புதுவை அருங்காட்சியகம்


மிகப்பெரிய முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்! மிகப்பெரிய சுமையையும் காலத்தையும் வலியையும் எடுத்துக்கொள்ளுகின்ற வேலைகளை நாம் அப்படித்தானே சொல்வோம்! ஆம், என்றால் அப்பொழுது புதுவை அருங்காட்சியகம் என்பது மிகப்பெரிய முயற்சிதான்.


புதுவை அருங்காட்சியகம்:-

புதுவை அருங்காட்சியகம் 24 பிரிவுகளுடன் பன்னாட்டுத் தரத்தினில் உருவாகப்போகும் அருங்காட்சியகம். ஒட்டுமொத்த புலம்பெயர் புதுச்சேரி - இந்திய மக்களுக்கான நினைவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த முயற்சி ஆகும்.

தற்பொழுது சில பிரிவுகளுடன் செயல்பட்டுவரும் இந்த அருங்காட்சியகம் தேசிய மரபு அறக்கட்டளை (NATIONAL HERITAGE TRUST) என்ற பதிவு பெற்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டு தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.

பலதுறை சார்ந்த அறிவுச் செய்திகள் இந்த அருங்காட்சியகத்தில் கிடைக்கப் பெறுகின்றன.எதிர்காலங்களில் புதுச்சேரி மற்றும் இந்திய மக்களுக்கான மிகச்சிறந்த அறிவுத் தளமாக புதுவை அருங்காட்சியகம் அமையும்.

புதுவை அருங்காட்சியகம் - MUSÉE DU POUDOUVAÏE - PUDHUVAI MUSEUM

புதுவை அருங்காட்சியகத் திறப்பு நிகழ்வில் நீதியரசருடன் அருங்காட்சியக நிறுவனர்
பாரதிதாசன் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்களுடன் புதுவை அருங்காட்சியக நிறுவனர்

புதுவை அருங்காட்சியகம் என்பது “இந்தோ பிரஞ்சு அருங்காட்சியகம் (Indo - French Museum) ” மற்றும் “மூத்தோர் நினைவு அருங்காட்சியகம் (Pioneer Memorial Museum) ”  ஆகிய இரண்டு அருங்காட்சியகத் திட்டங்களின் கூட்டு முயற்சிகளுக்கான பெரிய திட்டப்பெயராகும். [1]

புதுச்சேரியின் நகரப்பகுதியில் அரசு சார்பில் இடம் கிடைக்காமல் இருப்பதன் காரணமாக மிக எளிய சிறிய நிலை வாடகைக் கட்டடத்தில் தற்பொழுது இயங்கி வருகின்றது புதுவை அருங்காட்சியகம்.

புதுவை அருங்காட்சியகம் - PUDHUVAI MUSEUM என்பது புதுச்சேரியில் இயங்கிவருகின்ற அரசுசாரா அருங்காட்சியகம் ( NON - GOVERNMENT MUSEUM) ஆகும்.

புதுச்சேரியின் புதலியல் பூங்காவின் (BOTANICAL GARDEN) அருகமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் புதுச்சேரியின் அலங்கத்துக்குட்பட்ட (BOULEVARD) நகரப்பகுதியில் எண் - 70, வ.உ.சி வீதியில் இயங்கி வருகின்றது.

2018 -ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 8 -ஆம் நாள் இந்த அருங்காட்சியகம் நீதியரசர் செவாலியே முனைவர் தாவீது அன்னுசாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

தேசிய மரபு அறக்கட்டளையின்(NATIONAL HERITAGE TRUST) உதவியுடன் இயங்கி வருகின்ற இந்த அருங்காட்சியகத்திற்கு நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தந்து பயன்பெறுகின்றனர்.

பல பிரிவுகளை உள்ளடக்கி தேசிய அளவில் உருவாகிவருகின்ற புதுவை அருங்காட்சியகம் தொடக்க நிலையில் பல பன்னாட்டுக் கண்காட்சிகளையும் நடத்தியுள்ளது.பல பெரிய அறிஞர்கள் ,தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலரால் பாராட்டப்பட்டுவரும் இந்த அருங்காட்சியகம் எதிர்காலத்தில் ஒரு தேசிய அருங்காட்சியக நிலையினை அடைந்திட உழைத்துவருகின்றது.

ஒரு கனவு - பெரும் உழைப்பு - அருஞ்செயல்

புதுச்சேரியில் இருந்து உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழுகின்ற மக்களின் வரலாற்றினை உள்ளுணர்வுடன் எண்ணியக் கனவுடன் 2012 - ஆம் ஆண்டு முதலாக கடுமையாக உழைத்துவருகின்ற புதுவை அருங்காட்சியக முயற்சி எதிர்காலத்தில் ஒரு பன்னாட்டுப் பார்வைக்குள்ளாகும் என்பதில் வியப்பில்லை என்றாலும் இதற்கான கனவு - உழைப்பு - செயல் ஆகியவை இங்கு குறிப்பிடப்படவேண்டியது.

அருங்காட்சியக உருவாக்கக் களிப்பில் நீதியரசர்


புதுவை அருங்காட்சியகத்தில் தற்பொழுதுள்ள பிரிவுகள்


நைன் சிங் இராவத் படமப் பிரிவு - NAIN SINGH RAWAT CARTOGRAPHY SECTION

ஆயிரக்கணக்கான படமங்களைச்(MAPS) சேர்த்து வைத்திருக்கும் இக்காட்சியகம் நைன் சிங் இராவத் என்ற இந்தியப் படம அறிஞரின் பெயரில் அழைக்கப்படுகின்றது.

தற்பொழுது தெரிவு செய்யப்பட்டுள்ள நூறு படமங்களை மட்டும் காட்சிப்படுத்தியுள்ளது இப்பிரிவு. நூற்றாண்டைக் கடந்த படமங்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இக்காட்சியகத்தில் பிரான்சு தேச படமங்கள்(MAPS OF FRANCE), பிரஞ்சு மொழிப் படமங்கள்(FRENCH MAPS), அரசியல் படமங்கள்(POLITICAL MAPS), இயற்பியல் படமங்கள்(PHYSICAL MAPS,) இடக்கிடப்பியல் படமங்கள்(TOPOGRAPHIC MAPS), காலநிலைப் படமங்கள் (CLIMATIC MAPS), பொருளியல் அல்லது வளமைப் படமங்கள் (ECONOMIC OR RESOURCE MAPS), புள்ளிவிளத்தப் படமங்கள் (STATISTICAL MAP), இருப்புப் பாதைப் படமங்கள் (RAILWAY MAPS), சாலைப் படமங்கள் (ROAD MAPS) மற்றும் பல சிறப்புப் படமங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பெயர்ப்பலகை

வான் மீன் காசகப் (நாணயவியல்) பிரிவு - van MEEN NUMISMATICS SECTION

காசகப் (நாணயவியல்) பிரிவில் 10,000 க்கும் மேற்பட்ட நாணயங்கள் உள்ளன.பல நாடுகளின் நாணயங்கள் பணத்தாள்கள் அந்நாடுகளின் குறிப்புகளுடன் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.பழங்காசுகள் பலவும் இப்பிரிவில்  உள்ள இப்பிரிவில் காசுகள் பற்றிய ஏராளமான அறிவு நிலைச் செய்திகளும் காட்சியகத்தில் காக்கப்படுகின்றன


கப்ரியேல் (இ)ழுவோ துய்ப்ரேய் அஞ்சல் பிரிவு - GABRIEL JOUVEAU DUBREUIL PHILATELY SECTION

வரலாற்றுத் தளமான அரிக்கமேட்டின் அகழ்வாய்வுக்கு முதன்மைக் காரணமாக விளங்கிய இழுவோ துய்ப்ரேய் அறிஞர் அவர்களின் பெயரில் அஞ்சல் பிரிவு இயங்குகின்றது. இவர் புதுச்சேரியின் வரலாற்றை உலகிற்கு உணர்த்தியவர்.

இவரது பெயரில் உள்ள அஞ்சல் பிரிவில்  10,000 - இற்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகள் உள்ளன. மேலும் அஞ்சல் அட்டைகள், அஞ்சல் கடிதங்கள் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் அஞ்சல் தலைகள் ஆகியவை உள்ளன.இழுவோ துய்ப்ரேய் அவர்களின் 75 - ஆம்‌ நினைவு ஆண்டில் அவர்‌ உருவம் பொதிந்த அஞ்சல் தலை புதுவை அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டது.


அபே துய்புவா ஒளிப்படமகம் - ABBÉ DUBOIS PHOTO SECTION

இந்திய மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் ஆகியவற்றை ஒளிப்படம் மூலம் காட்சிப்படுத்திடுகின்றது இப்பிரிவு. அபே துய்புவா எனும் அறிஞர் ,மக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் ஆவணப்படுத்திய முயற்சியாளர் இவரது பெயரிலேயே புதுவை அருங்காட்சியக ஒளிப்பட பிரிவு இயங்குகின்றது. இப்பிரிவில் 1000 - க்கும் மேற்பட்ட கருப்பு வெள்ளை ஒளிப்படங்கள் , எதிர்மங்கள் ஆகியவை இருக்கின்றன.


காந்தி 150 நினைவுப் பிரிவு - GANDHI 150 MEMORIAL SECTION

தேசிய மரபு அறக்கட்டளை முன்னெடுத்த காந்தியின் 150 - ஆவது பிறந்த நாள் நூற்றாண்டை மிகவும் செப்பமாக புதுவை, மதுரை, கன்னியாக்குமரி ஆகிய மூன்று ஊர்களில் 15 கண்காட்சிகளுடன் நடத்தியது புதுவை அருங்காட்சியகம்.

காந்தியின் தொகுப்பு ஆவணக்குறுவட்டு ஒன்றினையும் புதுச்சேரியில் வெளியிட்டுச் சிறப்பித்தது.காந்தியின் சிறு அகவைப் ஒளிப்படங்கள் தொடங்கி அவரது வாழ்நாள் இறுதிச்செலவு வரை அவர் பயன்படுத்திய பொருட்களின் படங்கள், காந்தியின் இறுதி நேர செய்திகள் ஆகியவை காத்து வருகின்றது இப்பிரிவு.

புதுவை அருங்காட்சியகத்தின் பயன்

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவூட்டுகின்ற வகையில் பலநிகழ்வுகளை, இந்த மிகச்சிறிய இடத்தில் இருந்து, பல அருங்காட்சியகப் பிரிவுகளுக்கான செய்திகளையும் கொண்டு, இயங்கிவருகிறது.

ISO தரச்சான்றிதழ் பெற்றுள்ள புதுவை அருங்காட்சியகம், பன்னாட்டு அருங்காட்சியகக் கழகத்தினரால் செக் நாட்டின் பிராக் நகரத்தில் நடத்தப்பெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கிலும் கலந்து கொண்டது. சிறந்த தலைப்புகளிலும் பன்னாட்டு கண்காட்சிகளையும் உள்நாட்டுக் கண்காட்சிகளையும் முன்னெடுத்து சிறப்புடன் செயற்பட்டு வருகின்ற புதுவை அருங்காட்சியகம் இந்தியா மற்றும் பன்னாட்டு மக்களாலும் பாராட்டப்பெற்றுவருகின்றது. மேலும் இந்திய ஆட்சிப்பணியாளர்களாலும், உலக அறிஞர்களாலும் புதுவை அருங்காட்சியகம் வாழ்த்துகள் பெற்று இயங்கி வருகிறது.

புதுவை அருங்காட்சியகத்திற்கு நீங்களும் உதவலாம்!

புதுவை அருங்காட்சியகத்தின் வளர்ச்சிக்குத் தாங்களும் கொடையளித்து உதவலாம். புதுவை அருங்காட்சியகம் என்பது மிகப்பெரிய வரலாற்றினை முன்னெடுத்து செயற்படுகின்ற நிறுவனமாகும். இதன் செயற்பாடுகள் யாவும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் ஆய்வாளர்கள் ஆகிய அறிவுக்குமுகத்துக்கான ஆக்கப்பணிகள் ஆகும். மிகப் பெரிய பொருளிடர்ப்பாட்டு சூழலிலும் துணிவாக நடையிட்டுவரும் புதுவை அருங்காட்சியகத்திற்கு மனமாரத் துணை செய்யுங்கள், வரலாற்றைக் காத்து நில்லுங்கள்!

புதுவை அருங்காட்சியகத்தில் செவாலியே முனைவர் சோ.முருகேசன்

தொடர்புக்கு

PUDHUVAI MUSEUM,

70 - V.O.C STREET,

PONDICHERRY - 605001,

INDIA.

pudhuvaimuseum@gmail.com





புதுவை அருங்காட்சியக ஆராய்ச்சி நூலகம்

PUDHUVAI MUSEUM RESEARCH LIBRARY


புதுவை அருங்காட்சியக ஆராய்ச்சி நூலகம் 2023 - ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13 - ஆம் நாள் நீதியரசர் தாவீது அன்னுசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்திய அளவில் தனிச்சிறப்புடைய நூலகமாக உருவாகி வருகின்ற இந்த நூலகம் ஆராய்ச்சி நூலகம் என்பதற்கான தனி நெறிமுறைகளைக் கொண்டது.

புதுவை அருங்காட்சியகத்தின் முதன்மைத் துணை நிறுவனமாக புதுவை அருங்காட்சியக ஆராய்ச்சி நூலகம் இயங்கிவருகிறது. புதுவை அருங்காட்சியகத்தின் அடிப்படையான ஆய்வுச் செயல்பாடுகளுக்கும் புதுவை அருங்காட்சியகத்தால் நடத்தப்பெறும் தேசிய மற்றும் பன்னாட்டு கண்காட்சிகளுக்கான மேற்கோள் ஆய்வுகளுக்காகவும் உலகெங்கும் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆய்வு மாணவர்களுக்காகவும் நூலகப்பாதையில் மிகச்சிறப்புடன் இயங்கி வருகின்றது புதுவை அருங்காட்சியக ஆராய்ச்சி நூலகம்.

இந்தியாவின் நூலகத் தந்தை என்றழைக்கப்படும் Dr. S. R. Ranganathan அவர்களால் 1928 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு,  இயங்கி வருகின்ற சென்னை நூலகக் கழகத்திலும் (Madras Library Association), A. C. Woolner என்றழைக்கப்படும் Alfred cooper woolner என்கின்ற ஆங்கிலேயரால் 1933 - ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்திய நூலகக் கழகத்திலும் Indian library Association உறுப்பாண்மை நூலகமாக “புதுவை அருங்காட்சியக ஆராய்ச்சி நூலகம் ” திகழ்கிறது.

பல ஆயிரக்கணக்கான சிறந்த நூல்களையும் படமங்களையும்(Maps) படம நூல்களையும் (Atlas) ஒளிப்படங்களையும் (Photographs) கொண்டு செயல்பட்டு வருகின்ற பு.அ.ஆ.நூ (PMRL) உலகச் சிறந்த நூலகமாக வெகுவிரைவில் திகழும் திட்டப்பணியில் தொடர்ந்து நடையிடுகிறது.

பல துறை சார்ந்த பன்மொழி நூல்களைக் கொண்ட இந்த நூலகம் சிறந்த அறிவுநிலைக் கண்காட்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது.புதுவை அருங்காட்சியகத்தின் கண்காட்சி முயற்சிகளுக்கும் ஆய்வுக் களமாக விளங்கும் இந்த நூலகம் ஆய்வாளர்களின் தேடலுக்கு வலு சேர்க்கும் பொருட்டு சிறப்பான முறையில் நூல்கள் பகுக்கப்பட்டு இரண்டு ஆராய்ச்சி நூலகக் களஞ்சியங்களாக(REPOSITORY) அமைக்கப்பெற்றுள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் நூலகத்துக்குத் தங்களது ஆய்வுத் தேவையைக் குறித்த வேண்டுகையை அடிப்படையாகக் கொண்டு அதற்கான தரவுகள் அளிக்கப்பெறும் . ஆய்வு விளக்கங்களுக்கும் தரவுகளுக்கும் கட்டணங்கள் உண்டு.

மொழிகளில் இந்தியா மற்றும் அயலக மொழிகள் தொடர்பாகவும் வரலாறு, கலை, இலக்கியம், அருங்காட்சியகம் , தொல்லியல் ,ஓவியம், சிற்பம், ஆகிய துறைகளில் பழமை நோக்கிய தேடலுடன் கூடிய ஆய்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்கப்பெறுகிறது.

புதுவை அருங்காட்சியக ஆராய்ச்சி நூலகம் அரசுசாராத நிலையில் மிக விரிவடைந்த அறிவுப் பயன் கருதி அமைக்கப்பெற்று வளர்ந்து வரும் சிறப்பு நிறுவனம் ஆகையால் அறிவு ஈடுபாட்டாளர்கள் புரவலர்கள் தங்களால் இயன்ற பொருட்கொடைகளை எவ்விதத் தயக்கமும் இன்றி வழங்கலாம்.


நிக்கோலசு தெ பெர் படமகம் - NICOLAS DE FER MAP LIBRARY

பல நூற்றுக்கணக்கான புதிய படமங்களையும் பழமையான அரிய பல நூற்றுக்கணக்கான படமங்களையும் வரிசைப்படுத்தி தொகுத்து வைக்கப்பட்டுள்ள இப்படமகம், நிக்கோலசு தெ பெர் என்ற பிரான்சு தேச படம அறிஞரின் பெயரில் அழைக்கப்படுகின்றது. முதன்முதலில் புதுச்சேரியின் நகரப் படமத்தினை உருவாக்கிய முதல் பிரஞ்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவாலியே சோ. முருகேசன் சிறப்பு நூலகப் பிரிவு  - CHEVALIER S.MOUROUGESAIN SPECIAL LIBRARY

அட்லசு(ATLAS) எனப்படுகின்ற படமப்புத்தகங்களை நூற்றுக்கணக்கான அளவில் தொகுத்து வைத்திருக்கின்ற இச்சிறப்பு நூலகப்பிரிவு புதுவை அருங்காட்சியகம் உருவாக வேண்டும் என்ற பெரிய விருப்பமுடைய புதுச்சேரியின் புகழ் மிக்க கல்வியாளரும் அறிஞருமான செவாலியே முனைவர் சோ. முருகேசன் என்பவரின் பெயரில் இயங்குகின்றது.


ஆனந்தரங்கர் ஆவணகம் - ANANDHA RANGAR ARCHIVE

சென்னை பெரம்பூரில் பிறந்த இவர் புதுவைக்கு ஆற்றியத் தொண்டு உலகப் புகழ் பெற்ற மிகப்பெரிய ஆவணமான ஆனந்தரங்கரின் நாட்குறிப்பேடுகளை புதுச்சேரிக்கும் இந்தியாவுக்கும் அளித்துள்ளார். இந்த ஆவணப்பிரிவில் இருநூறாண்டுகள் முந்தைய புத்தகங்கள் தொகுப்பு மற்றும் 100 ஆண்டுகளைக் கடந்த மேலும் பல அரிய ஆவண புத்தகங்கள் இப்பிரிவில் உள்ளது.


(இ)லூயி சவேனியன் துய்புய் பொது நூலகப் பிரிவு - LOUIS SAVINIEN DUPUIS GENERAL LIBRARY SECTION

புதுச்சேரிக்கு வருகைத் தந்த பல பாதிரிமார்களில் இலூயிசு சவேனியன் துய்புய் குறிப்பிடத்தக்கவர் ஏனெனில் இவர் புதுச்சேரியில் பெண்களுக்கான கல்வி கூடத்தினை முதன்முதலில் திறந்து பெண்களின் கல்விக்கு வித்திட்டவர்.இவரின் பெயரில் 20,000 - க்கும் மேற்பட்ட  பல்துறை சார்ந்த நூல்கள் இப்பிரிவில் உள்ளது.


ஞானு தியாகு ஆய்வு நூலகப் பிரிவு - GNANOU DIAGOU RESEARCH LIBRARY SECTION

புதுச்சேரியின் மிகச்சிறந்த  வழக்கறிஞராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தவர் ஞானு தியாகு அவர்கள்.

திருக்குறள், நாலடியார் ஆகியவற்றை பிரஞ்சு மொழியில் மொழிப்பெயர்த்த முதல் தமிழர் இவரே.புதுவை அருங்காட்சியக ஆராய்ச்சி நூலகத்தில் இவரின் பெயரில் புதுச்சேரி ஆய்வு நூலகப் பிரிவு உள்ளது. இப்பிரிவில் பல ஆய்வு நூல்கள் உள்ளன.


காந்தி 150 நினைவு நூலகப் பிரிவு - GANDHI 150 MEMORIAL LIBRARY SECTION

புதுவை அருங்காட்சியகம் காந்தி 150 நினைவுப் பிரிவிலிருந்து நூலகப் பிரிவை பு.அ.ஆ.நூலகத்தில் இணைத்துத் தொடங்கியுள்ளது. காந்தி தன்வரலாறு பல மொழிகளிலும் , காந்தியடிகளைப் பற்றி பல அறிஞர்கள் எழுதிய நூல்கள், காந்தி தலைவர்களுக்கு  எழுதியக் கடிதப்படிகள், காந்திய ஆய்வு நூல்கள் ஆகியவை இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு

PUDHUVAI MUSEUM RESEARCH LIBRARY,

13 - GANDHI STREET,

COLAS NAGAR,

PONDICHERRY - 605001,

INDIA.

pmresearchlibrary@gmail.com

  1. https://pudhuvai.in/. {{cite web}}: External link in |website= (help); Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுவை_அருங்காட்சியகம்&oldid=4091938" இலிருந்து மீள்விக்கப்பட்டது