தாண்டவராய பிள்ளை
வீரத்தளவாய் தாண்டவராய பிள்ளை (கிபி 1700 - தை-18,1773) சிவகங்கைச் சீமையின் பிரதானியாகவும், தளவாயாகவும் பணியாற்றியவர். கட்டபொம்மனுக்கு சுப்பிரமணிய பிள்ளை, முத்துராமலிங்க சேதுபதிக்கு தாமோதரன் பிள்ளை பிரதானிகளாக அமைந்தது போல, சிவகங்கைச் சீமையை ஆண்ட சசிவர்ணத் தேவர் (1730–1750), முத்துவடுகநாதத் தேவர் (1750-1772), ராணி வேலு நாச்சியார் (1772-73) ஆகியோருக்கு அமைந்தவர் தாண்டவராய பிள்ளை.
தோற்றம்
தொகுசிவகங்கை இராச்சியத்தில் திருக்கோட்டியூருக்கு அருகில் அரளிக்கோட்டை (முல்லையூர்) எனும் கிராமத்தில் காத்தவராய பிள்ளை என்பாருக்கு மகனாக இவர் 1700ம் ஆண்டில் பிறந்தார்.
பிரதானிப் பணி
தொகுமதுரை மன்னருக்கான போட்டியில் பங்காரு திருமலை நாயக்கரை எதிர்த்த ஆற்காட்டு நவாபு சந்தா சாகிபு, பங்காரு திருமலையையும் அவர்தம் மகன் விஜயகுமார் நாயக்கரையும் அம்மைய நாயக்கனூர் போரில் தோற்கடித்த பின்னர் நாயக்கர்களுக்கு சசிவர்ணத்தேவரின் வீரமும் தாண்டவராய பிள்ளையின் விவேகமும் பெரு துணையாக நின்று சிவகங்கை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சிக் கோட்டையில் இரு நாயக்கர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உதவிற்று[1].
மதுரைமீது படையெடுப்பு
தொகுசசிவர்ணர் 1750-இல் காலமானார். அவரது மகன் முத்துவடுகநாதத் தேவர் மன்னரானார். 1752-இல் ராமனாதபுரச் சேதுபதியும் முத்து வடுக நாதரும் விஜய குமார் திருமலை நாயக்கரை மதுரை மன்னாராக்கினர். மைசூர் தளபதி மாயனா, விஜயகுமாரை மன்னர் பதவியிலிருந்து விரட்டியடித்தார். ராம நாதபுரம் தளபதி வெள்ளையன் சேர்வைகாரரும் சிவகங்கை தளவாய் தாண்டவராய பிள்ளையும் மதுரை மீது படையெடுத்து மாயனாவைத் தோற்கடித்தனர்[2].
தாமரைப் பட்டயம் வழங்கல்
தொகுசிவகங்கை சமஸ்தானத்தை உருவாக்கி மன்னர் சசிவர்ணத் தேவரின் மனதில் நீங்காத நிறைவான இடத்தைப் பெற்றப் பிள்ளையைப் பாராட்டி மன்னரின் மகன் முத்துவடுகநாதத் தேவர் அவருக்கு ஒரு தாமரைப் பட்டயம் வழங்கி பிள்ளையைப் பெருமைப் படுத்தியுள்ளார்.
காளையார் கோவில் போர்
தொகு1772-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ஆம் நாள் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைத் தளபதி பான்ஜோர் தலைமையில் வந்த படைகளும் ஆற்காட்டு நவாபின் படைகளும் இணைந்து தொடுத்த காளையார் கோவில் போரில் பிள்ளை விடுத்த எச்சரிக்கையையும் மீறி மன்னர் முத்துவடுகநாதத் தேவர் பீரங்கி குண்டடிபட்டு வீர மரணமடைந்தார்[3].
ராணியும் பிள்ளையும்
தொகுமுத்து வடுக நாதர் தம் மனைவி ராணி வேலு நாச்சியார், இளவரசி வெள்ளச்சி நாச்சியார் மருது சகோதரர்கள் தளவாய் உதவியுடன் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாச்சிக்கு விரைந்தனர். சிவகங்கையில் நவாபின் ஆட்சி ஏற்பட்டது. ராணி வேலு நாச்சியாரை மீண்டும் சிவகங்கை அரியணையில் ஏற்ற பிள்ளை திண்டுக்கலிருந்த ஹைதர் அலியின் உதவியை நாடினார். படை உதவி கேட்ட ஆறு மாதங்களுக்குள் 1773-இல் பிள்ளை அவர்கள் காலமானார்[4].
தாண்டவராய பிள்ளையின் கோவில் திருப்பணிகள்
தொகுசைவப் பெருங்குடியாம் வேளாளர் குலத்தில் உதித்த இயற்கை இறை நேசர் தாண்டவராய பிள்ளை குன்றக்குடி முருகன் கோவிலைப் புதுப்பித்தார். அங்கு வையாபுரி தடாகம் நந்தவனம் வேத பாடசாலை அமைத்தார். திருப்புத்தூரில் வைரவ நாத சுவாமி கோயிலுக்கும் திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவிலுக்கும் ஏராளமான திருப்பணிகளைச் செய்தார். தாண்டவராய பிள்ளையின் சிறப்புகள் அருங்குணங்கள் அருட்கொடைகள் தெய்வத் திருப்பணிகள் ஆகியவற்றை மிதுலைப் பட்டி எனும் ஊரில் வாழ்ந்த குழந்தைக் கவிராயர் எனும் புலவர் இயற்றிய மான் விடு தூது எனும் நூல் சிறப்பாக விவரிக்கிறது. இந்நூலைத் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் பதிப்பித்து அதற்குச் சிறப்புரை எழுதியுள்ளார்.தளவாய் தாண்டவராய பிள்ளை சிலை சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ளது