புதர்க்காடு

புதர்க்காடுகள், புதர்வெளிகள், பற்றைகள் (English: Shrubland) என்பவை புதர்ச் செடிகள் நிறைந்த காட்டுப் பகுதிகளைக் குறிக்கும். இக் காடுகளில் புற்கள், செடிகள், வேர்த் தண்டுச் செடிகள் நிறைந்தும் காணப்படும். இவ் வகைக் காடுகள் இயற்கையாக தோன்றக் கூடியவை. சில சமயம் மனித நடமாட்டங்களின் விளைவுகளாலும் இவ் வகைக் காடுகள் உருவாகக் கூடும். தொடர்ச்சியாக புதர்கள் மண்டிக் கிடக்கும் காட்டுப் பகுதிகளாக இவை காணப்படுவது உண்டு[1]. சில சமயங்கள் காட்டுத் தீ போன்றவைகளால் பெருங்காடுகள் அழிந்து புதர்க்காடுகளாக உருமாறிவிடுவதும் உண்டு. புதர்க்காட்டுப் பகுதிகளில் மனிதக் குடியிருப்புக்களை உருவாக்குவது ஆபத்தானது. ஏனெனில் காட்டுத் தீ பரவும் அபாயம் அங்கு எப்போதும் உண்டு. [2]

ஹவாய் தீவில் காணப்படும் ஒரு புதர்க்காடு.

வகைகள்தொகு

புதர்க்காடுகளில் வளரக்கூடிய தாவரங்களின் உயிர்த்தன்மையைப் பொறுத்து, அவை பல வகைகளாக பிரிக்கப்படுகின்றன. உலக வனவிலங்கு நிதியம் புதர்க்காடுகளை கீழ்கண்ட வகைகளில் பிரிக்கின்றது[3].

பாலைவனப் புதர்க்காடுகள்

பாலைவனச் செடிகள் அதிகம் காணப்பட்டால், மணற்பாங்கான நிலப்பரப்பையும், வறட்சியான சூழலையும் கொண்டிருந்தால் அவற்றை பாலைவனப் புதர்க்காடுகள் என அழைப்பர். இவ் வகைப் புதர்க்காடுகளில் கள்ளிச் செடிகள், முள் செடிகள் அதிகம் காணப்படும்.

மத்தியதரை புதர்க்காடுகள்

மத்தியதரைக் காடுகள், மரக்காடுகள் போன்றவைகளில் இவ் வகைப் புதர்க்காடுகள் காணப்படுகின்றன. உலகின் ஐந்து மத்தியதரை வகை காலநிலைப் பகுதிகளிலும் இவ் வகைப் புதர்க்காடுகள் அமைந்துள்ளன. பெரும்பாலும் கடற்கரைச் சார்ந்த உப்பளப் பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.

நாட்டுப்புற புதர்க்காடுகள்

வண்டல் பகுதிகளில் இவ்வகைப் புதர்க்காடுகள் அதிகம் காணக்கிடைக்கின்றன. போர்த்துக்கல் நாட்டின் மத்தாஸ் பகுதியில் இவ்வகைப் புதர்க்காடுகளைக் காணலாம். புளோரிடா புதர்வெளிகளும் இவ் வகையினிலேயே அடங்கும்.

குட்டைப் புதர்க்காடுகள்

குட்டைப் புதர்ச்செடிகள், படரும் கொடிப் புதர்ச் செடிகள் அதிகம் தென்படும் பகுதிகளை குட்டைப் புதர்க்காடுகள் என்பர். மத்தியதரை வகை காலநிலைப் பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.

குறிப்புகள்தொகு

  1. சென்னகோத்தபள்ளியின் புதர்க்காடு
  2. Merriam-Webster's Collegiate Dictionary, 11th Edition (2003).
  3. "Deserts and Xeric Shrubland Ecoregions". 2017-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-28 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதர்க்காடு&oldid=3659427" இருந்து மீள்விக்கப்பட்டது