பிறவி (தமிழர் கோட்பாடு)

பிறவி என்பது இவ்வுலகில் உயிரினமாகப் பிறத்தலைக் குறிக்கும். பெரும்பாலான மதங்கள் [1] மறுபிறவி உண்டு எனக் கூறுகின்றன. பிறவி எனபது ஒருவகை நம்பிக்கை. பிறவி பற்றிப் பண்டைய தமிழர் என்ன கருதினர் என்பதை அவர்களது இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

சமயம் சாராக் கோட்பாடு

தொகு

திருக்குறள் சமயம் சாராத சமுதாயக்கோட்பாட்டு நூல். பிறந்திருக்கிறோம், பிறவாமை வேண்டும் என்று திருக்குறள் குறிப்பிடுகிறது. [2] நல்லது செய்தால் மேல்-உலகம் பெறலாம் என நம்பும் மக்கள் உண்டு. மேலுலகம் என்பது ஒரு வகையான பிறவாமைக் கோட்பாடு. இதனைத் திருக்குறள் மதிக்கவில்லை. [3] பிறந்த உயிருக்கு என்ன வேண்டும். புகழ் வேண்டும். [4] பிற தமிழ்ச் சான்றோர்களும் இதனையே வலியுறுத்தினர். [5]

தன் மக்கள் தனக்கு மாறாக இருந்தமை குறித்து வருந்தி வடக்கிருந்த கோப்பெருஞ்சோழன் பிறவி பற்றிய எல்லாக் கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறான். யானை வேட்டுவன் யானையையும் பெறுவான். குறும்பூழ்(காடை) என்னும் சிறிய பறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடும் வருவான். இது ஊழ்வினை. இதனைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தன் செயலுக்கு ஏற்ப மேலுலக வாழ்க்கையை அனுபவிக்கலாம். இல்லாவிட்டால் மீண்டும் இவ்வுலகத்தில் பிறக்காமல் இருக்கலாம். இந்த இரண்டைப் பற்றியும் நமக்குத் தெரியாது. தெரிந்தது இவ்வுலகில் நிற்கு புகழ் மட்டுமே. [6]

தெளிவு

தொகு
  • செய்வினைக்கு ஏற்ற பிறவி (மண்ணுலகிலோ, மேல் கீழ் உலகிலோ பிறத்தல்) - இது சமயக் கோட்பாடு
  • யாண்டும் பிறவாமல் இருத்தல் - அறிவுக் கோட்பாடு
  • புகழோ பழியோ பிறத்தல் - ஆசைக் கோட்பாடு

இந்த மூவகைக் கோட்பாடுகளும் தமிழ் மக்களின் உள்ளங்களில் ஊறிக் கிடந்தன. ஊறி வருகின்றன.

அடிக்குறிப்பு

தொகு
  1. சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், திவ்விய பிரபந்தம் முதலான நூல்களில் இக்கருத்து நிலவி வருகிறது
  2. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடி சேராதார் (திருக்குறள் 10)
  3. நல் ஆறு எனினும் கொளல் தீது; மேல்-உலகம்
    இல் எனினும் ஈதலே நன்று.
  4. ஈதல் இசை பட[தோன்றும்படி} வாழ்தல் அது அல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு
  5. புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் (புறநானூறு 182)
  6. யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
    குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே:
    அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு,
    செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்,
    தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
    தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்,
    மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
    மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக்
    கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு,
    தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே. (புறநானூறு 214)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறவி_(தமிழர்_கோட்பாடு)&oldid=3311615" இலிருந்து மீள்விக்கப்பட்டது