுகாவலர் செல்லமுத்து மக்களின் வெறுப்பையும் தாமோதரன் பிள்ளை மக்களின் நன் மதிப்பையும் பெற்றனர். பாதுகாவலர் செல்ல முத்து, ஆட்சி செய்யும் சேதுபதியை அகற்றிவிட்டுத் தானே பட்டத்திற்கு வர முயன்றார். உடனே தாமோதரன் பிள்ளை சிவகங்கை பிரதானி தாண்டவராய பிள்ளையிடம் படை உதவி பெற்றுப் பாதுகாவலர் செல்லமுத்துவின் முயற்சியைத் தோற்கடித்து ராமநாதபுரத்தின் பெரும் பகுதிகளை மீட்டார்.[1] அதனால் கோபமடைந்த செல்லமுத்து ஆற்காடு நவாபின் ராணுவ உதவியை நாடினார். ஆற்காடு நவாப் சேதுபதியிடம் வரி வசூல் செய்யத் தனது படைகளை ராமநாதபுரத்திற்கு அனுப்பிவைத்தார். தாமோதரம் பிள்ளை நவாபின் படைகளைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
தாமோதரன் பிள்ளை ராமநாதபுரம் கோட்டைக்குள் பாதுகாப்பு அரணாக ஒர் உட்சுவரை எழுப்பினார். அவர் திருப்புல்லாணியில் ஒரு கோட்டையும் எழுப்பினார் அவர் 1767 ஜூன் மாதம் 24ந் தேதி டச்சுக் கிழக்கிந்தியக் கும்பெனியாருடன் வாணிகத் தொடர்பு மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தமாக ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். 1770ல் தஞ்சாவூர் அரசர் ராமநாதபுரம் சீமையைச் சேர்ந்த அனுமந்தக்குடி மாவட்டத்தின் மீது உரிமை கொண்டாடி ராமநாதபுரத்தின் மீது படையெடுத்தார் பிள்ளையின் தலைமையில் சேதுபதி படைகள் எதிராளிகளை எதிர்கொண்டு தோற்கடித்தனர். பிரதானி தாமோதரம் பிள்ளை காலத்தில் வலிமையையும் புதுப் பொலிவையையும் பெற்று மறவர் ஆதிக்கம் தழைத்தோங்கியது. தாமோதரம் பிள்ளை தனிப்பட்ட விரோதி ஒருவரின் சதிச் செயலால் கொலை செயயப்பட்டு இறந்தார்.[2] மறவர்கள் திறமை மிக்க ஒரு தளபதியையும் நிர்வாகியையும் இழந்தனர். [3]