பீர்பால் சகானி

பீர்பால் சகானி (Birbal Sahni) என்பவர் 1891 ஆம் ஆண்டு நவம்பர் 14 முதல் 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஓர் இந்திய தொல்தாவரவியலாளர் ஆவார். இலண்டன் ராயல் அறிவியல் கழகத்தின் உறுப்பினர் என்ற மதிப்பும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது [1].

பீர்பால் சகானியின் மார்பளவு சிலை

இந்திய துணைக் கண்டத்தின் புதைபடிவங்களைப் பற்றி இவர் ஆய்வு செய்தார். புவியியல் மற்றும் தொல்லியல் துறைகளிலும் சகானி ஆர்வம் காட்டினார். தற்பொழுது லக்னோவிலுள்ள தொல்தாவர பீர்பால் சகானி நிறுவனத்தை 1946 ஆம் ஆண்டு சகானி நிறுவினார். இந்தியாவின் புதைபடிவ தாவரங்கள் பற்றிய ஆய்வு மற்றும் தாவரங்களின் பரிணாம வளர்ச்சியில் ஆய்வு ஆகியன சகானியின் முக்கிய பங்களிப்புகள் ஆகும் [2][3][4]. இந்திய விஞ்ஞானக் கல்வியின் உருவாக்கத்திலும் சகானி ஈடுபட்டார். இந்தியாவின் தேசிய அறிவியல் அகாடமியின் தலைவராக இருந்தார். சுவீடன் நாட்டின் சிடாக்கோம் நகரிலுள்ள சர்வதேச தாவரவியல் காங்கிரசின் கெளரவ அதிபராகவும் சகானி பணியாற்றினார்.

பிறப்பு

தொகு

பீர்பால் சகானி 1891 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 அன்று மேற்கு பஞ்சாபின் சாகாப்பூர் மாவட்டத்திலுள்ள பேரா நகரத்தில் பிறந்தார். லாகூரில் வாழ்ந்து வந்த லாலா ருச்சி ராம் சகானிக்கும் ஈசுவர் தேவிக்கும் மூன்றாவது மகனாக இவர் பிறந்தார். தேரா இசுமாயில் கான் என்ற நகரத்திலிருந்து வந்த இந்த குடும்பத்தினர் கேவ்ரா உப்புச் சுரங்கத்திற்கு அருகிலிருந்த பேரா நகரத்திற்கு அடிக்கடி வருகை தந்தனர். பீர்பால் சகானிக்கு புவியியல் ஆர்வம் இளம் வயதிலேயே தொடங்கியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தேரா இசுமாயில் கான் நகரில் வங்கித் தொழிலில் ஈடுபட்டுவந்த தாத்தாவும் பீர்பால் சகானிக்கு அறிவியல் ஆர்வத்தை ஊட்டினார். சகானியின் தாத்தா அந்நகரில் வேதியியல் துறையில் தன்னார்வ ஆராய்ச்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் [1].

தந்தை ருச்சி ராம் லாகூர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகவும், பெண்களுக்கு விடுதலை அளிப்பதில் அக்கறை கொண்ட ஒரு சமூக ஆர்வலராகவும் இருந்தார். மான்செசுடரில் கல்வி கற்ற இவர் எர்னசுட்டு ரூதர்போர்டு மற்றும் நீல்சு போர் ஆகியோருடன் பணிபுரிந்தார். தன்னுடைய ஐந்து மகன்களையும் கல்வி கற்க இங்கிலாந்திற்கு இவர் அனுப்பினார். சாலியன்வாலாபாக் படுகொலை மற்றும் பிரம்ம சமாச் இயக்கம் ஆகியவற்றுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் ருச்சி ராம் ஈடுபட்ட்டார். பிராட்லாக் அரங்கத்திற்கு அருகாமையில் இவர்களுடைய வீடு இருந்த காரணத்தால் அரசியல் செயல்பாடுகளின் மையமாக அது இருந்தது. கோபால கிருட்டிண கோகலே, சரோசனி நாயுடு, மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட தலைவர்கள் இவருடைய இல்லத்திற்கு வருகை தந்திருக்கின்றனர் [5][6].

படிப்பு

தொகு

இந்தியாவின் லாகூரிலுள்ள அரசு கல்லூரி பல்கலைக்கழகத்திலும், பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் சகானி தன்னுடைய ஆரம்பகால உயர் கல்வியைக் கற்றார். இந்திய பிரயோபைட்டியலின் தந்தையாகக் கருதப்படும் சிவ் ராம் காசியப்பிடம் சகானி தாவரவியலைக் கற்றார். மேலும் இவர் 1914 ஆம் ஆண்டு கேம்பிரிட்ச்சு இமானுவேல் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் 1919 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஆல்பர்ட்டு சார்லசு சீவார்டின் வழிகாட்டுதலில் அறிவியல் முனைவராக பட்டம் பெற்றார் [7][8].

வாழ்க்கைப் பணி

தொகு

சகானி இங்கிலாந்தில் இருந்த காலத்தில் பேராசிரியர் சீவார்டுடன் இணைந்து கோண்டுவான இராச்சியத்தில் இருந்த தாவரங்கள் பற்றிய விரிவான திருத்தத்திற்காக ஆய்வு செய்தார். 1919 ஆம் ஆண்டில் அவர் மியூனிச்சில் செருமனிய தாவர அமைப்பியல் விஞ்ஞானியான காரல் ரிட்டர் வோன் கோய்பெல்லுடன் இணைந்து பணியாற்றினார். பஞ்சாப் கல்வி நிலையங்களின் ஆய்வாளராக பணியாற்றிய சுந்தர் தாசு சூரியின் மகள் சாவித்திரி சூரியை 1920 ஆம் ஆண்டு சகானி திருமணம் செய்து கொண்டார். சகானியின் பணிகளில் ஆர்வம் கொண்டவராகவும் ஒரு நிலையான தோழியாகவும் சாவித்திரி இருந்தார் [1]. இந்தியாவிற்குத் திரும்பிய சகானி வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தாவரவியல் பேராசிரியராக சுமார் ஒரு வருட காலம் பணியாற்றியுள்ளார். 1921 ஆம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியமர்த்தப்பட்ட சகானி கடையில் இறக்கும் வரை அங்கேயே பணிபுரிந்தார்[9]. இவருடைய ஆய்வுகளை கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகம் அங்கீகரித்து 1929 ஆம் ஆண்டு இவருக்கு அறிவியல் முனைவர் பட்டத்தை வழங்கியது. வில்லியம்சோனியா சீவார்டி என்று சகானி பெயரிட்ட டிரையாசிக் காலத்தைச் சேர்ந்த பென்னெட்டிடேலியன் தாவரம் இந்தியத் தொல்லுயிர் தாவரங்களின் பட்டியலில் 1932 ஆம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்பட்டது. பாடஞ்செய்யப்பட்ட புதிய வகை மரமான ஓமாக்சைலோன், சுராசிக் காலந்தொட்டு இருந்த விதையுறைத் தாவரத்துடன் ஒத்திருப்பதையும் சேர்த்துக் கொண்டது [1]. அடுத்த வந்த ஆண்டுகளில் அவர் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார் என்பதோடு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தாவரவியலுக்கு அர்ப்பணித்த மாணவர்களின் குழுவைச் சேகரித்து, பல்கலைக்கழகத்திற்கு புகழைச் சேர்த்தார். அது விரைவில் இந்தியாவில் தாவரவியல் மற்றும் தொல்தாவரவியல் ஆய்வுகளுக்கான முதல் மையமாக அமைந்தது. சகானி உலகம் முழுவதும் இருந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார், அமெரிக்க தொல்தாவரவியல் அறிஞரான செசுடர் ஏ ஆர்னோல்ட்டின் நட்பைப் பெற்று ஒரு நண்பராக இருந்தார், அவர் பின்னர் 1958-1959 ஆம் ஆண்டு நிறுவனத்தில் சகானியுடன் இல்லத்தில் இருந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சகானி நிறுவிய தொல் தாவரவியல் சங்கம் 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி தொல்தாவரவியல் நிறுவனத்தை தொடங்கியது. தொடக்கத்தில் லக்னோ பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையில் இந்நிறுவனம் செயல்பட்டது. பின்னர் 1949 ஆம் ஆண்டு தற்போதைய இருப்பிடமான 53 பல்கலைக்கழக சாலை லக்னோவிற்கு இடம்பெயர்ந்தது. இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த சவகர்லால் நேரு இந்நிறுவனத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் ஒரு வாரம் கழித்து, ஏப்ரல் 10, 1949 இல் சகானி மாரடைப்புக்கு ஆளாகி இறந்தார் [10].

இதர ஆர்வங்கள்

தொகு

சகானி இசையில் ஆர்வமாக இருந்தார், சித்தாரையும் வயலினையும் அவர் நன்றாக இசைத்தார். களிமண் உருவ மாதிரிகள் செயவதில் ஆர்வங் கொண்டவராகவும் சதுரங்கம் டென்னிசு போன்ற விளையாட்டுகளை விளையாடக்கூடியவராகவும் இருந்தார். ஆக்சுபோர்டில் இருந்தபோது இந்தியக் கவுன்சிலுக்காக இவர் டென்னிசு விளையாடினார். நிலவியல், தொல்பொருள் துறை, நாணயவியல் உள்ளிட்ட பல துறைகளிலும் இவருக்கு ஆர்வம் இருந்தது. 1936 ஆம் ஆண்டில் அரியானா மாநிலத்திலுள்ள கோக்ர கோட் என்ற தொல்லியல் தளத்தில் இருந்து எடுத்த சில நாணயங்களையும் அச்சுகளையும் ஆய்வு செய்த இவர் நாணயங்களை வார்த்து உருக்கொடுப்பதற்கு சாத்தியமான வழிமுறைகளைப் பற்றி எழுதினார். தேசிய அருங்காட்சியகம் தில்லியில் இவர் சேகரித்த நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன [11]. அவர் தனது மருமகன்களாலும், மருமகள்களாலும் மிகவும் விரும்பப்பட்டார். அவர்கள் இவரை தாமசீவாலா மாமா என்று அன்போடு அழைத்தனர். கிப்பி என்று பெயரிடப்பட்ட ஒரு குரங்கு கை கைப்பாவையால் சகானி அவர்களை மகிழ்வித்தார் [12].

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Hugh Hamshaw Thomas (1950). "Birbal Sahni. 1891-1949". Obituary Notices of Fellows of the Royal Society 7 (19): 264. doi:10.1098/rsbm.1950.0017. 
  2. R. Cuneo, S. Archangelsky (1986). "Ferugliocladaceae, a new conifer family from the Permian of Gondwana". Review of Palaeobotany and Palynology 51 (1–3): 3–30. doi:10.1016/0034-6667(87)90016-9. http://www.springerlink.com/content/wg8102531u8x5155/. பார்த்த நாள்: 14 February 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. Rothwell, Gar W (1982). "New interpretations of the earliest conifers". Review of Palaeobotany and Palynology 37 (1–2): 7–28. doi:10.1016/0034-6667(82)90035-5. http://www.sciencedirect.com/science/article/pii/0034666782900355. பார்த்த நாள்: 14 February 2012. 
  4. A. Doyle, James; J. Donoghue, Michael (1986). "Seed plant phylogeny and the origin of angiosperms: An experimental cladistic approach". The Botanical Review 52 (4): 321–431. doi:10.1007/bf02861082. http://www.springerlink.com/content/wg8102531u8x5155/. பார்த்த நாள்: 14 February 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Gupta (1978): pp. 3-8
  6. Khanna, Sunita Khanna (2004). "The Man That Was". Newsletter, Birbal Sahni Institute of Paleobotany 7: 7. http://www.bsip.res.in/pdf/newsletter-2004.pdf. பார்த்த நாள்: 2018-04-26. 
  7. Gupta (1978): pp.12-13
  8. Sitholey, R.V. (1950). "(Sahni Memorial Volume) Paleobotany in India - VII. Professor Birbal Sahni 1891-1949". The Journal of the Indian Botanical Society. 29 (1): https://archive.org/stream/in.ernet.dli.2015.25379/2015.25379.The-Journal-Of-The-Indian-Botanical-Society-Vol-xxix-1950#page/n9/mode/1up. 
  9. Gupta (1978):20.
  10. Gupta (1978):1-3.
  11. Gupta (1978):27-29.
  12. Gupta (1978):10-11, 13-16.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீர்பால்_சகானி&oldid=4053255" இலிருந்து மீள்விக்கப்பட்டது