புனிதக் கட்டிடக்கலை
புனிதக் கட்டிடக்கலை (Sacred architecture) என்பது, கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் போன்ற வணக்கத் தலங்களையோ அல்லது புனிதமானவை எனக் கருதப்படும் பிற செயற்பாடுகளுக்கான இடவசதிகளையோ வடிவமைத்து உருவாக்கும் சமயக் கட்டிடக்கலை ஆகும். பல பண்பாடுகள் புனிதக் கட்டிடக்கலையை உருவாக்குவதற்காக குறிப்பிடத்தக்க அளவிலான வளங்களைச் செலவு செய்கின்றன. மனித குலத்தால் அமைக்கப்பட்ட மிகவும் கவர்ச்சியானவையும், நிரந்தரமானவையுமான கட்டிடங்களுள் புனிதக் கட்டிடக்கலையைச் சார்ந்த கட்டிடங்களும் அடங்குகின்றன. அதேவேளை, புனிதக் கட்டிடக்கலை இறைவனுடன் நெருக்கமாவதற்கான இடமாகவும், குறுகிய இருப்புக்காலம் கொண்டவையாகவும், தனிப்பட்ட, பொதுப் பயன்பாட்டுகளுக்கு அல்லாதவையாகவும்கூட அமையக்கூடும்.
புனிதக் கட்டிடங்கள் பல நூற்றாண்டுகளுக்கூடாக வளர்ந்து வருபவை. தற்கால வானளாவிகள் உலகின் மிகப் பெரிய, உயரமான கட்டிடங்களாக அவை காணப்பட்டன. பிறவகைக் கட்டிடக்கலைகளின் போக்குகள் சில வேளைகளில் புனிதக் கட்டிடக்கலையில் வெளிப்பட்டாலும், பெரும்பாலும், புனிதக் கட்டிடக்கலைப் பாணிகள், சமகாலப் பிறவகைக் கட்டிடக்கலையில் இருந்து வேறுபட்டுத் தனித்துவமானவையாகக் காணப்பட்டன. ஆபிரகாமிய ஒருகடவுட் கொள்கைகளின் எழுச்சியுடன், புனிதக் கட்டிடங்கள் கூடுதலாக வணக்கத் தலங்களாகவும், வழிபாட்டுக்கும், தியானத்துக்கும் உரிய இடங்களாகவும் ஆகின.
மேலை நாட்டுப் புலமைத்துவத் துறையான "கட்டிடக்கலை வரலாறு" புனிதக் கட்டிடக்கலையின் வரலாற்றை மிகப் பழைய காலத்திலிருந்து பரோக் காலம் வரையாவது நெருக்கமாக ஆராய்கின்றது. புனித வடிவவியல், படிமவியல், சிக்கலான குறியியல் சார்ந்த குறியீடுகள், அலங்காரக் கூறுகள் என்பன புனிதக் கட்டிடக்கலைக்கு உரியவையாகக் காணப்படுகின்றன.
புனிதக் கட்டிடக்கலையின் ஆன்மீக அம்சங்கள்
தொகுபுனிதக் கட்டிடக்கலை சில சமயங்களில் "புனித வெளி" (sacred space) என அழைக்கப்படுகின்றது. கட்டிடக் கலைஞர் நார்மன் எல். கூன்சு என்பவர், புனிதக் கட்டிடக்கலையின் நோக்கம், பொருளுக்கும், மனம், தசை, ஆன்மா ஆகியவற்றுக்கும் இடைப்பட்ட எல்லைகளைத் தடையற்றவை ஆக்குவதே என்கிறார். புனிதக் கட்டிடக்கலை பற்றி விளக்கும்போது, சீர்திருத்தச் சபையைச் சேர்ந்த குருவானவரான ராபர்ட் சூலர் (Robert Schuller), உளநலத்துடன் இருப்பதற்கு மனிதர்கள் தம்மை வடிவமைத்த இயற்கைப் பின்னணியை, அதாவது தோட்டத்தை அநுபவிக்கவேண்டும் என்கிறார். அதேவேளை, ரிச்சார்ட் கியெக்பெர் ( Richard Kieckhefer) என்பவர், புனிதக் கட்டிடங்களுக்குள் நுழைவது ஆன்மீக உறவுக்குள் நுழைவதற்கான உருவகம் என்கிறார். இவர் புனித வெளிகளை, ஆன்மீக வழிமுறைகளின்மீது தாக்கங்களைக் கொண்டிருக்கும் மூன்று காரணிகளால் பகுப்பாய்வு செய்யலாம் எனக் கூறுகிறார்.
பழங்காலக் கட்டிடக்கலை
தொகுபுனிதக் கட்டிடக்கலை, புதிய கற்காலக் கட்டிடக்கலை, பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை, சுமேரியக் கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு பழங்காலக் கட்டிடக்கலைப் பாணிகளைத் தழுவி அமைகின்றது. பழங்காலச் சமயம் சார்ந்த கட்டிடங்கள் குறிப்பாகக் கோயில்கள் இறைவனின் இருப்பிடமாகக் கருதப்பட்டதுடன், பல்வேறு சடங்குகள், பலியிடுதல்களுக்கான இடமாகவும் பயன்பட்டன. பழங்காலச் சமாதிகளும், ஈம அமைப்புக்களும்கூடப் பல்வேறு பண்பாடுகளின் மத நம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்ற எடுத்துக்காட்டுகளாக உள்ளன. எகிப்தில் தேப்சில் உள்ள கர்னக் கோயில், 1300 ஆண்டுகளூடாக வளர்ச்சிபெற்றதுடன், அதன் எண்ணற்ற கோயில்கள் உலகின் மிகப்பெரிய சமயக் கட்டிடத் தொகுதியின் பகுதிகளாக அமைகின்றன. பண்டை எகிப்தின் சமயக் கட்டிடக்கலை, தொல்லியலாளர்களைக் கவர்வதுடன், பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களின் கற்பனைத் திறனை பொதிந்து வைத்திருப்பதாகவும் உள்ளது.
செந்நெறிக் கட்டிடக்கலை
தொகுஒலிம்பியாவில் இருந்த ஏரா கோயில் (Temple of Hera) மரத் தூண்கள் கற்றூண்களாக மாற்றப்பட்ட மாறுநிலைக் காலத்தைப் பிரதிபலிக்கின்றது.[2] இந்த நடைமுறை சில பிற கோவில் கட்டிடங்களிலும் இடம்பெற்றதால் அக்காலத்துக் கட்டிடங்கள் சில இன்றும் தப்பியுள்ளன. கிரேக்கக் கட்டிடக்கலை உரோமர் காலத்துக்கு முந்தியது. உரோமக் கட்டிடக்கலை பெருமளவுக்குக் கிரேக்கக் கட்டிடக்கலையின் படியாகவே காணப்படுகின்றது. அதிக அளவில் எஞ்சியிருப்பவை கோயில் கட்டிடங்களாகவே இருப்பதால், செந்நெறிக் கட்டிடக்கலை பற்றிய கருத்தாக்கம் பெருமளவுக்குச் சமயக் கட்டிடக்கலையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Great Mosque of Kairouan (Qantara Mediterranean Heritage) பரணிடப்பட்டது 2015-02-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Fletcher, Banister, History of Architecture, Twentieth edition (editor: Dan Kruickshank), CBS Publishers and Distributors, New Delhi, 1999, p. 134.