பிலு மோடி
பிலு மோடி (Piloo Mody, 14 நவம்பர், 1926 - 29 சனவரி 1983) இந்திய எழுவரல் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். இராஜாஜி உள்ளிட்டோருடன் சேர்ந்து சுதந்திரா கட்சியை நிறுவியவர். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் இருமுறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் உறுப்பினராக இருந்துள்ளார்.
பிறப்பு மற்றும் கல்வி
தொகுபிலு மோடி சோராசுதிர மதத்தைச் சேர்ந்த பார்சி குடும்பத்தில் பிறந்தவர், ஹிமாசலப் பிரசேத்தின் டேராடூன் நகரில் உள்ள டூன் பள்ளியில் கல்வி கற்றவர். பின்னர் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர்க்லி) கட்டிடக் கலையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.
எழுவரல்
தொகுபிலு மோடி இந்தியாவில் எழுவரப் பார்வை கொண்ட அரசியல்வாதிகளில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். எழுவரல் (ஆங்கில வழக்கில் லிபரல்) பார்வை என்பது பொருளாதார மற்றும் சமூக விசயங்கள் இரண்டிலும் தாராளமய பார்வை கொண்டிருப்பதாகும். சிறிய அளவிலான அரசு, தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, அரசின் செலவினங்களில் கட்டுப்பாடு, தனிமனித வாழ்க்கை முடிவுகளில் அரசு தலையிடாமல் இருத்தல் போன்றவை எழுவரல் அரசியலில் குறிப்பிடத்தக்க கோட்பாடுகள்.
அரசியல்
தொகுஆகஸ்டு 1959 இல் பிலு மோடி, இராஜாஜி, ஜி. ரங்கா ஆகியோர் முயற்சியில் சுதந்திரா கட்சி துவங்கப்பட்டது. 1960களில் மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்த இந்திய பேராயக் கட்சிக்கு மாற்றாக விளங்கிய கட்சிகளில் சுதந்திரா கட்சியும் ஒன்றாகும். பிலு மோடி குஜராத் மாநிலம் கோதராவிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு மற்றும் ஐந்தாவது மக்களவைகளில் உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னாளில் சுதந்திராக் கட்சி, பாரதிய க்ராந்தி தளத்தில் (பி.கே.டி) இணைந்தபோது, அக்கட்சியின் சார்பாக மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார். 1975-இல் இந்திரா காந்தி ஆட்சியில் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சுல்பி மை ஃபிரண்டு
தொகுபாகிஸ்தானின் பிரதமராக விளங்கிய சுல்ஃபிக்கார் அலி புட்டோ, பிலு மோடியின் நெருங்கிய நண்பராவார். இருவரும் பள்ளி மற்றும் கல்லூரித் தோழர்களாகயிருந்தனர். புட்டோ மறைந்த பின்னர், அவர் நினைவாக மோடி எழுதிய "சுல்பி மை ஃபிரண்டு" என்னும் புத்தகம் பிரபலமாக விளங்கியது.
குடும்பம்
தொகுபிலு மோடியின் மனைவி வீனா மோடி கல்வி வளர்ச்சி, கலைகள் உள்ளிட்ட துறைகளில் ஈடுபாடு உடையவராக அறியப்படுகிறார். பிலு மோடியின் சகோதரர் ருசி மோடி டாடா எஃகு நிறுவனத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.
நினைவு
தொகு1983-இல் மறைந்த பிலு மோடியின் பெயரில் ஒரு கட்டிடக்கலைக் கல்லூரியும், ஒரு பன்னாட்டு சதுரங்க விளையாட்டுப் போட்டியும் நடத்தப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.treasurehouseofagathiyar.net/20400/20436.htm[தொடர்பிழந்த இணைப்பு] எழுவரல் பெயர்க்காராணம் குறித்த உரையாடல்.