பிரிக்கே கதிர் ஏற்பளவுமானி
பிரிக்கே கதிர் ஏற்பளவுமானி (Fricke dosimeter) கதிர்வீச்சின் ஏற்பளவைக் கணிக்கப் பயன்படும் கருவி. இது 1927 ஆம் ஆண்டு ஹுயுகொ பிரிக்கே எனும் அறிவியல் ஆய்வாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கதிர் மருத்துவம் புற்றுத் திசுக்கள் ஏற்று கொண்ட கதிர் ஏற்பளவினை அடிப்படையாகக் கொண்டது. நேரடியாக இது அளவிடப்பட முடியாது. வளியில் அயனியாக்கம் தான் கதிர் வீச்சின் அளவினை அளவிடப் பயன்படுகிறது. கதிர்வீச்சின் ஏற்பளவைக் காணும் பிறமுறைகளில் வேதியியல் முறையும் ஒன்று. பொருட்களிலுள்ள அணுக்களுக்கு இடையே உள்ள வேதிப் பிணைப்புகளைக் கதிர்வீச்சு தாக்க வல்லது. இதற்குக் காரணம் அயனியாக்கமும் கிளர்தலும் (Ionisation and excitation) தான். வேதியியல் பிணைப்புகள் மாறுவதால் அயனிகளை ஏற்று ஃபெரசு சல்பேட் கரைசலில், சிறிது ஃபெரிக் சல்பேட்டும் கிடைக்கிறது:
FeSO4→Fe2(SO4)3.
அவ்வாறு தோற்றுவிக்கப்படும் ஃபெரிக் அயனிகளின் எண்ணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட கதிர் ஏற்பளவினைப் பொறுத்திருக்கிறது. 100 எலக்ட்ரான் வோல்ட்டானது 15 ஃபெரிக் அயனிகளைத் தோற்றுவிக்கின்றது என்று கண்டு கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த ஃபெரிக் அயனிகளின் செறிவினை அளவிட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட கதிர் அளவினைத் தெரிந்து கொள்ளமுடியும். இந்த மாதிரியான வேதியியல் அளவுமானிகள் பிற திட்ட அளவுமானிகளுடன் ஒப்பிட்டுப் பின் பயன்படுத்தலாம். இது வளியில் அயனியாக்கும் முறையை ஒத்தது. இம்முறையே ஃபிரிக்கே அளவுமானி எனப்படுகிறது. ஹுயுகொ பிரிக்கே இதனை முதலில் பயன்படுத்தினார். பொதுவாக உயர் ஏற்பளவினை அளவிடவே இம்முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மிக தூயநிலையில் இருத்தல் அவசியம்.
ஆதாரங்கள்
தொகு- அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர் 2004